அமெரிக்காவும் இஸ்ரேலும் 153 நகரங்களில் 1,039 தாக்குதல்!; 787 ஈரானியர்கள் உயிரிழப்பு

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் 176 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 504 இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், 153 நகரங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஐ எட்டியுள்ளது.
இதேவேளை, மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களை தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் அமெரிக்க இராணுவ தளம் இலக்கு
இதேவேளை ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியுள்ளன. மேலும், கட்டாரில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளத்தையும் இலக்கு வைத்துள்ளன.
மத்திய கிழக்கின் முன்னணி எண்ணெய் வர்த்தக மையமாகக் கருதப்படும் புஜைரா எண்ணெய் மண்டலத்தில், இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் விழுந்ததால் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காயங்கள் ஏதுமின்றி பணிகள் வழக்கம் போல் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கட்டாரிலுள்ள மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளமான அல்-உடைத் (Al-Udeid) விமான தளத்தையும் ஈரான் இலக்கு வைத்துள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா போராளிகளை ஒழிப்பதற்காக புதிய நிலைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் தரைவழி ஊடுருவலை மேற்கொண்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு: ஈரான் மீதான போருக்கு ஆதரவு அளிக்கத் தவறியதன் மூலம், அமெரிக்கா-பிரிட்டன் இடையிலான ‘சிறப்பு உறவை’ (Special Relationship) ஆபத்தில் ஆழ்த்திவிட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் மீது டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
![]()