இலங்கை

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஷிரந்தியிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எங்கே ?

யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று ஆராய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் சிறிதரன் எம்.பி சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் விதவைகள் வாழ்வதாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உறவுகளை தேடும் போராட்டமும்,பயணமும் இன்றளவிலும் முடிவடையவில்லை.

வலிந்து காணாமல் போனோர் இன்றும் தமது உறவுகளுக்காக வீதிகளில் போராடுகிறார்கள். பல தமிழ் பெண்கள் நெற்றியில் குங்குமத்துடனும், கழுத்தில் தாலியுடனும் தனது கணவனுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பதிலை சொல்ல போகிறது.

உலக நடப்புகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது பற்றி இன்று சபையில் பலர் பேசுகிறார்கள்.இதே நிலைமை தான் அன்று வடக்கு மற்றும் கிழக்கில் நடந்தது. செஞ்சோலை பகுதியில் பல பெண் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். விமானம் ஊடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்தார்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு நேர்ந்தது என்னவென்பது இன்றளவிலும் மறைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி குடும்பத்தாருடன் இராணுவத்தில் சரணடைந்தார்.அதேபோல் வனவளத்துறை பிரிவின் அதிகாரி சக்தி, பாலா, ராஜா உட்பட பலர் வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இராணுவத்தில் சரணமடைந்தார்கள். இவர்கள் இன்றும் திரும்பவில்லை.

யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.

இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *