சிறீதரனுக்கு எப்படி முன்வரிசை ஆசனம்?; மூக்கை நுழைத்த அர்ச்சுனா பதிலடி கொடுத்த சாணக்கியன்

தமிழரசுக்கட்சியின் எம்.பி.யான சிறீதரன் பாராளுமன்றக் குழுத் தலைவராக இல்லாத நிலையில் அவருக்கு எவ்வாறு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட முடியுமென கேள்வி எழுப்பி தமிழரசுக்கட்சியின் விடயத்திற்குள் விபரம் தெரியாது மூக்கை நுழைத்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.க்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சாணக்கியன் தக்க பதிலடி கொடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்த சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன்,
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கட்சியொன்றின் தலைவருக்கு அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கு கேள்வியெழுப்ப முடியும். இப்போது இவர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் இப்போது கேள்வியெழுப்பினார்.
ஆனால் முன்வரிசை ஆசனங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவுக்கும் மற்றும் குறித்த கட்சி தலைவர்களுக்கே வழங்கப்படும். இந்நிலையில் சிறீதரன் எம்.பிக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அவரை விடவும் சிரேஷ்ட எம்.பிக்கள் உள்ளனர் இதற்கு பதில் வழங்குங்கள் என்று சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இலங்கை தமிழரசுக் கட்சியில் சிறீதரன் சிரேஷ்ட உறுப்பினராக இருக்கின்றார்.சபாநாயகரின் அபிலாசைக்கு அமைவாகவே அவருக்கு முன்வரிசையில் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரான இரா சாணக்கியன் எம்.பி , அர்ச்சுனா எம்.பி எமது கட்சியின் ஆசனங்கள் தொடர்பில் கூறினார். அந்த விடயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். எமது கட்சிக்கு முன்வரிசையில் இரண்டு ஆசனங்கள் உள்ளன. ஒன்றில் சிறீதரன் எம்.பி இருக்கின்றார். மற்றைய ஆசனத்தில் நான் இருக்கின்றேன். இதனை வேறு யாரும் பிரச்சினையாக்கிக்கொள்ளத் தேவையில்லை. கட்சிக்குரிய ஆசனத்தை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். சிறீதரனுக்கு முன்வரிசை ஆசனம் இருப்பது தொடர்பில் அர்ச்சுனா கவலைப்படத் தேவையில்லை. அது எமது கட்சியின் விவகாரமே. இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் பேச வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
![]()