விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் சிரித்துக்கொண்டே சீஐடிக்கு செல்வோம்

விசாரணைகளுக்கு வருமாறு எப்போது அழைத்தாலும் நாங்கள் சிரித்துக்கொண்டே சீஐடிக்கு செல்வோம். எங்களுக்கு அரச இல்லமும் ஒன்றுதான் சிறைச்சாலையும் ஒன்றுதான் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நேர்மையாக விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சினையில்லை. ஆனால் அரசியல் மேடைகளில் கூறுவதை போன்று அதிகளவில் கூச்சலிடுபவர்களை தமது நிகழ்ச்சி நிரல்களுக்கமைய தமக்கு எதிரான அரசியல் பிரதிவாதிகளை அடக்குவதற்காக இதனை பயன்படுத்துவார்களாக இருந்தால் அது நியாயமானது என்று கூற முடியாது. அத்துடன் அரசாங்கத்தின் இருப்பு தொடர்பிலும் பிரச்சினை ஏற்படும்.
வெளிநாடுகளில் சொத்துக்கள் இருக்கின்றது என்று கூறுவார்களாக இருந்தால் அதனை கொண்டுவரவும் முடியும். அதேபோன்று காணாமல் போன 300 கொள்கலன்கள் தொடர்பிலும் தேடிப்பார்க்கலாம். உலகமே அமெரிக்காவால் வரித் திட்டம் தொடர்பான யோசனை கொண்டுவருகையில், அதற்கு உலக நாடுகள் குழுக்களை அமைத்து தயார் நிலையில் இருந்த நிலையில், இங்கு அரசாங்கம் மூன்று மாதங்களாக எதுவும் செய்யாமல் இருப்பது தொடர்பில் பிரச்சினை உள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் முடியாமை காட்டிவிட்டது. அதனை மூடி மறைப்பதற்கு காரணங்களை தேடுகின்றது.
அரசாங்கம் விசாரணைகளுக்கு அழைக்கின்றது. தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் அழைத்தாலும் சிரித்துக்கொண்டே போவோம். சிறைக்கு அனுப்பினாலும் போவோம். எங்களுக்கு அரச மாளிகையும் ஒன்றுதான் சிறைச்சாலையும் ஒன்றுதான். இவற்றில் எங்கு சென்றாலும் நான் மகிழ்ச்சியடைவேன்.