இலங்கை

கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – ஆராய சிறப்புக் குழு

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை தொடர்பில் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

இந்த விடயத்தை ஆராய்ந்து மேலும் நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான பரிந்துரைகளை சமர்ப்பிக்க சிறப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் துணை பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் அடங்குவர்.

தேவைக்கேற்றவாறு தொடர்புடைய நிபுணர்களின் உதவியைப் பெற இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்கள் என ஐக்கிய இராச்சியம் அண்மையில் தெரிவித்தது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தினால் தடைகள் விதிக்கப்பட்ட ஏனைய இருவர் ஆவர்.

இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் இந்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகார அமைச்சு அப்போதே அதிருப்தி வெளியிட்டிருந்தது.

நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என்றும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் என அமைச்சு
சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.