உலகம்

”பெண்கள் ஒன்றும் இறக்குமதி செய்யும் பொருட்கள் அல்ல”: இலங்கை கண்டனம் செய்ய மறந்ததா அல்லது தவிர்த்ததா?

சியோல்: கிராமப்புற மக்கள் தொகை சரிவை ஈடுகட்ட, இலங்கை மற்றும்
வியட்நாமிலிருந்து பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என்று
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தென் கொரிய அதிகாரி,
ஆளுங்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்தச்
சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

தென் கொரியாவின் தென் ஜியோல்லா (South Jeolla) மாகாணத்தில் உள்ள
ஜிண்டோ (Jindo) மாவட்டத்தின் தலைவராக இருந்தவர் கிம் ஹீ-சூ (Kim
Hee-soo). இவர் கடந்த பிப்ரவரி 4-ம் திகதி, ஹேனம் கலாச்சார
மையத்தில் (Haenam Cultural Arts Center) நடைபெற்ற
குவாங்ஜு-ஜியோனம் பிராந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில்
கலந்துகொண்டார்.

அப்போது கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைப் பற்றிப்
பேசிய அவர், “மக்கள் தொகை வீழ்ச்சியைத் தடுக்க, நாம் இலங்கை
மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை
‘இறக்குமதி’ (Import) செய்து, நம் ஊர் கிராமப்புற இளைஞர்களுக்குத்
திருமணம் செய்து வைக்க வேண்டும்,” என்று கூறினார்.

பெண்களை ஒரு நுகர்பொருள் போல “இறக்குமதி” செய்ய வேண்டும் என்று
அவர் பேசியது, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கட்சியின் அதிரடி நடவடிக்கை

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான
ஜனநாயகக் கட்சி (Democratic Party of Korea – DP) இன்று (9.02)
அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைமை
செய்தித் தொடர்பாளர் பார்க் சூ-ஹியூன் (Park Soo-hyun),
“கட்சியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட
கிம் ஹீ-சூ மீது அவசர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பெண்கள் குறித்து அவர் பேசிய இழிவான
கருத்துக்களுக்காக, அவர் கட்சியிலிருந்து ஒருமனதாக
நீக்கப்பட்டுள்ளார்,” என்று அறிவித்தார்.

சர்வதேச எதிர்ப்பு மற்றும் இலங்கையின் மௌனம்

கிம் ஹீ-சூவின் பேச்சுக்குத் தென் கொரியாவில் உள்ள வியட்நாம்
தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிப்ரவரி 6-ம் திகதி
வியட்நாம் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இது பெண்களை
இழிவுபடுத்தும் செயல் என்றும், ஆழமான காயத்தை ஏற்படுத்திய
பேச்சு,” என்றும் குறிப்பிட்டு எதிர்ப்பு கடிதம் அனுப்பியது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் இலங்கை குறித்தும் இழிவாகப்
பேசப்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் அல்லது தென்
கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் சார்பில் இதுவரை எவ்வித
அதிகாரப்பூர்வமான கண்டனமோ அல்லது பதிலோ வெளியிடப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தன் தவறை உணர்ந்த கிம் ஹீ-சூ, “கிராமப்புறங்களில்
நிலவும் கடுமையான மக்கள் தொகை சரிவை சுட்டிக்காட்டவே அப்படி
பேசினேன். இருப்பினும், ‘இறக்குமதி’ என்ற வார்த்தையைத் தவறாகப்
பயன்படுத்திவிட்டேன்,” என்று கூறி மன்னிப்பு கோரினார். ஆனால்,
அவருடைய விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று கூறி கட்சித் தலைமை
அவரைக் கட்டம் கட்டியது.

கடும் விமர்சனம்
ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் மூன் ஜியோங்-போக்
(Moon Jeong-bok) இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில்,
“மனிதர்கள் ஒன்றும் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் அல்ல. அந்த
அதிகாரியின் பேச்சு பாலின உணர்திறன் அற்றது மட்டுமல்ல, அது
பெண்களை வெறும் ஜடப்பொருளாக நடத்தும் மனப்போக்கை
வெளிப்படுத்துகிறது,” என்று கடுமையாகச் சாடினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *