தமிழக வெற்றிக் கழகமே 2026 இல் தமிழகத்தை ஆளும்; விஜய் சூளுரை

‘மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி 2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், ‘நாங்கள்தான் திமுகவுக்கு எதிரான ஒரே அணி’ என்று பாஜகவும், ‘தாங்கள்தான் பாஜகவுக்கு எதிரான அணி’ என்று திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள்.” எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.