இந்திய பிரதமருடைய விஜயத்தை பயன்படுத்தி வட, கிழக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பட்டலந்த வதை முகாம்களில் படுகொலைகள் நடைபெற்றது என்பதை இன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த தேர்தல் காலங்களை பார்த்தீர்கள் என்றால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாட்டு மக்கள் ஒரு செய்தியை கூறுவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தேர்தலாகத்தான் நான் இதனை பார்க்கின்றேன். அந்த வகையில் தெற்கில் இருக்கும் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது அவர்களுடைய பிரச்சினை. ஆனால் இங்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்கள் பலமான செய்தி ஒன்றினை அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாக சொல்ல வேண்டும்.
ஏன் இதனை நான் கூறுகின்றேன் என்றால். அண்மைக்காலமாக நடந்து வந்த விடயங்களை பார்த்தால். குறிப்பாக பாராளுமன்றத்தின் அவை தலைவர் பிமல் ரத்நாயக்க அவருடைய ஊடக சந்திப்புகள் யாழ்ப்பாண விஜயத்தின் சில விடயங்கள், கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் வருகை தந்து சென்றிருக்கின்றார். இவற்றைப் பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒருமுறை வடக்கு பகுதியில் இருக்கும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்பாடுகளை ஆரம்பித்து இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த அளவில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அநுரகுமார திசநாயக்க அவர்களுடைய கட்சி படுதோல்வி அடைந்தது. பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் பிரதேசங்களில் அநுரகுமார திசநாயக்க அவர்களுடைய கட்சி படுதோல்வி அடைந்தது. அதேபோல உள்ளூராட்சி மன்ற தேர்தலை இவற்றை விட பெரியதொரு தோல்வியை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அடையும்.
இதிலும் மிக முக்கியமாக NPP அரசாங்கம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகளாக சில பிரச்சினைகளை இனம் காணாமல் இருக்கின்றார்களா அல்லது இந்த பிரச்சனைகளை அவர்களுடைய கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது மக்கள் இந்த பிரச்சினைகளுக்கு அதாவது இது மக்களுக்கு தேவை இல்லை இது சாணக்கியன்தான் பாராளுமன்றத்தில் இவற்றை பிரச்சினையாக கூறுகின்றார் என்பது போல கருத்துக்கள் வருவதாக எங்களுக்கு தெரிகின்றது.
இதில் மிக முக்கியமாக உங்களுக்கு தெரியும் அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் தொடர்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் பிமல் ரத்னநாயக்க அவர்கள் கூறுகின்றார் அரசியல் கைதிகளை அவ்வாறு உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்று. நாங்கள் அரசியல் கைதிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களை விடுதலை விடுதலை செய்வது என்பது அநுரகுமார திசாநாயக கூறி இருந்தார் தன்னுடைய பேனாவால் ஒரு கையெழுத்து விட்டால் போதும் நான் சில விடயங்களை செய்வேன் என கூறினார். எங்களுக்கு தெரியும் அவருடைய பேனாவால் கையெழுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று. எங்களுக்கு தெரியும் அதற்கு ஒரு பொறிமுறை இருக்கின்றது. நீதித்துறை அமைச்சர் முதலாவது சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இந்த கோப்புகளை எடுத்து இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்திருக்கின்ற குற்றங்கள் என்ன அதில் ஏன் இன்னமும் இந்த குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு முடியவில்லை என ஆராய வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த வழக்குகளில் முடிந்த வழக்குகள் இருந்தால் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதாக இருந்தால் அதற்கான பத்திரங்களை நகர்த்த வேண்டும் ஆனால் ஜனாதிபதி பதவிக்கு வந்து ஆறு மாத காலங்கள் பூர்த்தி ஆகியும் கூட இதுவரைக்கும் அந்த விடயத்தில் ஒரு ஆரம்ப வேலையை கூட செய்யவில்லை. அதாவது விடுதலை செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலையை கூட தொடங்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு எதுவித எண்ணமும் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. அரசியல் கைதிகள் என்று கூறப்படுபவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுகொண்டிருக்கும் வியாழேந்திரன் ஏனைய அமைச்சர்கள் போன்று ஊழல் மோசடிகள் செய்து கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் எங்களுடைய இனத்தினுடைய விடுதலைக்காக அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரிலே தான் அவர்களை சிறையிலே எத்தனையோ தசாப்தங்களாக வைத்திருக்கின்றார்கள். இவர்களை விடுதலை செய்வது பற்றி NPP அரசாங்கம் எந்த நகர்வும் செய்யப் போவதாக இல்லை.
எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய நீதி என்கின்ற விடயம். நாங்கள் நேற்றைய தினம் கூட ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அண்றியா அவர்களை நாங்கள் சந்தித்து இருந்தோம் அவரிடமும் நாங்கள் இந்த விடயத்தை கூறி இருந்தோம்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் அலுவலகம் இவை இரண்டிற்கும் கடந்த காலத்தில் கூட நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்களுக்கு வேலை செய்வதற்கு நிதி இல்லை என்று அந்த குற்றச்சாட்டை அந்த திணைக்களங்களுடைய தலைவர்கள் எங்களிடம் கூறி இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருந்த போதும் நாங்கள் இதனை மிகத் தெளிவாக கூறியிருந்தோம்.
ஆனால் இந்த வருடம் பார்த்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு என்ன ஒதுக்கீடு செய்தார்களோ அதைத்தான் இம்முறை ஒதுக்கீடு செய்திருக்கின்றார்கள், இன்னும் ஒரு திணைக்களத்திற்கு 5 லட்சம் ரூபாய் குறைவாக ஒதுக்கி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்கின்ற விடயத்தில் நாங்கள் எங்களுடைய பாதிக்கப்பட்ட சமூகத்தினுடைய பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் மிக முக்கியமாக முன் வைத்தது நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு நஷ்ட ஈட்டினை வழங்கி இந்த விடயத்தை முடிப்பது. ஆனால் அந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ள நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தாலும் கூட அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்கள் அதாவது போதிய அளவு நிதி அந்த திணைக்களங்களுக்கு ஒதுக்காமல் விடுவது மிகத் தெளிவாக தெரிகின்றது இதிலே நீதி கிடைக்கப் போவதுமில்லை, நஷ்ட ஈடு கிடைக்கப் போவதுமில்லை, உண்மைகள் கண்டறியப்படப் போவதுமில்லை. இந்த விடயங்கள் தொடர்பாகவும் கூட விஜித ஹேரத் அவர்களுடைய ஐநா வில் சொன்ன விடயத்தை பார்த்தால் தாங்கள் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த உண்மை கண்டறியும் ஆணைக்குழு என்கின்ற ஆனைக்குழு விசாரணை செய்வதாக சொல்கின்றார்கள். ஆனால் பட்டலந்த ஆணைக் குழுவை பொறுத்தளவில் சபாநாயகர் கண்கலங்கி கூறுகின்றார் பாதிக்கப்பட்ட அந்த தாய்மார்கள் 89 ஆம் ஆண்டிலிருந்து எத்தனையோ தடவைகள் தங்களுடைய கதைகளை கூறி இருக்கின்றார்கள் மீண்டும் மீண்டும் அந்த கதைகளை சொல்வதை விட நாங்கள் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் யோசிக்க வேண்டும் என கூறுகின்றார்.சிங்கள தாய்மார்களுக்கு அந்த தங்களுடைய துயரத்தை மீண்டும் மீண்டும் கூறுவதற்கு கஷ்டமாக இருந்தால் தமிழ் தாய்மார்களுக்கு தாங்கள் பட்ட துயரங்களை மீண்டும் மீண்டும் சொல்வதில் சந்தோஷத்தை தரும் விடயமாக அவர் கருதுகின்றாரா, பொறுப்பு கூறல் விடையத்திலும் இந்த அரசாங்கம் எந்த நிலைப்பாடையும் எடுக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடுதலையும் இல்லை, பொறுப்பு கூறல் விடயத்திலும் இல்லை என்றால் காணி அபகரிப்பு. அண்மையில் சி பி ஏ என்கின்ற நிறுவனத்தினால் ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது. அதில் வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு எந்தளவு தூரம் நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை மிகத் தெளிவாக கூறுகின்றார்கள். இதில் திருகோணமலையில் 34 விகாரைகள் அமைத்தது தொடர்பாக கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு செயல்பட்டதோ அதேபோன்றுதான் இந்த அரசாங்கமும் செயல்படுகின்றது.
அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சொல்லியிருந்தார் நான் ஒரு இனவாதி அல்ல என்று. ஆனால் இன்று புத்தருடைய புனித சின்னங்களை எடுத்து அவற்றை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு தான் இன்று முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் இருக்கின்ற சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரைகள் அனைத்தும் தொடர்ந்தும் வலுவடைந்து விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் தையிட்டி விகாரையை பொருத்தவரையில் அது தனியாருடைய காணியில் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் தென் இலங்கையில் சென்று ஒரு தனியார் உடைய காணியிலே ஆலயம் ஒன்றினை கட்டினால் தனியார் அந்த ஆலயத்தினை தன்னுடைய காணி வேண்டும் என்று கேட்டால் அவர்கள் எவ்வாறு நீதியை நடைமுறைப்படுத்துவார்கள் என்பது நமக்குத் தெரியும். அந்த வகையிலே காணி அபகரிப்பு விடயத்திலும் எதுவிதமான முன்னேற்றமும் இல்லை. மேய்ச்சல் தரை காணிகளை வர்த்தமானி அறிவிக்கும் என கூறினார்கள. நேற்றைய தினம் நாங்கள் அறிந்தோம் மகாவலி அதிகார சபை பொய்கூறி இருக்கின்றார்கள் என்று. மகாவலி அதிகார சபை நேற்று நான் அறிந்தேன் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சில பிரதிநிதிகளுக்கு கூறி இருக்கின்றார்கள், தாங்கள் வர்த்தமானியில் இதனை மேய்ச்சல் தரையாக அறிவிப்பதற்கு சகல வேலைகளையும் செய்து முடித்து விட்டோம் என கூறி இருக்கின்றார்கள். ஆனால் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கான எதுவிதமான நடவடிக்கைகளும் கடந்த அரசாங்கத்தில் நாங்கள் முன்னெடுத்த விடயத்தை தாண்டி எதுவும் இடம்பெறவில்லை.
இன்று இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றது என்று கூறி சொல்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி எதுவிதமான இராணுவ முகாம்களும் ஜனாதிபதியாக வந்த போது யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம் ஒன்றினை அகற்றுவதற்கு அனுமதி வழங்கியிருந்தாலும் கூட யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற இராணுவ தளபதி அதனை செய்ய முடியாது என்று சொல்கின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. வட மாகாணத்திலும் சரி, கிழக்கு மாகாணத்திலும் சரி பொலீஸ் தடுப்பு காவல் சாவடிகள் எல்லாம் ஆணையிறவில் பார்த்தீர்கள் என்றால் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மீண்டும் வந்துவிட்டது.
நில அபகரிப்பு விடயத்திலும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான நிலங்கள் எத்தனையோ தடவைகள் நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தோம் எங்களுடைய மக்களுக்கு சொந்தமான நிலத்தை வன பரிபாலன் சபைக்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவித்து அந்த காணிக்குள் பயிர் செய்கின்றார்கள் என்று கூறி மக்களை கைது செய்கின்றார்கள். ஆனால் மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் கெவிலியாமடு பகுதியில் சிவில் டிபன்ஸ் போர்ஸ் என்கின்ற போர்வையில் காடுகளை அழித்து காடுகளுக்கு உறுதி முடித்து அதற்குள் யானை வேலைகள் அமைத்து அந்த காணிகளை விற்பனை செய்தும் இருக்கின்றார்கள். இதற்கு அரசாங்கம் ஒரு முடிவு எடுப்பதாக இல்லை. ஏனென்றால் அவர்கள் சிங்கள தரப்பினர்கள்.
ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதம் என்பதனை ஒரு மறைமுகமாக கோத்தபாய அரசாங்கத்தில் நேரடியாக கூறினார்கள் நாங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் தர மாட்டோம் நாங்கள் சிங்கள மக்களின் ஜனாதிபதி இவ்வாறு தான் இருப்பேன் என கூறினார், மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவ்வாறுதான் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அவரை சுற்றி வளைத்து இருந்த அனைவரும் இனவாதம் செய்தவர்கள் தான். இவர்கள் இனவாதம் இல்லை இனவாதம் இல்லை என்று அதைவிட மோசமான இனவாதிகளாக இருக்கின்றார்கள்.வடக்கு மாகாணத்தை தாங்கள் கடந்த காலத்தில் வந்த ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மாத்திரம் தான் அவர்களது நோக்கம். கிழக்கு மாகாணத்தில் அவர்கள் முயற்சி எடுக்கின்றார்கள் ஆனால் பாரிய தோல்வியை அடைவார்கள்.
இந்த தேர்தலைப் பொறுத்தளவில் இந்த அரசாங்கத்திற்கு சரியான ஒரு பதிலை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கின்றார். 87 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேவிபியினர் இந்த இலங்கை – இந்தியா ஒப்பந்தத்திற்கு எதிராக பல வன்முறைகளில் ஈடுபட்டு பட்டலந்த அந்த சித்திரவதை முகாம் உருவாகுவதற்கு காரணமாகயிருந்தார். நாங்கள் இதனை ஆதரிக்கவில்லை, அதனை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை சித்திரவதை செய்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும். அதேபோன்றுதான் நமது வடக்கு கிழக்கிலும் நடந்த வதை முகாம்களை பற்றியும் அண்மையில் பாராளுமன்றத்திலும் மிகத் தெளிவாக அந்த முகாம்கள் உடைய பெயர்களை மிகத் தெளிவாக கூறியிருந்தேன் இவற்றிற்கு எல்லாம் பதில் இல்லை.
ஆனால் பாரத பிரதமர் இலங்கைக்கு வரும்போது இலங்கை அரசாங்கம் பாரத பிரதமர் ஊடாக இலங்கையில் வடக்கு கிழக்கில் வரும் அபிவிருத்தி விடயங்களை ஏன் தென் மாகாணத்தில் அவர்கள் அபிவிருத்தி செய்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. இந்தியா எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய விஷயத்தை இலங்கையிலே வாழும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நான் இந்த இடத்தில் பகிரங்கமாக கூறுகின்றேன். ஏனென்றால் பாரத பிரதமர் வருகின்றபோது எமது பலாலி விமான நிலையத்தை அதி சிறந்த நவீனமான ஒரு விமான நிலையமாக விஸ்தரிப்பு செய்வதற்கு இலங்கை நிதி கேட்டால் நான் அறிந்த வகையில் நிச்சயமாக அந்த நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
திருகோணமலை இயற்கை துறைமுகத்தை ஒரு வர்த்தக மையமாக உருவாக்கக்கூடிய துறைமுகமாக மாற்றுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கேட்டால் நிச்சயமாக பாரத பிரதமர் அதனை கரிசனையுடன் பார்ப்பார் என நான் நம்புகின்றேன். தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்லுகின்ற படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதற்கு கடற்படை துறை கூறியது துறைமுகத்தை கட்டுவதற்கு பணம் இல்லை என்று நிச்சயமாக பாரத பிரதமர் வருகின்ற போது அதனை கேட்டால் அது கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
எங்களுடைய வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி மக்களுக்கு நீதி பொறுப்பு கூறல் விடயத்தில் எதுவிதமான முன்னேற்றமும் இல்லை அரசியில் அமைப்பை கொண்டு வருவது பற்றி எதுவித முன்னேற்றமும் இல்லை என்றால் ஆகக் குறைந்தது அபிவிருத்தி விடயங்களுக்கு இந்திய எதிர்ப்பு மனநிலை இந்த அரசாங்கத்தில் மறைமுகமா இருக்கின்றது என்றாலும் கூட அதனை இல்லாமல் செய்து வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு இந்திய பிரதமருடைய இந்த விஜயத்தை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்.
இதில் இலங்கை அரசாங்கம் தன்னுடைய எஜமான்களாக இருக்கக்கூடிய நாடு எது என்று அவர்களுக்கு தெரியும் அந்த நாடுகள் கோவிப்பார்கள் என்று யோசித்து எங்களுடைய இலங்கை இந்திய நாட்டை வைத்து அடையக்கூடிய அபிவிருத்திக்கு தடையாக இருப்பார்கள் என்றால் இந்த அரசாங்கம் இந்த நாட்டில் இருக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் தோல்வி அடைவார்கள் என்பது மிக உறுதியாக தெரியும்.
இன்று வரைக்கும் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வந்து ஆறு மாதங்கள் பூர்த்தி ஆகியும் கூட எந்த ஒரு வெளிநாட்டு முதலிடம் இந்த நாட்டிற்குள் வரவில்லை. சுனில் ஹந்துன்னெத்தி அமைச்சராக வரும் முன்பு அதாவது பாராளுமன்ற உறுப்பினராகுவதற்கு முன்னர் என் பி பி யில் ஒரு சாதாரண உறுப்பினராக இருக்கும்போது கூறி இருந்தார். தனக்கு கனடாவில் இருக்கும் ஒரு சகோதரர் தொலைபேசி அழைப்பை எடுத்து உங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஒரு மில்லியன் டாலர்ஸ் முதலீட்டினை நாங்கள் ஒரு வாரத்திற்குள் தருவோம் என கூறியிருந்தார். அதைப் பற்றி தற்போது எது வித கதையும் இல்லை.
முதலீடுகள் வராவிட்டால் நிச்சயமாக இது வரும் காலங்களில் மீண்டும் நாட்டை ஒரு வங்குரோத்து நிலை 2028 ல் அடையும். கடன் மறுசீரமைப்பு மீண்டும் செய்ய வேண்டியது ஆக வரும். நாட்டு மக்கள் பாரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இன்று இந்த நாடு ஒரு பெட்டிக்கடையை நடத்துவது போன்று தான் அரசாங்கம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. அந்நிய செலவாணி சுற்றுலா பயணிகள் ஊடாகவும் வெளிநாட்டில் ஏற்றுமதி செய்கின்ற பொருட்களில் இருக்கின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் கடன் எதுவும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற பணத்தை பிரித்து செலவழித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் சரியான ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக பொருளாதார நெருக்கடி மீண்டும் வராமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் நான் குறிப்பிட்ட சில விடயங்களை செய்து ஏன் இந்தியாவுடன் அந்த பாதையைக் கூட அதாவது இந்தியாவுடன் இணைப்பு பாதை ஒன்றை உருவாக்கி தொடங்கி பேசி இருந்தார்கள் அவ்வாறு செய்தால் மாத்திரம் தான் வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும். அவ்வாறு இல்லாமல் விமல் ரத்னநாயக்க அமைச்சரோ சந்திரசேகரன் அவர்களோ சுற்றுலா பயணிகளை போல வடக்கு கிழக்கில் அங்கங்கே சென்று படம் காட்டி செல்வதன் ஊடாக எமது மக்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாது. அந்த காரணத்தினால் தான் பாரத பிரதமருடைய விசயத்தை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் தென்னிலங்கையிலும் அபிவிருத்தி திட்டங்களை அவர்கள் முன்வைக்கலாம். ஹம்பாந்தோட்டையில் புதிய அபிவிருத்தி திட்டங்களை செய்தாலும் அதற்கு நாங்கள் தடைகள் இல்லை. ஆனால் இந்த விஜயத்தை அரசாங்கம் சரியாக பயன்படுத்தி கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மக்களுக்கு சாதகமாக இந்த விஜயத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை தான் இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புகின்றேன்.
தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் விடையத்திலும் முன்னேற்றம் இல்லை, அரசியல் கைதிகள் விடயத்திலும் முன்னேற்றம் இல்லை, புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதில் அரசாங்கம் எத்தனிக்கவும் இல்லை. அரசாங்கம் கூறுகின்றார்கள் நாங்கள் 60 மாதத்திற்கு தான் வந்திருக்கின்றோம் ஆறு மாதத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால் புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதாக இருந்தால் நீண்ட காலம் செல்லும்.
2015 ஆம் ஆண்டிலும் கூட மூன்று வருடங்களுக்குப் பின்னர் தான் எழுத்து வடிவத்தில் ஒரு வரைவு வந்தது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் இன்னமும் அது தொடர்பாக இது விதமான நிதியும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கவில்லை. எங்களுடைய வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செய்வது என்றால் நிச்சயமாக எங்களுடைய அதிகார பகிர்வின் ஊடாக எங்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான பூரணமான அதிகாரத்தை வழங்குவதன் ஊடாக மாத்திரம் தான் எங்களுடைய வடக்கு கிழக்கில் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்ள முடியும். ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன பட்டலந்த வதை முகாம் தொடர்பில் தற்பாதுகாப்புக்காக கொலைகளை செய்யவது குற்றம் ஆகாது என தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோது,
உண்மையில் பாதுகாப்புக்காக கொலை செய்வது என்று சொன்னால் ஒரே ஒரு கேள்வியை தான் நான் மாறி கேட்கலாம் அவ்வாறு என்றால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றார்கள் பட்டலந்த வதை முகாமில் தாங்கள் கொலைகள் செய்தது என்பதனை ஏற்றுக் கொள்கின்றார்கள் அது ஒரு முக்கியமான விடயம்.
பட்டலந்த வதை முகாமில் பாதுகாப்புக்காக கொலைகள் செய்தவர்கள் என்று கூறினால் வடக்கு கிழக்கில் இருந்த முகங்களிலும் கூட அவ்வாறான கொலைகள் நடந்திருக்கின்றது என்பதனை எந்த சந்தேகங்களும் இல்லாமல் எங்களுக்கு தெரிகின்றது.இது தெரிந்த விடயம் ஆனால் அரசாங்கம் அதனை மறுத்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் திருகோணமலையில் கன் சைட் வதைமுகம் இந்த வதை முகாமில் சித்திரவதைக்கு உள்ளாகிய சாட்சிகள் இப்போதும் இருக்கின்றார்கள். பட்டலந்த வதை முகாமில் கொலைகள் இடம்பெற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியினுடைய தவிசாளர் நியாயமா இல்லையா என்பது பற்றி அவரது கருத்து தொடர்பாக நான் கருத்து கூறவில்லை கொலைகள் நடந்தது சித்தரவதைகள் நடந்தது என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அரசாங்கத்தின் காலத்தின் போது நடந்தது என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியினுடைய இன்றைய தவிசாளர் ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாக நான் பார்க்கின்றேன்.
இந்திய பிரதமரின் வருகைக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதா என கேட்டபோது பதிலளித்த அவர், உண்மையில் எங்களுடைய கட்சியினுடைய தலைவர் செயலாளரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என நினைக்கின்றேன் ஆனால் நான் அறிந்த வகையில் நாங்கள் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக நான் அறிகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாக அவ்வாறான உத்தியோகபூர்வ அழைப்புகள் வராது கட்சிக்கு வரும். எனினும் இதவரை எனக்கு எந்த அழைப்பும் நேரடியாக வரவில்லை.