சீனாவுக்கு அம்பாந்தோட்டை போல கச்சதீவை குத்தகைக்கு கேட்பாரா மோடி?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சதீவு விவகாரத்தில் அதிமுக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போது, தமிழக மீனவர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்புதான் என தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வலியுறுத்தும் இந்த சட்டசபை தீர்மானத்துக்கு அதிமுக, பாஜகவும் ஆதரவு அளித்திருக்கின்றன.
மோடி இலங்கை பயணம்; பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லும் நிலையில் தமிழக சட்டசபையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடியின் இலங்கை பயணத்திலும் கச்சத்தீவு குறித்த பேச்சுவார்த்தை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
கச்சத்தீவு பேச்சுவார்த்தை ;இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியுமா? என்கிற கேள்விகளுக்கு அப்பால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு இரண்டு நிலைப்பாடுகளுடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாம்.
சீனாவின் வியூகம்; இலங்கைக்கு பெருமளவு கடன் கொடுத்து வரும் நாடுகள் சீனா, இந்தியா ஆகியவைதான். சீனாவோ, இலங்கைக்கு கடன் கொடுத்துவிட்டு இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட சில பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு எடுத்து தன்னுடைய சுயாட்சி பகுதியாக நிர்வகித்து வருகிறது. ஆனால் இந்தியாவோ, தொடர்ந்து பல்வேறு கட்டமைப்புக்கான நிதி உதவிகளையே செய்து வருகிறது.
அம்பாந்தோட்டை போல கச்சதீவும் குத்தகைக்கு? தற்போது, சீனாவின் பாணியில் இந்தியாவும் இலங்கையிடம் இருந்து சில பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு பெறுவது என திட்டமிட்டுள்ளதாம். அதில் ஒன்றுதான் கச்சதீவு. இலங்கைக்கு கொடுத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபா கடனுக்கு ஈடாக, கச்சதீவை நீண்டகால குத்தகைக்கு தர வேண்டும் என இந்தியா தரப்பில் நெருக்கடி தர வாய்ப்புள்ளதாம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சதீவை நீண்டகால குத்தகையாக கேட்டுப் பெறுவதில் இந்தியாவுக்கும் சிக்கல் இல்லை; இலங்கைக்கும் சிக்கல் வராது எனவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் யோசனை ;இதே கருத்தைத்தான் தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தில், கச்சதீவில் இலங்கையின் இறையாண்மையை உறுதி செய்வதுடன் நீண்டகால குத்தகைக்குப் பெற்று தமிழ்நாட்டு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என ஜெயலலிதா யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனையைத்தான் தற்போது பிரதமர் மோடி அரசு கையில் எடுத்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
கச்சத்தீவு ஒப்பந்தங்கள்; அதேநேரத்தில் மற்றொரு தீர்வையும் மத்திய அரசு, இலங்கையிடம் முன்வைக்க வாய்ப்புள்ளதாம். கச்சத்தீவு தொடர்பாக 1974-ம் ஆண்டுதான் முதலாவது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சதீவு மீதான உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1976-ம் ஆண்டு கையெழுத்தான 2-வது ஒப்பந்தம்தான், தமிழ்நாட்டு மீனவர்களுக்கான கச்சத்தீவின் அனைத்து உரிமைகளையும் காவு கொண்டது.
1976-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து அல்லது திருத்தம்?; ஆகையால் இலங்கை அரசுடனான 1976-ம் ஆண்டு போடப்பட்ட 2-வது ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவது அல்லது மறுபரிசீலனை செய்து சில திருத்தங்களை மேற்கொள்வது என்பது மற்றொரு யோசனையாம். இதன் மூலம் கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தலுக்கான வியூகம்?; தமிழ்நாட்டில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் இப்படி இலங்கைக்கு பாஜகவினர் செல்வதும் கச்சத்தீவு தொடர்பாக எதிர்பார்ப்புகள் உருவாக்கப்படும் கடந்த காலங்களிலும் நிகழ்ந்துள்ளன. ஆனால் தற்போது பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதாலும் தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதாலும் கச்சத்தீவு விவகாரத்தில் சில காய்நகர்த்தல்களை டெல்லி மேற்கொண்டுதான் ஆகும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
தேர்தல் பிரசார ஆயுதம்; தற்போதைய நிலையில் கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு சிறு துரும்பை பிரதமர் மோடி பயணத்தில் நகர்த்தினாலும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களத்தில் அதையே பிரசார ஆயுதமாக்க பாஜக கூட்டணி முயற்சிக்கும்; இதனை எதிர்கொள்ளும் வகையில், நாங்களும் சட்டசபையில் தீர்மானம் போட்டு நெருக்கடி கொடுத்தோம் என திமுக கூட்டணி பதிலடி தரும். தேர்தல் களத்தில் தாக்கம் ஏற்படுமா?; அதேநேரத்தில் தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் உரிமை சார்ந்த போராட்டங்கள் எப்போதும் எந்த ஒரு தாக்கத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது கிடையாது என்பதுதான் வரலாறு. ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டாலும் தமிழரின் வாழ்வுரிமை பிரச்சனைகள் காவு கொள்ளப்பட்டாலும் பொதுவாக பெரிய அளவு தாக்கத்தை அவை ஏற்படுத்துவதும் இல்லை என்பது கடந்த கால தேர்தல் முடிவுகள். இருந்த போதும் தேர்தல் களத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்துகிற அஸ்திரமாக, கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சனை இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வயாளர்கள்.