கொலன்ன பிரதேச சபை பட்ஜெட் அநுர அரசிற்கு முதல் தோல்வி!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கொலன்ன பிரதேச சபையின் கன்னி வரவு செலவு திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது
கொலன்ன பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்புக்காக பிரதேச சபை தலைவர் சம்பத் குணசிங்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை சபை கூடியிருந்தது.
கொலன்ன பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 . அதில் தேசிய மக்கள் சக்திக்கு 9 உறுப்பினர்கள். ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 உறுப்பினர்கள். பொதுஜன பெரமுனவுக்கு 3 உறுப்பினர்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு உறுப்பினர், திலித் ஜயவீர எம்.பி தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு ஒரு உறுப்பினர் என உள்ளனர்.
9 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி பிரதேச சபையில் ஆட்சி அமைத்திருந்தது. அதன் பிரகாரம் நேற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்களிப்புக்கு விடப்பட்டபோது, கூட்டு எதிர்க்கட்சி பகிரங்க வாக்கெடுப்பைப் கோரியுள்ளது.
அதன் பிரகாரம் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக வாக்களித்தனர். அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்திற்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 9பேரும் ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 பேரும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்ட பின்னர் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்
![]()