மாத்தளை மண்சரிவுகளில் 21 பேர் உயிரிழப்பு; 8 பேரை காணவில்லை

மாத்தளை அம்பன்கங்கை பிரதேச செயலகப் பிரிவில் பல தோட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை அம்பன்கங்கை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கம்மடுவ, கோப்பிமலை, இங்குருவத்த போன்ற தோட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தம் காரணமாக அப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை இறத்தோட்டை இந்துக் கல்லூரி, தம்பகமுதுன விகாரை, கழுகல்தென்ன போன்ற இடைத்தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான மேலதிக செயற்பாடுகளை பாதுகாப்பு படையினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதுடன், மேலும் கம்மடுவ, நாகல, இங்குருவத்த, கோப்பிமலை கொலனி, அலகொலமட மற்றும் பல பிரதேசங்களில் இன்னும் மீட்கப்படாமல் இருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துத்தருமாறும், பாதிக்கப்பட்டு இறத்தோட்டை இந்துக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
மாத்தளை மாவட்டத்தில் 29 ஆம் திகதி 8 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையிலான பேரிடர் அறிக்கையின் படி;
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை – 903, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 3581, இறந்தவர்களின் எண்ணிக்கை – 21,காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – 08,காயமடைந்தவர்களின் எண்ணிக்கை – 03,இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 37, இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை – 2665.
பாதகமான காலநிலை காரணமாக பின்வரும் வீதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
மாத்தளை ரிவர்ஸ்டன் ஊடாக லக்கல வீதி,லக்கல லேல்லொய பாலம் உடைந்துள்ளது,உக்குவெல – எல்கடுவ வீதி,மில்லவானா – மெல்சிரிபுர வீதி,இறத்தோட்டை – கம்மடுவ வீதி,கைகாவளை – கும்பல்லொழுவ வீதி ஆகிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
![]()