இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியான விசாரணை எப்படி நடைபெறும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர.அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, இந்த விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை எனத் தெரிவிக்க முடியும் என பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்,

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஐக்கிய மக்கள் சக்திஎம்.பி. சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிக கேள்வியாகவே இதனை எழுப்பிய முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார்.

ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர. அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு முதலில் வந்தது இராணுவத்தினரே.

அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதைய கிழக்கு மாகாண கட்டளை தளபதிஅநுர ஜயசேகரவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவந்திருக்க முடியாது.அவருக்கு அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார்.

அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர , தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, இந்த விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை எனத் தெரிவிக்க முடியும்? எனக் கேட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *