தீரப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும்…. ஏலையா க.முருகதாசன்

ஆண் ஒருவர்,ஒரு பெண்ணைத் தாக்கும் காணொளியொன்றை நேற்றுப் பார்த்தேன்.பொது இடத்தில் அந்தப் பெண்ணைத் தடிகளாலும் செருப்பாலும் அடிக்கும் இந்த மிலேச்சத்தனமான வன்முறைச் சம்பவம் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள ஒரு குறிச்சியில் நடந்துள்ளது.
இக்காணொளியைப் பார்த்த போது அப்பெண்ணைத் தாக்கியவருக்கு எந்த விசாசரணையு மின்றி சிறைக்கு அவரை அனுப்பும் தண்டனையை நீதிமன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று என் மனம் நினைத்தது ஆவேசப்பட்டது.
அத்துடன் அப்பெண்ணைத் தாக்கியவருக்கு பண அபராதமும் விதித்து கசையடியம் வழங்க வேண்டும் என்றும் என் மனம் விரும்பியது.
தனது மனைவியுடன் தகராறுபட்டார் என்ற காரணத்திற்காக பேருந்தில் பயணம் செய்த அந்தப் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி பொது இடத்தில் நிலத்தில் இழுத்து இழுத்து தாக்கியதை காணொளியிலும் செய்தித் தகவலாகவும் வாசித்து அறிய முடிந்தது.
மேலதிக செய்தியாக அவர் ஒரு குடும்பப் பெண் என்றும் இரண்டு சிறிய குழந்தைகளுக்கு தாயென்பதையம் அறிய முடிந்தது.
பொதுவாகவே ஆண்களைவிட உடல்பலம் குறைந்த பெண்களை கேட்பார் எவருமில்லையென்பது போல மிருகத்தனமாக தாக்குவதே சட்டப்படி குற்றம்.
தனது மனைவியைக்கூட அடிக்க கணவனுக்கே உரிமை இல்லை.உலக நாடுகள் எங்கினும் கணிசமான நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை உண்டு.
அந்தப் பெண் தாக்கப்பட்ட காட்சியையும் அவர் அவலக்குரல் எழுப்பித் துவண்டதையம் காணொளியில் பார்த்த ஒவ்வொருவரும் நான் கொண்டிருந்த மனநிலையையே கொண்டிருப்பார்கள் என்பது எனது திடமான எண்ணம்.
அடித்தவர் மது போதையிலிருந்தார் என்ற தகவலுக்கூடாக மது அருந்திவிட்டு தாக்கியதாக அறியப்படுகிறது.மது அருந்திவிடடுத் தாக்கியதற்கும் சேர்த்துத்தான் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அவருடைய மனைவிக்கும் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்குமிடையில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது முக்கியமல்ல.ஒரு பெண்ணைத் தாக்கியதற்கே அவருக்கு தண்டனையாக உடனடிச் சிறை வழங்க வேண்டும்.
பல நாடுகளில் உடல் மீதான தாக்குதல் மரணத்தை விளைவிக்கும் வன்முறை என நீதி விதிகளே இருக்கின்றன.
இன்னும் சில நாடுகளில் கடுமையான சொற்களாலும் தகாத அவமானப்படுத்தும் சொற்களாலும் ஒருவரை ஏசுவதே தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிங்கப்பூரில் கடுமையான வார்த்தைப் பிரயோகம் ஒருவரை உடல் ரீதியாகவும் ஆன்மா ரீதியாகவும் பாதிக்கும் குற்றம் என அங்கு அது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
ஜேர்மனியிலும் ஒருவரை நோக்கி தகாத கடுமையான வார்த்தைப் பிரயோகம் தண்டனைக்குரிய குற்றமாக நீதி விதி எழுதப்பட்டிருக்கின்றது.இன்னும் தொழிற்சாலைகளில் ஒருவரை நோக்கி தகாத வார்த்தை பிரயோகிக்கப்பட்டு புகாரளிக்கபடுமானால், பிரயோகித்தவரை எச்சரிக்கை செய்வதுடன் பணிநிறுத்தம் செய்யலாம் என்ற தொழிற்சாலைக்கான விதியே உண்டு.
எனவே முல்லைத்தீவில் ஒரு பெண்ணை பொது இடத்தில் இழுத்துப் போட்டு அடித்த அந்த மிலேச்சத்தனமான மனிதனை சிறைக்கு அனுப்பும் சாட்சியாக அந்தப் பெண்ணை அடிக்கும் காணொளியை நிரூபணமாகக் கொண்டு நீதியை உடனேயே வழங்க வேண்டும்.