உலகம்

பெண்கள் பாடசாலை மீது அமெரிக்கா இரட்டை ஏவுகணைத் தாக்குதல் ; ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது, அமெரிக்கா திட்டமிட்டு இரட்டைத் தாக்குதல் (Double-Tap) உத்தியைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 168 சிறுமிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் இது ஒரு “மன்னிக்க முடியாத போர்க்குற்றம்” என்றும் சாடியுள்ளார்.

முதலாவது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் தப்பிப்பிழைக்க முயன்ற தருணத்தில், மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டாவது ஏவுகணை வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, முதல் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாடசாலையின் பிரார்த்தனை மண்டபத்தில் தஞ்சம் புகுந்திருந்த 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதே இந்த இரண்டாவது ‘டோமாஹாக்’ (Tomahawk) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்பதற்கான காணொளி மற்றும் செய்மதி ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும், தற்பொழுது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அமெரிக்காவின் ஏவுகணையே அந்தப் பகுதியைத் தாக்கியதை உறுதிப்படுத்துவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ள இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Double-Tap என்பது ஒரு போர் உத்தியாகும். ஒரு இலக்கின் மீது முதல் தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இடத்திற்கு உதவிக்காக வரும் மீட்புப் பணியாளர்கள், மனிதாபிமான உதவி வழங்குபவர்கள் அல்லது முதல் தாக்குதலில் தப்பித்து ஓடுபவர்களைக் குறிவைத்து, மிகக் குறுகிய நேர இடைவெளியில் அதே இடத்தின் மீது இரண்டாவது தாக்குதலை நடத்துவதே இந்த உத்தியாகும்.

இது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதையும், மீட்புப் பணிகளை முடக்குவதையும் நோக்கமாகக் கொண்டது என்பதால், சர்வதேச சட்டங்களின்படி இது ஒரு “போர்க்குற்றமாக” கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *