இலங்கை

மக்களின் நிலைப்பாட்டை அரசு இரகசியமாக ஆராய்ந்ததா?; அரசின் வாக்கு வங்கி 25 வீதத்திலும் குறைவு!

அரசாங்கம் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக அண்மையில் மக்களிடையே இரகசிய ஆய்வொன்றை செய்துள்ளது. அதன் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கான தற்போதைய வாக்கு வங்கி 25 வீதத்தை விடவும் குறைவாகவே உள்ளமை தெரியவந்துள்ளது. இதனாலேயே மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,

டித்வா சூறாவளியால் மாகாண சபைகள் தேர்தலை ஒத்திவைப்பதற்கு நேரிடும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நகைச்சுவை கிடையாது. இலங்கை வரலாற்றில் முதலாவது மாகாண சபைகள் தேர்தலானது வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாதிகள் இரந்த காலத்திலேயே நடத்தப்பட்டது. வடக்கில் விடுதலைப் புலிகளும் தெற்கில் ஜே.வி.பியும் இருந்த காலத்திலேயே 1988இல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்பட்டது. வடக்கில் யுத்தம் நடந்த போதும் அதனை காரணம் காட்டி ஒருபோதும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமையில் டித்வா சூறாவளியால் மாகாண சபைகள் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது என்பது நகைச்சுவையான கருத்தே.

உரிய காலத்தில் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாது கடந்த 8 வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் அடுத்த மாதத்தில் இந்த தேர்தலை நடத்தலாம். மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் சிறிய திருத்தங்களை செய்து பழைய முறையில் விரைவாக தேர்தலை நடத்த முடியும். அவர்களுக்கு இது புரியாமல் இல்லை. உண்மையில் தேர்தலுக்கு பயப்படுகின்றனர். அதற்கு காரணமாக டித்வா சூறாவளியை சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் தற்போது நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக செய்த இரகசிய ஆய்வுகளின் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி அரசாங்கத்திற்கான தற்போதைய வாக்குகள் 25 வீதத்தை விடவும் குறைவாகவே உள்ளது. அதாவது 24.7 வீதமாகவே வாக்கு நிலவரம் உள்ளது. இதனாலேயே அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை பொய் காரணங்களை கூறி ஒத்திவைக்க முயற்சிக்கின்றது. இந்த நிலைமையில் தேர்தல் நடந்தால் அரசாங்கத்திற்கு எந்தவொரு சபையையும் வெற்றிபெற முடியாது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் 43 வீத வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. இந்த தேர்தலின் பின்னர் அரசாங்கம் பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. இந்த நேரத்தில் டித்வா சூறாவளியும் நடந்துள்ளது. இதனால் அரசாங்கத்தின் வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்துள்ளது. நான் கூறுவது பொய்யென்றால் எதிர்வரும் மாதங்களில் தேர்தலை நடத்திக்காட்டுங்கள் என்று அரசாங்கத்தை கேட்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *