இலங்கை

விசாரணைக்கு உள்ளானவர்களே நீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள்; தமிழ், முஸ்லிம் கட்சிகள் விமர்சிப்பதில்லை

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தான் இன்று நீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது முஸ்லிம் காங்கிரஸோ நீதிமன்றத்தை விமர்சிப்பதில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைஇடம் பெற்ற கடை,அலுவலக ஊழியர் ( ஊழியத்தையும், வேதனத்தையும்,ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் பேசுகையில்,

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்துடன் முரண்பட்ட காரணத்துக்காக அன்றைய பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பாராளுமன்றத்தால் முறையற்ற வகையில் நீக்கப்பட்டார். இவ்வாறான பின்னணியில் தற்போது நீதிச்சேவை ஆணைக்குழு பற்றி ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சியினர் கோருகிறார்கள்.இது தவறு

இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை இவர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனால் தான் இவர்கள் பல குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள்

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, தாஜூதின், ஏனைய படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் பற்றி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன . கடந்த 20 ஆண்டுகாலமாக பல்வேறு அரசாங்கங்களில் அதிகாரத்தில் இருந்தவர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. நீதித்துறை சுதந்திரம் பற்றி நாமல் ராஜபக்ச பேசுகிறார் . இவர்களது ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை எவ்வாறு பதவி நீக்கினார்கள் என்பதை முழு நாடும் அறியும்.

தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். குற்றத்தை மூடிமறைப்பதற்கு இவர்கள் பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள். தேசபந்து தென்னக்கோன் அதில் ஒரு வடிவம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தான் இன்று நீதிமன்றத்தை விமர்சிக்கிறார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது முஸ்லிம் காங்கிரஸோ நீதிமன்றத்தை விமர்சிப்பதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *