மோடியுடன் ஒப்பமிடும் உடன்படிக்கைகள் என்ன?; நாட்டு மக்களுக்குக் கூறுங்கள்

நாட்டு மக்களுக்கு தெரியாமல் இரகசியமான வகையில் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையும் செய்து கொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய பிரதமரின் வருகையின் போது இந்திய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக முன்னிலை சோஷலிச கட்சி ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பாட்டாளர் புபுதுஜயகொட உள்ளிட்ட குழுவினர் அது தொடர்பில் தகவல் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புபுதுஜயகொட கூறுகையில்,
1971 ஏப்ரல் போராட்டத்தின் 54ஆவது வருட நினைவு ஏப்ரல் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. ஆனால் அந்த உடன்படிக்கைகள் என்ன? அவற்றில் உள்ளவை என்ன? என்ற தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லைல. மக்களுக்கோ, பாராளுமன்றத்திற்கோ அது தொடர்பில் அரசாங்கம் அறிவிக்கவில்லை. அமைச்சரவைக்கும் உடன்படிக்கையின் பிரதிகள் கையளிக்கப்படவில்லை.
மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தீர்மானங்களை எடுக்கும் போது அது தொடர்பபில் மக்களிடம் கேட்க வேண்டும். அது தொடர்பான உடன்படிக்கைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும். அது தொடர்பில் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே அவற்றை செயற்படுத்த முடியும். இல்லையென்றால் அதனை பாராளுமன்றத்திலாவது முன்வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு எதனையும் செய்யாது இரகசியமான முறையில் உடன்படிக்கைகளை செய்ய முடியாது. இதனால் இது தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு நாங்கள் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.