இலங்கை

இந்த ஆண்டில் 3 முதலீட்டு வலயங்கள் வடக்கில் 16, 000 பேருக்கு விரைவில் தொழில் வாய்ப்பு

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள மூன்று முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும், இதன் ஊடாக 16,000 பேருக்குத் தொழில்வாய்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்குமென இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை சுண்டுக்குளியில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில், மூன்று தசாப்தகாலப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்குத் தற்போது அதிகளவு முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்கின்றோம். அரசாங்கமும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இந்தக் காலத்திலேயே முதலீடுகளுக்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. எமது இளையோருக்கு வேலைவாய்ப்புப் பிரச்சினையாகவுள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன எமது அபிவிருத்திக்குத் தடையாகவுள்ளன என்றார்.

இதன்பின்னர் முதலீட்டுச் சபையின் தலைவர் தெரிவிக்கையில், இவ்வாறான கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தியமைக்காக வடக்கு ஆளுநருக்கு நன்றிகளைக் கூறுகின்றோம். முதலீடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சியை வரவேற்கின்றோம். எவ்வளவு விரைவாக வடக்கின் மூன்று முதலீட்டு வலயங்களுக்குமான பணிகளை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்வதற்கே விரும்புகின்றோம். அடையாளப்படுத்தப்பட்ட மூன்று முதலீட்டு வலயங்களையும் நாங்கள் பார்வையிட்டுள்ளோம் என்றார்.

காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய முதலீட்டு வலயத்துக்கான போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன. இதனை முன்னெடுப்பதிலுள்ள உடனடிச் சவால்கள் இனங்காணப்பட்டு அவற்றுக்குத் தீர்வுகளும் கண்டறியப்பட்டன.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் புனரமைத்து மீளமைப்பதுடன் அதனைக் காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பரந்தனுக்கு அண்மையாகப் புகையிரத நிலையம், ஏ- 9 பிரதான வீதி என்பன உள்ளமை சாதகமான அம்சமெனச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சில இடங்களில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்துக்கு உரியது என்பதால் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மூன்று முதலீட்டு வலயங்களைச் சுற்றியும் வேலிகளை அமைத்து அதனை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் சுற்றுச்சூழல் நேயம் மிக்கதாக அமையுமென முதலீட்டுச் சபையினர் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.