செம்மணி புதைகுழி அகழ்வு: மேலும் 3 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியிலுள்ள மனிதப் புதைகுழிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் (வியாழக்கிழமை) மேலும் 3 புதிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அகழ்வுப் பணிகள், நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டப் பணிகளுக்காக நீதிமன்றினால் 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 26 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், கண்டெடுக்கப்பட்ட 3 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 105 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 35 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் இந்த அகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
![]()