கட்டுரைகள்

அவுஸ்திரேலியப் பிரதமரை வாயாரப் புகழ்ந்த அமெரிக்க சனாதிபதி;  சோழியன் குடுமி சும்மா ஆடுமா?…. நியூசிலாந்து சிற்சபேசன் 

அமெரிக்காவின் அதிகாரமையத்திலே “திக் திக்” கணங்கள் மலிந்துவிட்டன. “பிறாண்டல்” இயல்பாகிவிட்டது. செய்தியாளர்களே ஆரம்பங்களில் இலக்குவைக்கப்பட்டனர். அதுவே காலப்போக்கில் ஆட்டைக் கடித்து – மாட்டைக் கடித்து – மனுசரைக் கடிக்கின்ற கதையாகிவிட்டது. வெள்ளைமாளிகைக்கு அரசமுறைப் பயணமாக வருவோரை சகட்டுமேனிக்குச் சங்கடப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதனால், அமெரிக்க அதிகார மையத்தை நோக்கிச் செல்லும் பெரும்பாலானோர் “திக் திக்” கணங்களுடனேயே போகின்றனர்.

அதனால்தானோ என்னவோ, அமெரிக்காவுக்கான அரசமுறைப் பயணமாக புறப்படுவதற்கு முன்னர் வாழ்வின் சந்தோசங்களை அவுஸ்திரேலியப் பிரதமர் கொண்டாடினார். அமெரிக்காவுக்கு புறப்படவேண்டிய கடைசிக்கணம் வரையில் தனிப்பட்ட விடுமுறையை பசுபிக் தீவொன்றிலே அனுபவித்தார். அதன்பின்னரேயே, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று பாடாத குறையாக அமெரிக்கா பயணமானார்.

ஆனால், அவுஸ்திரேலியப் பிரதமருக்கு வெள்ளை மாளிகையில் இன்ப அதிர்ச்சியே கிடைத்தது. அவுஸ்திரேலியப் பிரதமரை “இந்திரன்” “சந்திரன்” என்ற அளவுக்கு அமெரிக்க சனாதிபதி புகழ்ந்தார். ஆடின காலும், பாடின வாயும் சும்மா இராது என்பார்கள். அதுபோல, யாரையேனும் பிறாண்டாமல் சிலருக்கு இருக்கமுடிவதில்லை. அதனால், அவுஸ்திரேலியத் தூதுவரே கவுண்டமணியிடம் சிக்கிய செந்திலானார். அந்தச் சம்பவத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வெள்ளைமாளிகைக்கு போய்விட்டு, விறாண்டுப்படாமல் வெளியேறிய சாதனை நாயகராகவே, அவுஸ்திரேலியப் பிரதமரைச் சொல்ல வேண்டும்.

அவுஸ்திரேலியப் பிரதமரைச் சங்கடப்படுத்தவில்லை என்பதை மாற்றத்தின் அறிகுறியாகச் சொல்லமுடியாது. மாறாக, அவுஸ்திரேலியாவின் அரிதான கனிமவளங்களிலே கொண்ட பேராசையே காரணமெனலாம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான கயிறிழுப்பிலே அரிதான கனிமவளங்களே மையவிசையாகியுள்ளது.

Donald Trump praises 'great' Washington meeting with Anthony Albanese as  leaders dine at Apec | Apec summit | The Guardian70 விழுக்காடு வரையான அரிதான கனிமவளங்களை, உலகளாவிய ரீதியில், சீனாவே அகழ்கின்றது. அதற்கப்பால், அகழ்ந்தெடுக்கபட்ட கனிமவளங்களை பதனிடும் பாரிய கட்டமைப்பு சீனாவிடமே உள்ளது. உலகளாவிய ரீதியிலே, 90 விழுக்காடு வரையான பதனிடலை சீனாவே செய்கின்றது. அத்துடன், கனிம வளங்களிலிருந்து உருவாக்கப்படுகின்ற காந்தங்களையும் சீனாவே உற்பத்தி செய்கின்றது. 93 விழுக்காடு வரையான உற்பத்தி வல்லமையை சீனாவே கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு நிலை, சடுதியாக ஏற்பட்டதல்ல. படிப்படியாகவே கட்டமைத்துக் கொள்ளப்பட்டதாகும்.

அப்படியானால், அமெரிக்க – சீனா முறுகலிலே அரிதான கனிமவளங்கள் எப்படி மையவிசையாகியது என்னும் கேள்வி எழலாம்.

அதற்கு அமெரிக்க சனாதிபதியின் “டரிப்” என்று சொல்லக்கூடிய வர்த்தக வரிவிதிப்பு முறையே ஆரம்பப் புள்ளியாகியது. அமெரிக்கா வரிவிதிப்பை அறிவித்தபோது, சீனா பதிலடி கொடுத்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைகள் என்ற கோதாவில் “பேரம்பேசல்” நடைபெறுகின்றது. அதனுடைய ஒரு பகுதியாகவே, கனிமவளங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தக்கூடிய தோரணையை சீனா வெளிப்படுத்துகின்றது. அதனால், மாற்று விநியோக வழிகளை அமெரிக்கா தேடுகின்றது.

இத்தகைய சூழலிலேயே அவுஸ்திரேலியா மீது அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கூர்மையடைந்திருக்கின்றது.

அரிய கனிமவளங்களிலிருந்து உற்பத்தியாகக்கூடிய பொருட்கள் இன்றைய உலகின் இயக்கத்துக்கு அத்தியாவசியமானவை. விமானம், நீர்முழ்கிக் கப்பல், அதிநவீன பாதுகாப்புத் தளபாடங்கள் முதல் சாதாரண மருத்துவ கருவிகள், காற்றலை, கணணி என எங்கும் எதிலும் எப்போதும் பயன்படுகின்றன. கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்பதுபோல, மிகச் சொற்ப அளவிலேயே தேவை என்றாலும்கூட, அவையின்றி எதுவுமே அசையாது.

மின்சார வாகனங்களிலே பயன்படுகின்ற பட்டரிகளின் முக்கிய மூலக்கூறு லிதியமாகும். உலகிலே கிடைக்கின்ற மொத்த லிதியத்தின் 50 விழுக்காடு அவுஸ்திரேலியாவிலே காணப்படுகின்றது. அதேபோன்று, உலகிற்கு தேவையான பல்வேறு வகையான கனிமவளங்கள் அவுஸ்திரேலியாவிலேயே கிடைக்கின்றன. ஆனால், அவற்றைப் பதனிடும் கட்டமைப்பு அவுஸ்திரேலியாவிடம் கிடையாது. அதனால், அவுஸ்திரேலியா தன்னுடைய பெருந்தொகையான கனிமவளங்களை சீனாவுக்கே ஏற்றுமதி செய்கின்றது.

அதனாலேயே, அரிய கனிமவளங்களை பதனிடுவதற்கான கட்டமைப்பை, அவுஸ்திரேலியாவிலேயே உருவாக்குவதற்கு அமெரிக்கா உதவ முன்வந்திருக்கின்றது.

அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்னும் சுலோகத்தையே அமெரிக்க சனாதிபதி முன்வைக்கின்றார். அப்படியாயின், கனிமவளங்களை பதனிடும் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கென பாரிய முதலீட்டை கங்காருதேசத்திலே எப்படிச் செய்யலாம். ஏனெனில், அஃது அவுஸ்திரேலியர்களுக்கல்லவா வேலைவாய்ப்பை ஏற்படுத்தப் போகின்றது. அந்தவகையிலேயே, அமெரிக்காவின் முதலீடு தொடர்பில் ஏகப்பட்ட சந்தேககங்கள் உள்ளன. மலிந்தால் சந்தைக்கு வரும்தானே. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடமுடியாது. ஏனெனில், தலைக்குமேல் வெள்ளம் போனபின்னர் ஒன்றும் செய்ய முடியாதல்லவா.

Rudd hails Australia's 'first-class' ties with Trump

அதனாலேயே, அவுஸ்திரேலியப் பிரதமருடைய லேபர்கட்சியின் கடும்போக்காளர்களிடையே கிலேசம் ஏற்பட்டிருக்கின்றது. குறுகியகால தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான முயற்சி என்று குமுறுகின்றனர். தேசத்தின் கனிமவளங்களை ஈடுவைத்துவிட்டதாகப் பதறுகின்றனர்.

அடிப்படையில், அவுஸ்திரேலியாவின் லேபர்கட்சியும், அமெரிக்க சனாதிபதியின் குடியரசுக்கட்சியும் சித்தாந்தரீதியாக முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டவை. காலநிலை மாற்றம், பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலே ஒடுக்கப்பட்ட தரப்புக்களுடன் அவுஸ்திரேலியா லேபர்கட்சி தோளோடுதோள் நிற்கக்கூடியது. ஒடுக்குகின்ற தரப்புக்களின் ஆதர்ச நாயகன் யாரென்பது சிதம்பரஇரகசியமல்லவே.

எது எப்படியாகிலும், அமெரிக்காவின் தற்போதைய சனாதிபதி பதவியேற்று ஒன்பது மாதங்களின் பின்னரேனும் அவுஸ்திரேலியப் பிரதமரை நேரில் சந்தித்தது மட்டுமல்லாமல், வாயாரப் புகழ்ந்ததுவும் பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆனால், அவுஸ்திரேலியாவிடமுள்ள “அரிய கனிமவளங்களை” குறிவைத்தே தற்போதைய அமெரிக்க சனாதிபதி செயற்படுகின்றமை பரமரகசியமாகும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சும்மாவா சொன்னார்கள்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *