இலங்கை

காமினி திஸாநாயக்கவின் ஜனன தினத்தில் ரணில் – சஜித் சந்திப்பு!

இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் ஜனனதின நிகழ்வையொட்டி, நாட்டின் இரு பிரதான அரசியல் தலைவர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் தோன்றவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே பொது மேடையில் அமரவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு கட்சிகளினதும் முக்கிய தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள் இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளுமைமிக்க தலைவராகக் கருதப்பட்ட காமினி திஸாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் இந்த ஜனனதின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பானது வெறும் நிகழ்வாக மட்டும் பார்க்கப்படாமல், இரு கட்சிகளுக்கும் இடையிலான இணைப்பு முயற்சிகளின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தனித்தனியாகப் போட்டியிட்டதால் வாக்குகள் பிளவுபட்டு, பின்னடைவைச் சந்தித்தன. இதனால், ‘பிளவுபட்டால் தோல்வி, இணைந்தால் வெற்றி’ என்ற யதார்த்தத்தை இரு தரப்பு உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இரு கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலுவான ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்கவும், வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் ஒருமித்த கூட்டணியாகக் களம் இறங்கவும் இரு தரப்பும் கொள்கை ரீதியாக இணக்கம் கண்டு வருவதாகத் தெரிகிறது.

இணைவதற்கு இரு தரப்பும் விருப்பம் காட்டினாலும், தலைமைத்துவப் போட்டி மற்றும் எதிர்காலப் பதவிகள் குறித்த இழுபறிகளால் அதிகாரப்பூர்வ இணைப்பு இன்னும் தாமதமாகி வருகின்றது. இவ்வாறான நிலையில், காமினி திஸாநாயக்க போன்ற ஒரு சிரேஷ்ட தலைவரின் ஜனனதின நிகழ்வு, இரு தலைவர்களையும் நெருங்கி வரச் செய்யும் ஒரு முக்கிய பாலமாக அமைய வாய்ப்புள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *