கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 07… சங்கர சுப்பிரமணியன்.

சங்கர சுப்பிரமணியன்

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி போன்ற பெண்தெய்வங்கள் ஆண்தெய்வங்களோடு இருப்பதால்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா? பொருட்களில் இரண்டாம் தரம் இருப்பது போல் கடவுள்களிடமும் இந்த தரக் கட்டுப்பாட்டை கொண்டுவந்து புகுத்திய மேதைகள் யார் ? எல்லாம் மனிதர்கள்தான்.

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம். அறிய முடியா அளவுக்கு ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. நாம் சமூகத்துக்கு தேவைப்படும் போது நம்மிடம் எவ்வித தகுதியும் இல்லாது போனாலும் பல தகுதிகள் இருப்பதாக பறைசாற்றப் படும். அதுவே நாம் தேவைப்படாதபோது பன்முகம் கொண்டவராயிருப்பினும் அவை யாவும் இருட்டடிப்பு செய்யப்படும்.

அப்போது நான் நினைத்துக் கொள்வேன் இந்த கடவுளுக்குள்ளேயே பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்று மாற்றியவர்களுக்கு மக்களை பயன் படுத்தத் தெரியாதா என்ன? தேவைப்பட்டால் சமயபுரம் மாரியம்மனை பெருந்தெய்வ நிலைக்கு உயர்த்துவார்கள். அதுவே தேவையில்லாவிட்டால் சடையாங்குளம் மாரியம்மன் மாதிரி சிறுதெய்வம் நிலைக்கும் தள்ளி விடுவார்கள்.

தெய்வங்களுக்கே இந்நிலை என்றால் மனிதர்களை நேரத்துக்கு தக்கவாறு பயன்படுத்தும் விந்தை மனிதர்களைப் பற்றி வியப்படைய வேண்டியதில்லை.

எனக்கு வெகுநாட்களாகவே ஒரு சந்தேகம். மாரியம்மன் முருகன் போன்றோர் பெருந்தெய்வங்களுக்குள் வருகிறார்களா?அல்லது சிறுதெய்வங்களுக்குள் வருகிறார்களா? ஏனென்றால் இந்த இரு கடவுள்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கு நடப்பதுபோல்தான் பூஜைகள் நடக்கின்றன. சன்றாக சமயபுரம் மாரியம்மன் திருச்செந்தூர் முருகன்.

ஆனால் இப்படி பெருந்தெய்வம்போல் கொண்டாடப்படும் கோவிலில்களி்ல்
பெருந்தெய்வங்களை மட்டும் வழிபடுபவர்கள் தீச்சட்டி எடுப்பதில்லை, மாவிளக்கு போடுவதில்லை, தீமிதிப்பதில்லை. அதனால்தான் இந்த தெய்வங்கள் உண்மையில் பெருந்தெய்வமா? என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது.

அடுத்ததாக முருகன் கோவிலை எடுத்துக் கொள்வோம். இக்கோவில்களில் எல்லோரும் மொட்டை போடுகிறார்களா? எல்லோரும் நாக்கில் அலகு குத்திக் கொள்கிறார்களா? பால்குடம் எடுக்கிறார்களா? எல்லோரும் காவடி எடுக்கிறார்களா? முருகன் பெருந்தெய்வம்
என்றால் எல்லோரும் இவற்றை எல்லாம் செய்யலாம் அல்லவா?

எல்லோருக்கும் கடவுள் சமம். இதிலென்ன பெருந்தெய்வம் சிறுதெய்வம். எல்லோரும் மொட்டையடிப்பதில் தொடங்கி தீமித்தல் போன்ற வேண்டுதல்களை செய்யத்தானே வேண்டும். எல்லோரும் எல்லா பெயர்களையும் வைத்துக் கொள்ளத்தானே வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் அது தவறல்லவா? அப்படி செய்யாதுபோனால் எல்லோரும் ஒருமதம் என்பது பொருளற்றுப் போகிறதல்லவா?

ஒரே மதத்தில் இவ்வளவு வேறுபாடுகள் இருப்பது தவறில்லை என்றால் அங்கு சிறு தெய்வங்களுக்கு மதிப்பில்லை என்பதும்
தவறில்லையோ? இதில் மாடசாமி அண்ணாச்சி தன் பெயரை அவர் மதத்தில் எல்லோரும் வைக்கிறார்களா என்று ஒரு நொடி நினைத்துப் பார்பபதில்லை. ஆனால் வக்காலாத்து வாங்க மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்திடுவார்.

அது போகட்டும் இந்த லட்சனத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்டார். கேள்விகேட்ட அவரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே. அதை விளக்கிச் சொல்லவே முடியாது. தோனி ஒரு ஓவரில் எல்லா பந்துகளையும் சிக்சர் அடித்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு பெருமிதத்தைப் பார்க்க முடிந்தது.

தோனியை விடுங்கள். அப்படி என்ன மாடசாமி அண்ணாச்சி என்னை கேள்வி கேட்டார் என்கிறீர்களா? உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. அது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். ஆனால் என்ன இதற்குமுன் எல்லோரும் கேட்டதைத்தான் இவரும் கேட்டார். புதிதாக ஒன்றும் மூளையைக் கசக்கி அப்படியொரு கேள்வியைக் கேட்டு விடவில்லை.

அந்த கேள்வி என்னவென்றால் இது மாதிரி கேள்வியை இங்கேதானே கேட்கிறீர்கள்? மற்ற மதத்தினரிடம் கேட்க முடியுமா என்பதே அக்கேள்வி. எப்படிப்பட்ட அறிவுபூர்வமான கேள்வியை கேட்டு விட்டார் பார்த்தீர்களா? நோபல் பரிசு கொடுக்கும் கமிட்டியும் இதைக் கண்டு கொள்வதில்லை. கின்னஸ் ரெக்கார்டிலும் பதிவு செய்ய எவரும் முயற்சிப்பதும் இல்லை.

யாரும் பாராட்டாவிட்டால் என்ன நாமாவது பாராட்டி அவார்டு கொடுக்கலாம். இப்போதுதான் கொல்லைப்புறத்தில் கொடுக்காப்புளி மரம் நட்டால்கூட அவார்டு கொடுக்கிறார்களே. அப்படியிருக்க நாமும் அண்ணாச்சிக்கு ஒரு அவார்டைக் கொடுத்து வைப்போமே.

இப்போதெல்லாம் சீரகச்சம்பா போடுவதற்கு பதில் பிரியாணிக்கு பாஸ்மதியைப் போட்டால் கூட சமையல்காரருக்கு அவார்டு கொடுக்கிறார்கள். அது அவர் கடமைதானே என்று எண்ணுவதில்லை. கடமையைச் செய்வதற்கும் கூட இப்போது அவார்டு கொடுக்கிறார்கள். போகிற போக்கைப்பார்தால் பெற்ற பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்தால்கூட அவார்டு கிடைக்குமென எண்ணுகிறேன்.

தவறில்லை. நல்லாசான் விருது போல சிறந்த பெற்றோர் என்று ஒன்றைக் கொடுத்தால்கூட சிந்தை கலங்க வேண்டியதில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. என்னைத்தான் சொல்கிறேன். யாரும் கோபித்துக் கொள்ளவேண்டாம். எப்பவும் இதுவே எனக்கு வேலையாப் போச்சு சொல்லவேண்டியதை சொல்லவரும்போது எங்கெங்கோ போய்விடுகிறேன். திரும்ப யூ டேர்ன்போட்டு வரவேண்டியதே என் பிழைப்பாகி விட்டது.

அதற்காக நான் செய்வதை தவறென்றும் கூற
முடியாது. ஒரு திரைப்படம் பார்க்கிறோம். அதில் காதல், காதலனும் காதலியும் பாட்டுப்பாடி ஆடும் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், வில்லனின் வரவு, சதி, சண்டைக் காட்சி கடைசியா கிளைமாக்ஸ் என்றுதானே படம் முடிகிறது.

மாறாக கதாநாயகன் வருகிறான். கதாநாயகி வருகிறாள். இருவரும் காதலிக்கின்றனர். இருவரும் பெற்றோரிடம் சொல்கிறார்கள். பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. படம் நிறைவடைகிறது. இப்படியா திரைப்படம் வருகிறது? இல்லையே? படத்தில் எத்தனை திருப்பங்கள் வருகின்றன?

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.