பிரதமர் மோடி இன்று மாலை வருகிறார்; நாளை பல முக்கிய நிகழ்வுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) வெள்ளிக்கிழமை மாலை இலங்கை வரவுள்ளார்.
‘பிம்ஸ்டெக்’ மாநட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம் தாய்லாந்துக்கு பயணமான இந்தியப் பிரதமர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் அங்கிருந்து இலங்கைக்கு பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை வருமாறு இந்திய பிரதமருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்றே அவர் இன்றைய தினத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்படி நாளை சனிக்கிழமை முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்திய பிரதமருக்கான விசேட வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு உரையாற்றவுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் இருந்து சம்பூர் சூரியசக்தி மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்தல், நாட்டில் வணக்கஸ்தலங்கள் சிலவற்றுக்கு சூரிய சக்தி கட்டமைப்பை வழங்கி வைத்தல் மற்றும் தம்புளை குளிரூட்டி நிலையத்தை திறந்து வைத்தல் ஆகிய நிகழ்வுகளில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் நாளை மறுதினம் அநுராதபுரம் ஶ்ரீமகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளதுடன், அதனை தொடர்ந்து அநுராதபுரத்தில் புகையிரத சமிக்ஞை கட்டமைப்பை திறந்து வைக்கவுள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் போது வலுச் சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்திய பிரதமரின் வருகையையொட்டி கட்டுநாயக்கா, கொழும்பு மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட இடங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.