தாஜுதீனின் வாகனத்தைப் பின் தொடர்ந்த வாகனத்தினுள் இருந்தது கஜ்ஜா அல்ல; அவரது தாயும் சகோதரிகளும் தெரிவிப்பு

தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்ற வாகனத்தில் இருந்தவர்களில் ஒருவர் கஜ்ஜா எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் கஜ்ஜாவின் தாயார் மற்றும் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அனைத்து படங்களையும் நாங்கள் பார்த்தோம் ஆனால் அது கஜ்ஜா அல்ல என அவர்கள் கூறியுள்ளனர்.
கஜ்ஜாவின் மனைவி,அது கஜ்ஜாஎன்று தெரிவித்திருந்த நிலையில் அதனை சிலதினங்களுக்கு முன் கஜ்ஜாவின் மகனும் மறுத்திருந்ததுடன் தனது தாய் பொய் கூறுவதாகவும்,தனது தந்தை கொல்லப்படுவதற்கு முன்னர் தனது தாய்,தந்தையிடமிருந்து பிரிந்து சென்று விட்டதாகவும் தனது தந்தையின் கொலைக்கு தாயே காரணமெனவும் கூறியிருந்த நிலையில் தற்போது கஜ்ஜாவின் தாயார் மற்றும் சகோதரிகளும் அது கஜ்ஜா அல்ல எனத் தெரிவித்துள்ளனர்
பத்திரிகையாளர் சாமுதித சமரவிக்ரம, கொலை செய்யப்பட்ட அருணு விதானகமகே அல்லது கஜ்ஜாவின் குடும்ப உறவினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
கொலை செய்யப்படட கஜ்ஜாவின் தாய் மற்றும் மூன்று சகோதரர்களுடன் அவர் இந்தக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
அதன் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் ஏழு பேர் குடும்ப உறுப்பினர்களாக இருப்பதாகவும், அவர்களில் மூன்று பேர் மட்டுமே கலந்துரையாடலில் பங்கேற்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.
அவர்களைத் தவிர, கஜ்ஜாவின் தாயும் ஊடகங்களுடன் கலந்துரையாடலில் இணைந்தார்.
தாஜுதீன் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அனைத்து படங்களையும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்களுக்குக் காட்டியதாகவும், அது அவர்களின் சகோதரர் அல்ல என்பதை அவர்கள் அனைவரும் தெளிவாக சுட்டிக்காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
தொடர்புடைய படங்களில் உள்ளவர் ரி-சேர்ட் அணிந்திருப்பதாகவும், அவர்களின் சகோதரர் ஒருபோதும் ரி -சேர்ட் அணிவதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கஜ்ஜாவின் மனைவி அனிஷா அந்த காட்சிகள் மூலம் கஜ்ஜாவை அடையாளம் கண்டதாக கூறியது பொய் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் சகோதரரின் கொலைக்கு அவரது மனைவி முழுப் பொறுப்பு என்றும், அதில் கபில திசாநாயக்கவும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் நம்புவதாகக் கூறினர்.ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
![]()