தமிழ் மக்களிடம் சஜித் மன்னிப்புக் கோர வேண்டும்; சிறீதரன் எம்.பி.கடும் சீற்றம்

திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும்.தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அந்த தமிழ் மக்களுக்கு சஜித் பிரேமதாச துரோகமிழைத்துள்ளார் என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி துக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
திருகோணமலையில் புத்தர்சிலை ஒன்று பிரதிஸ்டை செய்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எவரும் அரசாங்க அதிபர்களாக பதவி வகிக்கவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் இனப் பரம்பலை இல்லாதொழிப்பதற்கு தொடர்ச்சியாக சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன . இதனடிப்படையில் தான் அண்மையில் புத்தர்சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.அது இன்று இனவாத பூதமாக வெளிவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பிக்குகளை கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்தார்.இந்த அரசாங்கமும் அதே வழியிலேயே பயணிக்கின்றது.
திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை வைக்கப்படுகிறது. அது பொலிஸாரால் அகற்றப்படுகிறது. பின்னர் பொலிஸாரால் அதே இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த சம்பவத்தை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆக்கிரோசமாக குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். சஜித் பிரேமதாச இந்தக் கருத்தை மீளப்பெற வேண்டும்.தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவர் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்.சஜித் பிரேமதாச பகிரங்க மன்னிப்பு கோரினால் தான் அது இந்த நாட்டில் ஒரு நீதியாக அமையும்.
இந்த நாட்டில் மதத்தை முன்னிலைப்படுத்தி தான் காலம்காலமாக பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 30 விகாரைகள் கட்டப்படுகின்றன. திரியாய் பகுதியில் இரண்டு சிங்களவர்களுக்காக 1 விகாரை கட்டப்படுகிறது. கிழக்கில் பல இடங்களில் காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன.அரசாங்கம் இதனை தடுக்க வேண்டும்.இல்லையேல் இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லாதொழியும்.இது மிகவும் அபாயகரமானது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது திருகோணமலை விவகாரம் பற்றி பேசினோம்.அவரும் ஒருசில விடயங்களை ஏற்றுக்கொண்டார். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரை நம்பிக்கையளித்துள்ளது. இருப்பினும் சகல விடயங்களிலும் நம்பிக்கை கொள்ள முடியாது.இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது ஏன் தையிட்டி விகாரை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுகிறது. ஆகவே சிலைகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படுகின்றன.அரசாங்கம் இதனை தடுத்தேயாக வேண்டும் என்றார்.
![]()