பாலைதீவு அந்தோனியார் திருவிழாவுக்குச் சென்ற போது குருநகர்க் கடலில் படகு விபத்து இருவர் உயிரிழப்பு! 14 பேர் மீட்பு!

யாழ்ப்பாணம் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் தவக்கால வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டுப் பக்தர்களை ஏற்றிச் சென்ற றோலர் படகு புறப்பட்டுச் சில நிமிடங்களில் குருநகர்க் கடலில் வெள்ளிக்கிழமை (06) திடீர் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்ததுடன் நீரில் மூழ்கிய மேலும் 14 பேர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் தவக்காலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந் நிலையில் திருவிழாவுக்காக குருநகர் இறங்குதுறையிலிருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற றோலர் படகு புறப்பட்டுச் சில நிமிடங்களில் குருநகர்க் கடல் பகுதியில் காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
இந்தச் சம்பவத்தில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த எம்.ஜோசப் (வயது-80), பிரான்ஸிஸ் ஸ்டீபன் (வயது-57) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களது சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
விபத்துக் காரணமாகக் கடலில் மூழ்கிய 13 வயதுச் சிறுவன், 4 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் என மொத்தம் 14 பேர் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் மூலம் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டிகள் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களில் இரு பெண்களும், ஆணொருவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் படகில் 18 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில் காணாமல் போன ஏனையவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![]()