முச்சந்தி

தாய்வானை சூழும் சீன ஆக்கிரமிப்பு: அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

சீன அரசு மீண்டும் தாய்வானைச் சுற்றி கடந்த வாரம் பாரிய போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. தாய்வான் சுதந்திர நாடாகி, தேசிய சுயநிர்ணயம் பெறவும் நீண்ட காலமாக முயற்சியும் செய்து வருகிறது.
இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகளால் சீன அரசின் செயற்பாட்டை எவராலும் இலகுவாக கணிக்க முடியாமல் உள்ளது. அமெரிக்காவின் பிராந்திய நலன்களைப் பேணவும், சீனாவின் ஒற்றையாட்சி அச்சுறுத்தல்களாலும் தாய்வான் மீதான பாரிய அழுத்தங்களாக உள்ளன.
தனிநாடாக பிரிந்த தாய்வான் :
சீனாவிலிருந்து தனிநாடாக பிரிந்து சென்ற தங்கள் நாட்டின் மீது படையெடுக்க, எல்லையில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருவதாக தாய்வான் இராணுவம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் பயிற்சிகளை நடத்துவதாகக் கூறி சீனா படைகளை நிலைநிறுத்தலாம். மேலும் தாய்வானை சுற்றி வளைக்கும் நோக்கில் மேற்கு பசிபிக் பகுதிக்கும் சீனா போர்க்கப்பல்களை அனுப்ப வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா திட்டமிடுகின்றது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் தாய்வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை தூண்டியும் வருகிறது.
இந்நிலையில் தாய்வான் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தாய்வானை அச்சுறுத்தும் வகையிலும், தாய்வானைச் சுற்றியும் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தனது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சீனா அனுப்பியுள்ளது.
இந்த பயிற்சியில் சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அரை நூற்றாண்டு பகை:
சீனா-தாய்வான் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடிக்கிறது.
பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாதபோதிலும், தாய்வான் தன்னை தன்னாட்சி பெற்ற தனிநாடு என்கிறது, ஆனால் சீனாவோ தாய்வானில் அமைந்திருக்கும் அரசு, சட்டவிரோதமானது, தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப்பகுதி என்கிறது.
அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என தொடர்ந்து சீனா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக சீனா-தாய்வான் இடையிலான ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
 தனிநாடக பிரிவினை :
சீனாவில், 1911-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1927-ல் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் கட்சிப் போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இந்தப் போரில் தோல்வியுற்ற சீன தேசியக் கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் தீவான தாய்வானில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித்தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தாய்வான்.
1975 வரை சீன தேசியக் கட்சியின் தலைவரான சியாங்கின் ஆட்சியிலிருந்த தாய்வான், அதன் பிறகு மெல்ல மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நீண்டகாலமாகவே தாய்வானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981-ல் `ஒரு நாடு-இரண்டு அமைப்புகள்’ என்ற ஆட்சிமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி, ‘எங்களுடன் தாய்வான் இணைந்து கொண்டால், ஹாங்காங்கில் இருப்பதுபோல உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்’ என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தாய்வான்.
சீனா படையெடுக்க சாத்தியமா ?
தொழில்துறை, தொழில் நுட்பத்துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று தாய்வான் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதைக் கண்டு அஞ்சிய சீனா, தாய்வானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனிநாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே’ என்று சொல்லிவந்தது.
2005-ல் தாய்வானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது சீனா. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தாய்வானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.
அதைத் தொடர்ந்து, 2016-ல் தாய்வான் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டுவந்து, பாதுகாப்புத் துறையையும் மேம்படுத்தியது. வெளிநாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தத் தொடங்கியது.
அமெரிக்கவுடன் நீண்டகால
நட்புறவை ஏற்படுத்திக்கொண்டதால், தாய்வானுக்குப் பல நவீன ஆயுதங்கள் கிடைத்தன. சர்வதேச ரீதியில் வத்திக்கானும், வேறு 13 நாடுகளும் தாய்வானை இறையாண்மைகொண்ட நாடாக அங்கீகரித்திருக்கின்றன.
சீனா, மீண்டும் தாய்வானை தன்னில் இணைத்துக்கொண்டு விட்டால், அது பசிபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட வழிவகுப்பதுடன், குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமையும்.
ஆனால் தாய்வானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.