இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்திடம் விடுவிக்கக் கேட்டது 10,821 ஏக்கர் காணி; அவர்கள் சம்மதித்தது 1,088 ஏக்கர் காணி!

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் பொது வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் சுட்டிக்காட்டிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது. வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விவரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது.

மேலும் இங்கு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் முரளிதரன்,

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மேலும், கடந்த ‘டித்வா’ பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிளிநொச்சியிலுள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *