இராணுவத்தினர் மூலம் எப்படி நீதி கிடைக்கும்?; தமிழர்கள் நம்புவார்களா? -சாணக்கியன் எம்.பி. கேள்வி

தமிழ் மக்கள் நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், அவ்வாறானவர்களுக்கான இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு இராணுவம், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையவர்களை நியமிக்க அரசு முயற்சிக்கின்றது இவ்வாறானவர்களிடமிருந்து தமக்கு நீதி கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட எமது மக்கள் எப்படி நம்பிக்கை கொள்வார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா. சாணக்கியன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 20 வீதம் முடிந்து விட்டது. அதாவது ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. சதவீதமடிப்படையில் இன்னும் 80 வீத பதவிக் காலமே உள்ளது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வெளியக பொறிமுறை விசாரணைகளை கோருகின்ற நிலையில் உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் கூறுகின்றது .
உள்ளக பொறிமுறை விசாரணை கட்டமைப்பு எந்தளவுக்கு சுயாதீனமாக செயற்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது .எனவேதான் நாம் உள்நாட்டுக்குள் தீர்வு காண உடன்படவில்லை. உள்ளக பொறிமுறையை நாம் நம்பவில்லை .இந்நிலையில் உள்ளக பொறிமுறை போதும் என நீங்கள் எப்படி நம்புகின்றீர்கள்?
காணாமல் போனோர் அலுவலகம் பற்றி பாதிக்கப்பட்ட எம்மக்கள் மத்தியில் நம்பிக்கை கிடையாது.இந்த அலுவலகத்துக்கு மட்டப்படுத்தப்பட்ட அளவில் தான் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு இரண்டு உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் உறுப்பினராக பாலித்த பெர்னாண்டோ என்பவர் உள்ளார்.இவர் முன்னாள் இராணுவ அதிகாரி . தற்போதைய நியமனத்துக்கு பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புக் கொண்டுள்ள வசந்த பெரேரா, முன்னாள் கடற்படை அதிகாரி ஜோசப் டெரேன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையவர்களை இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அரசு நியமிக்க முற்படுகின்றது இவ்வாறானவர்கள் மூலம் நீதி கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டோர் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள் எனக்கேள்வி எழுப்பினார்.
![]()