இலங்கை

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ?

யுத்தம் முடிவடைந்த பின்னர் 220 கிலோ தங்கம் வடக்கில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுதா கிரியடேஷன் என்ற யூடிப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து மூன்று மாதங்களில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் நான் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் 220 கிலோ தங்கத்தை பல்வேறு இடங்களில் குழிகளில் இருந்து மீட்டோம். இரும்பு பெட்டிகளில் அவை இருந்தன. அந்தத் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்கள் அடகு வைத்தவையாகும். அடகு வைத்தவர்களின் பெயர், ஊர் விபரங்கள் அந்தந்த நகைகளில் பொலித்தினால் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்தோம். எனினும் அதற்கு பின்னர் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அதேபோன்று பெருமளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110 கிலோ தங்கம் கிடைத்திருந்தது என்று பஸில் ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அப்படியென்றால் அதில் அரைவாசியை பையில் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

இதேவேளை திறைசேரியில் இருந்த ஆறாயிரம் கிலோ தங்கம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் ஜப்பானுக்கு விற்கப்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகள் நடக்கின்றன. அப்படியென்றால் அரச பொறுப்பில் இருந்த தங்கத்திற்கும் வேலையை காட்டியுள்ளார்கள் என்றே கூற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *