இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்; தொடர் – 06 ….சங்கர சுப்பிரமணியன்.


இப்போது விட்ட இடமான பழனி ஆண்டவருக்கே வருவோம். அவரை நவபாசானத்தில் செய்திருந்ததால் அதில் மருத்துவ குணம் இருப்பதை தெரிந்து கொண்டவர்கள் அவருக்கு அபிசேகம் செய்கிறோம் என்ற பெயரில் அவரின் உடம்பை நன்றாக சுரண்டி சுரண்டி உண்மையிலேயே அவரை ஆண்டிபோலவே ஆக்கிவிட்டார்கள்.
இனிமேலும் சுரண்டவிட்டால் நிற்கும் ஆண்டி உட்கார்ந்தே போயிருப்பார். அல்லது உடைந்து கீழே விழுந்திருப்பார். மாடசாமி அண்ணாச்சி, நீ பார்த்தாயா என்று என்னிடம் கேட்காதீர்கள். நான் பழனி கோவிலுக்கு சென்றதாக ஞாபகம்இல்லை. பலர் மூலம் பல தடவை கேள்விப்பட்டதையே சொல்கிறேன். ஆதலால் அபிசேகத்தை மூலவருக்கு செய்யாமல் உற்சவருக்கு செய்கிறார்களாம்.
ஜெயா அக்கா வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி ஒரு கொடிமரத்தை பூஜைஅறைக்கு எதிரே வைத்தால் குபேரயோகம் பணத்தை கொட்டிக் கொடுக்குமென்று வத்தலகுண்டு வானமாமலை ஜோசியர் சொன்னாராம். கொடிமரம் வைத்தார்கள் உடனே அவர்கள் மூத்தமகள் விமலா விமானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டாள் என்று வனஜா
சொன்னதாக கதை பரவும்.
அதைக்கேட்ட மோகனா இதென்னடி கூத்து இந்த மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல நாலாயிரமோ அஞ்சாயிரமோதான் ஆகும். அதை பெரிசா சொல்லவந்திட்ட. அதுக்காக புதுசா கட்டின வீட்டை இடிப்பார்களா? வாஸ்து சொன்னவருக்கு பணம் வீட்டை இடித்து கட்ட பணம் என்று ஒரு ஐந்து லட்சம்வரை செலவு செய்வார்களா என்றும் சொல்வாள்.
அட போங்கக்கா அவ விமானத்துல போயிட்டு ஒன்னும் வரல. விமானத்துல பணிப்பெண் வேலை கிடைத்து பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது என்பாள்
வனஜா. நானும் வானமாமலை ஜோசியரை கேட்டு வீட்டை இடிக்கனும் என்று இவரிடம் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு முசுடு ஒரு தரம் சொன்னா கேட்கமாட்டார் என்பாள்.
அதற்கு மோகனாவோ நல்லா இருக்குடி கூத்து. ஜெயா வீட்டில பொட்டையா பெற்று போட்டிருக்கா. விமானப் பணிப் பெண் வேல கிடைச்சுது. உனக்கு இரண்டும் ஆம்பள புள்ள. அதற்காக பைலட் வேலையா கிடைக்கும் என்றாள்? அதைக்கேட்ட வனஜா முகவாய்க்கட்டை வேகமாக தோளில் இடித்தபடி அந்த இடத்தை விட்டு அகலும்
காட்சிகளும் நடந்தேறலாம்.
சரி, இப்ப கட்டுரைக்கு வருவோம். ஆகம முறைப்படி வீட்டில் பூஜை அறையை வைக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதன்பின் பூஜை அறை எங்கிருந்தால் என்ன? கடவுள் என்பவர் நம்மைக் கடந்து நம் உள்ளத்திலேயே இருக்கிறார். அவரை சில இடங்களுக்கு அழைத்து செல்லமுடியாது. மது அருந்தும் இடத்துக்கோ மாமிசம் சாப்பிடும் இடத்துக்கோ அழைத்துச்செல்ல முடியாதல்லவா?
மாடசாமி அண்ணாச்சி இப்போது குறுக்கிடுகிறார். மது அருந்தும் கடவுளரும் மாமிசம் உண்ணும் கடவுளரும் இருக்கிறார்களே என்கிறார். அவருக்கு என்னிடம் உள்ள பதில் இருக்கிறார்கள் என்பதே. ஒவ்வொரு தனவையும் உண்மையைத்தான் சொல்கிறேன் உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறவேண்டியுள்ளது.
ஏனென்றால் படித்து அறிந்ததைத்தான் சொல்கிறேன். இல்லாததை ஒன்றும் சொல்லவில்லை. பெரிய தெய்வங்களாக புராணங்களில் வருபவர் மீன் சாப்பிட்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. மனிதக் கறியையே மகிழ்வுடன் உண்ட கடவுளும் இருக்கிறார். ஆனால் தொழுமிடங்களில் இவர்கள் தூய சைவர்களாகி விடுவார்கள். அவர் வைஷ்ணவராகவே இருந்தாலும் தூய சைவர்தான்.
அதைச் சொல்லப்போனால் பெரிய இடத்து சமாச்சாரம் அதெல்லாம் நமக்கு எதுக்கு என்று நியாயக்கொளுந்து மாடசாமி அண்ணாச்சியே நம் வாயைக்கட்டி விடுவார். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் புராணத்தில் வருபவர் சுத்தமான மரக்கறி உண்டதைப்போல் பொங்கலையும் புளியோதரையையும் படைப்பார்கள்.
ஆனால் சிறுதெய்வங்களாக ஆக்கப்பவர்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு என்ன பயம் என்று இறைச்சி உணவைப் படைத்து வழிபடுகிறார்கள். சாதியில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று மக்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப்போல் கடவுளரில் மது, மாமிசம் சாப்பிட்டு மற்றும்
சுருட்டு பிடிக்கும் கடவுளர்களை சிறுதெய்வப் பட்டியலில் சேர்த்து விட்டா்கள்.
அதற்காக சிறுதெய்வங்களும் கோபம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும் எங்களைத் தொழுபவர்களுக்கும் தெரியும் யாரோ வந்து எங்களை சிறுதெய்வங்கள் என்றால் நாங்கள் சிறுதெய்வங்கள் ஆகிவிடுவோமா என்ன? என்று அதைப் பெரிதாக கண்டுகொள்ளாத மாதிரி தெரிகிறது.
கடவுளர் எவரும் தானாக வந்து பட்டியலைத் தேர்ந்தெடுத்ததில்லை. மனிதர்கள்தான் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியதைப் போல் தங்கள் வசதிக்காக கடவளரையும் பிரித்து வைத்திருக்கிறார்கள். கடவுளர் எல்லாம் மனிதராகப் பிறந்து வாழ்ந்து சித்தியடைந்தவர்கள் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
இதை நான் வேண்டுமென்றே சொல்லவில்லை. நீண்ட நாட்கள் ஆய்வு செய்தபின்னரும் பல நூல்களைப் படித்தும் கற்றறிந்த பெருமக்களை கேட்டறிந்த பின்னர் தெரிந்து கொண்டதேயாகும். நீங்களும் நன்றாக சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு தெரியும். கடவுளரில் என்ன பெருந்தெய்வம் சிறுதெய்வம்?
தெய்வங்கள் எல்லோரும் சமமில்லை என்று சொல்வது குற்றமில்லை என்றால் தெய்வம் என்று ஒன்று இல்லை என்பதும் குற்றமில்லையல்லவா? ஏனெ்றால் பெருந்தெய்வங்களை ஏற்றக் கொள்பவர்கள் சிறுதெய்வங்களை தெய்வங்களாக ஏற்றுக் கொள்வதில்லை. அது போகட்டும் ஆணோ பெண்ணோ இவர்களின் மேல் சாமி வந்து அருள்வாக்கு சொல்கிறார்களா?
நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. வேண்டுமானால் நான் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். இந்த பெருந்தெய்வங்களை மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் வீட்டுல் யாருக்காவது சங்கிலிக் கருப்பன், கருப்பசாமி, வெள்ளைச்சாமி, பேச்சிமுத்து, பிச்சாண்டி, தாண்டவராயன் என்று ஆண்கள் யாருக்காவது பெயர் இருக்கிறதா? ஆண்களுக்குத்தன் அப்படிப்பட்ட பெயர்கள் இல்லை.
பெண்களுக்காவது மாரியம்மா, இசக்கியம்மா, பேச்சியம்மா, அங்காளம்மா, முத்தாரம்மா, செல்லியம்மா, காளியம்மா போன்ற பெயர்கள் உள்ளதா? இந்த பெண்கள் அனைவரும் சக்தியின் மறு வடிவம் அல்லவா? ஒருவேளை ஆண் தெய்வங்களுடன் இருந்தால் மட்டும் அந்த தகுதியைப் பெறுவார்களா?
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்…)