ஓமந்தையில் விகாரை அமைக்க முயற்சி; காணியை அபகரித்த பொலிசார்

வவுனியா ஓமந்தை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை பொலிசார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது.
ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நேற்று முன் தினம் திங்கட்கிழமை துப்புரவு செய்த ஓமந்தை பொலீசார் அந்த இடத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருக்கின்ற போதும் அவருக்கான காணி ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனினும் அந்தக் காணிக்கு சொந்தம் கோரும் அவர் அக் காணி தனக்குரியது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு,அந்தக் காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிசார் அந்தக் காணியை அபகரித்து துப்பரவு செய்துள்ளனர்.
இந் நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி அந்தக் காணியை துப்புரவு செய்ததாகத் தெரிய வருவதோடு அந்தக் காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த காணியை உரியவருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
![]()