உலகம்

வரலாறு காணாத தாக்குதலைத் தொடங்கப் போகின்றோம்; ஈரான் கடும் எச்சரிக்கை 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி உயிரிழந்தார். இதற்கிடையே கமேனி மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. வரலாறு காணாத தாக்குதலைத் தொடங்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் புரட்சிகர இராணுவப் படைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குவித்து வந்தது. இதனால் எப்போது வேண்டும் என்றாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தும் என்றே சொல்லப்பட்டது.

அதன்படி நேற்று சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கமேனி அலுவலகம் உட்பட முக்கிய இடங்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மிக மோசமான தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து ஈரான் அரசு ஊடகங்களும் இதை உறுதி செய்தன.

இதற்கிடையே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மரணத்தைத் தொடர்ந்து, ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மிக விரைவிலேயே இந்த தாக்குதலைத் தொடங்கப் போவதாகவும் அதற்குத் தயாராகி வருவதாகவும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஈரான் அரசு ஊடகங்கள் இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டன. கமேனியை மிகச் சிறந்த தலைவர் எனப் புகழ்ந்த ஐஆர்ஜிசி, அவரது ஆன்மீகத் தூய்மை, அசைக்க முடியாத நம்பிக்கை, தலைமைத்துவத் துணிச்சல், திமிர்பிடித்தவர்களுக்கு எதிரான வீரம் ஆகியவை மிகச் சிறந்தது எனக் கூறியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் கமேனி மட்டுமின்றி பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். அதன்படி ஈரானின் ராணுவப் படையான ஐஆர்ஜிசி தளபதியும் கொல்லப்பட்டார். இதற்கிடையில், ஐஆர்ஜிசியின் புதிய தலைமைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *