அவசரகாலச் சட்டம் எவரையும் தாக்காது; அடக்குமுறை வராது – அமைச்சர் விஜித ஹேரத்

அவசரகாலச் சட்டம் தொடர்பில் எவரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இந்த சட்டம் எந்த வகையிலும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்காக பயன்படுத்தியதில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்கின்றோம் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவரும் எதிர்பார்க்காத நேரத்திலேயே அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சியே அவசரகால சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தது. இதனை இப்போது அவர்கள் மறந்துவிட்டனர். இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் இணங்கியே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சட்டங்கள் இவ்வாறான அனர்த்த நிலைமைகளின் போது போதுமானது அல்ல. என்பதனாலேயே அவசரகால சட்டம் அமுலானது. அனர்த்த முகாமைத்துவ சட்டம் உயிரற்ற சட்டம் என்றும், இதனை திருத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கூறிய நிலையில் அந்த சட்டத்தை திருத்த தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அவசரகால சட்டம் உதவித் தொகைகளை வழங்குவதற்காக அமுல்படுத்தப்படவில்லை. முப்படையினர், பொலிஸார், அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவை என்பதனால் அவர்களை அழைப்பதற்காகவே இதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படியே அனர்த்த அத்தியாவசிய சேவை ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அனர்த்த நிலைமைகளின் பின்னர் வீதிகள் உடைந்துள்ளதால் திருத்தப்பணிகளுக்கு வாகனங்களை அனுப்பவோ, சுத்தப்படுத்த வாகங்களை அனுப்பவோ முடியாமல் இருந்தன. உள்ளூராட்சி சட்டத்தின் கீழ் இவற்றை செய்ய முடியாது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை முறையான இடங்களில் குடியேற்ற வேண்டும். அதற்காக இந்த சட்டம் அவசியமாகும்.
இதனால் அவசரகால சட்டம் தொடர்பில் அவசியமற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இதுவரையில் அவசரகால சட்டத்தை மக்களை அடக்குவதற்காக எந்த வகையிலும் பயன்படுத்தியதில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு பயன்படுத்த மாட்டோம். இதற்கு உறுதியளிக்கின்றோம். தற்போது வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆனால் நாங்கள் அந்த சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இதனை ஊடக ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தியதில்லை. ஒடுக்குமுறைகளுக்கு இதனை பயன்படுத்துவோம் என்று பொய்களை பரப்புகின்றனர். ஆனால் நாங்கள் அதனை இவ்வாறான விடயங்களுக்கு பயன்படுத்துவதில்லை. எவ்வாறாயினும் நாங்கள் தற்போதுள்ள மக்களை அடக்கக்கூடிய சட்டங்களை திருத்தவே எதிர்பார்க்கின்றோம். மக்கள் கருத்துக்களை அறிந்து மிகவும் ஜனநாயக ரீதியில் சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கின்றோம்.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம். இதன்படி நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இது தொடர்பான விமர்சனங்கள், கருத்தை அறிந்து மக்களுக்கு ஏற்றவாறு மாற்றுவோம். எமக்கு மேலும் ஜனநாயக ரீதியிலான சட்ட திட்டங்களை கொண்டுவந்து நாட்டை பொருளாதார ரீதியில் முன்னால் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()