இலங்கை

ஒரே குடையின் கீழ் தமிழ்க் கட்சிகள்- தீர்வுக்குப் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் சட்டத்தரணிகள் பேரவை!

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும்.

வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்.”என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கருத்தைப் பகிர்கையில்,

“இது ஒரு வெற்றியென்பதை தாண்டி ஒரு தொடக்கம் மாத்திரமே. இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அதன் நுணுக்கமான விவரங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.” என்றார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இக்கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் சாசனம் ஊடாகத் தீர்வு காண்பதற்கான தொடர்ச்சியான நகர்வாக இது அமைவதோடு தமிழ்க் கட்சிகள் யாவும் ஒரே சட்டக் குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பது ஒரு பாரிய வெற்றி.” என்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறுகையில்,

“இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்ட செயற்றிட்டங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையே மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.” என்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இனிவரும் காலங்களில் தமிழ் கட்சிகளை இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்பட்ட நிலையை மாற்றி மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரே குரலில் சொல்ல வேண்டிய காலம் கனிந்துள்ளது. இக்கூட்டு முயற்சி தற்போதைய அரசுக்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லும்.” என்றார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, சட்டத்தரணி வ.ச.நிரைஞ்சன், சட்டத்தரணி ஞா.ரனித்தா மற்றும் சட்டத்தரணி ம.யூட் தினேஷ் உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்தச் சந்திப்பானது நீண்டகாலமாகத் தனித்தனியாகப் பயணித்த தமிழ் அரசியல் சக்திகளை ஒரு பொதுவான இலக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படியாக அமைகின்றது. தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் நடுநிலையான வழிகாட்டலில் எட்டப்பட்டுள்ள இந்த ஆரம்பகட்ட இணக்கப்பாடானது வரும் காலங்களில் ஒரு பலமான அரசியல் அழுத்தக் குழுவாக உருவெடுக்க வழிவகுக்கும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விபரமான ஆவணங்களைத் தயாரித்து அடுத்தகட்டச் சந்திப்புகளில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *