இலங்கை

சர்வதேச விசாரணைகள் தேவை என்று வலியுறுத்தல்கள் அதிகரிப்பு உலகெங்கும் எதிரொலிக்கும் செம்மணி மனிதப் புதைகுழி; தமிழகம் ,லண்டன்,கனடாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் 

யாழ் நல்லூர் செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சர்வதேச மட்டத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதுடன் சர்வதேச விசாரணைகள் தேவை என்ற வலியுறுத்தல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

யாழ் நல்லூர் செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 44 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக் கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.இவ்வாறான நிலையிலேயே செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி சர்வதேச மட்டத்தில் ஆர்ப்பாட்டங்களும் வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டியும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியும் தமிழகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, யாழ்பாணத்தில் உள்ள செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேநேரம் செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பும் தமிழ் அமைப்புகளும் இணைந்து லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்துக்கு முன்னால் வெகுசனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.

மேலும் நேற்று கனடாவிலும் வெகுசனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலை குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இனப்படுகொலையாளர்கள் தங்களைத் தாங்களே விசாரிக்க முடியாது என்பதால், அவசரமான சர்வதேச தலையீடு அவசியம் என, கனடாவின் ஒன்ராறியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாசலமும் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷாந்தி குமாரசுவாமி கொலையுடன் தொடர்புடைய, சிப்பாயின் வாக்குமூலத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்கள் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு கடந்த காலத்தில் விசாரணைகளை நிறுத்தி, புதைகுழிகள் இருப்பதை மறுத்திருந்தாலும், அந்த புதைகுழிகளுக்கு அண்மையில் புதிய புதைகுழிகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் தலைமையிலான விசாரணையைக் கோருகின்றன. எனவே, இனப்படுகொலை குற்றவாளிகளால் தங்கள் சொந்த குற்றங்களை விசாரிக்க முடியாது எனவும், சர்வதேச தலையீடு அவசியமானது மட்டுமல்ல அவசரமானது எனவும் கனடாவின் ஒன்ராறியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரிட்டன் அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது.முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரிட்டன் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு பாராளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டன் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் , இந்த பிரச்சினையில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.‘மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளது’. ‘வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும்’ கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

தாம் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த போது பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வடக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரம் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நாடளாவிய ரீதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய உறவை பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த கரிசனைகளை இலங்கை அதிகாரிகளிடம் தொடர்ந்தும் தங்களது தரப்பு எழுப்பி வருவதாகவும் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button