“நதியில் நகரும் பயணம்” … ஹெக்- டெல்ஃவ்ற் -ரொட்டர்டாம்- கீத்தோன் … 14 வது அத்தியாயம்! … நடேசன்.

அடுத்த நாள் எமது பயணம் ஹெக் (Hague), ரொட்டர்டாம் (Rotterdam), டெல்ஃவ்ற் (Delft) என்ற நெதர்லாந்தின் என்ற நகர்களுக்குள் ஊடாகச் செல்வதற்கு அம்ஸ்ரர்டாம் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உல்லாசப் பிரயாணிகளுக்கான இடத்தில் பதிவு செய்திருந்தோம் .
ஒல்லாந்து என்ற பெயரைப் பல இடத்தில் நான் தாறுமாறாக பாவித்த போதிலும் இரண்டு மாகாணங்கள் மட்டுமே வட , தென் ஒல்லாந்து ஆகும். அதைவிட பத்து மாகாணங்கள் சேர்ந்த நாடு நெதர்லாந்து. அம்ஸ்டர்டாம் இருப்பது வட ஓல்லாந்திலேயாகும். ஒல்லாந்து உண்மையில் இலங்கையிலும் சிறிய நாடு. சனத்தொகையும் அதேபோல் (18 மில்லியன்) குறைவானது. இதைவிட நான்கு கரிபியன் தீவுகள் இவர்களோடு இன்னும் காலனிகளாக உள்ளது.
நாங்கள் போக இருந்த ஹெக், ரொட்டடாம், டெல்ஃவ்ற் எல்லாம் தென் ஒல்லாந்தை சேர்ந்த நகரங்களாகும் அம்ஸ்ரர்டாம் நாட்டின் தலைநகரான போதும், அரசும் நாடாளுமன்றம் என்பன இருப்பது ஹெக் நகராகும். இப்படியான ஒரு அமைப்பு தென் ஆபிரிக்காவிலும் உள்ளது.
நாங்கள் அம்ஸ்ரர்டாமிலிருந்து தென் நோக்கி ஹெக் போகும் வழியில் பஸ்சை நிறுத்தியபோது, குழந்தைகளின் பூங்கா போல ஒரு இடம் இருந்தது. இறங்கியதும் மொத்த நெதர்லாந்தின் மாதிரி, ஆனால் சிறிய வடிவம் மடுரோடம் (Madurodam) என்ற பெயரில் அங்குள்ளது . நெதர்லாந்தில் உள்ள விமான நிலையம் , ரோட்டர்டாம் துறைமுகம், காற்றாலைகள் என எல்லாம் யதார்த்தமான சிறிய வடிவமாக அங்குள்ளது.
அதற்கு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் அமைதிக்கான மாளிகை (Peace House) இங்குதான் – ( ICJ-international Court of Justice) உள்ளது. இங்கு உள்ளே செல்ல முடியவில்லை . இது ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத்தின் கீழ் வருவது. ஆனால், இங்கேயும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர அங்கத்தவர்கள் முக்கியமான முடிவை எடுப்பார்கள். சமீபத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இன ஒழிப்பு செய்வதாகக் கொண்டு வந்த வழக்கு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன அழிப்பு என முடிவு செய்த போதிலும் அது இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்டது. மேலும் இதை யார் அமுல் நடத்துவது ?
பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் உள்ளதே!
இரண்டாம் உலகப் போரின் பின்பு இந்தக் கட்டிடம் அமெரிக்கா செல்வந்தர்கள் (Carnegie Foundation) கட்டப்பட்டது.
அடுத்தது டெல்ஃவ்ற் என்ற நகரம் – இந்த பெயரைத்தான் நமது ஊரில் நெடுந்தீவுக்கு வைத்தார்கள். ஒரு காலத்தில் அரச நகரமாக இருந்தது . கால்வாய்கள் நகரத்தினூடாக செல்கின்றன. படகுகளில் ஏறி நகரத்தைப் பார்க்க முடியும். கிட்டத் தட்ட மதிய நேரத்தில் அங்கு சென்றபோது பார்க்கக் கூடிய விடயங்கள் பல, ஆனாலும் மிகவும் கடுகதியில் பார்த்தோம். புது தேவாலயம் என்ற பெரிய கட்டிடம்; அதனுடன் மணி கோபுரமும் உள்ளது. அதுபோல் அங்குள்ள நகர மண்டபமும் அழகான மத்திய காலத்துக் கட்டிடமாகும்.
இந்த நகரம் அக்காலத்தில் ஐரோப்பாவின் போசலின் (Porceline) எனப்படும் பாத்திரம் மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிக்கும் இடமாகும். இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் சீனாவிலிருந்து 1600 களில் இங்கு கொண்டு வரப்பட்டு , 200 வருடங்களாக பல தொழிற்சாலைகளுடன் பெரிய தொழிலாக இங்கு இருந்தது. டெல்ஃவ்ற், போசலின் அக்காலத்தில் அரச, மற்றும் பிரபுக்களின் வீடுகளில் எப்போதும் ஒரு ஆடம்பரப் பொருளாக இருக்கும்.
சீன போசலீனின் நகலான போதிலும் ஐரோப்பாவில் பிரபலமானது. தற்பொழுது ஒரு தொழிற்சாலை மட்டுமே உள்ளது. அங்கு சென்றோம்.போசலினில் இன்னும் கைளால் வண்ணம் தீட்டுகிறார்கள். தற்பொழுது இது உல்லாச பிரயாணிகள் பார்ப்பதற்காகவும் மற்றும் வாங்குவதற்கான இடமாகவும்உள்ளது .
நாங்கள் அங்குள்ள கால்வாய் அருகே நடந்து கடந்து போன ஒரு இடம்: டெல்ஃவ்ற் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இதைப் பற்றிய நினைவுகள் மிருக வைத்தியராக நுண்ணுயிரியல் படித்த எனது மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .
1886இல் இங்கே வைரஸ்சைக் கண்டுபிடித்த பிஜெர்ரினிக் (Martinus Beijerinck’) அவர்களால் புகையிலையில் புள்ளிகளை ஏற்படுத்தும் கிருமி ( Tobacco Mosaic disease) கண்டுபிடிக்கப்பட்டது . அக்காலத்தில் வைரஸ் என்ற பெயர் கொடுக்கப்படவில்லை. அதுவரையும் சிறிய மிருகங்கள் (microscopic creatures| small animals) என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பட்டது இதே பல்கலைக்கழகத்தின் பரிசோதனைச்சாலையில் 1905 இல் அவை வைரஸ் என எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வந்த பின்பே பெயரிடப்பட்டது.
ஆனாலும் பிஜெர்ரினிக் வைரஸ் கண்டுபிடிப்பின், ஆரம்பகர்த்தாவாகக் கருதப்படுகிறார். அவர் பெயரில் விருதுகள் உள்ளது.
மதியத்தின் பின்பாக எங்கள் பஸ் போன இடம் ரொட்டரடாம் ( Rotterdam ) என்ற நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம். இது ரைன் நதியின் கழிமுகத்தில் இருப்பதுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமாகும் (Container port). எங்களுக்கு அந்த துறைமுகப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட மணி நேரம் ஒரு சிறிய கப்பல் பிரயாணம் செய்ய ஒழுங்கு செய்திருந்தார்கள்.
இந்த துறைமுகம் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட 300 வருடங்கள் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை ஏற்றி அமெரிக்காவுக்கு முக்கியமாக கரிபியன் தீவுகள் மற்றும் சூரினாம் போன்ற டச்சு காலனிகளுக்கு கொண்டு சென்று விற்பார்கள்.
அந்த அடிமைகளால் உற்பத்தி செய்யப்படும் கரும்பு, கோப்பி என்பனவற்றின் செல்வத்தால் முழு நெதர்லாந்தும் வளர்ந்தது . பின்பு அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டபின் காலனி நாடுகளான இலங்கை- இந்தோனேசியாவிலிருந்து வாசனைத் திரவியங்களை மற்றைய பண்டங்கள் இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது என்ற வரலாறு மனதில் அலைமோதியது .
மற்றைய ஐரோப்பிய நகரங்கள் போல் அல்லாது ரோட்டர்டாம் புதிய நகரம். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் படைகள் இருந்ததால் முற்றாக நேச நாடுகளால் அழிக்கப்பட்டு புதிதாக மீண்டும் உருவாக்கப்பட்ட நகரமிது. இங்குள்ள கட்டிடங்கள் நவீனமான கட்டிடக்கலையை பிரதிபலிப்பன. நகரத்தில் ஒரு அழகான சந்தைக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அங்கு உலகத்தின் எல்லாப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளது. இங்கு எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் வியாபாரம் செய்கிறார்கள். நாங்கள் லெபனானை சேர்ந்த வியாபாரியிடம் மிகவும் குறைந்த விலையில் ஒரு பயணப் பையை வாங்கினோம். அது சீனாவிலிருந்து வந்திருந்தது.
சந்தைக்கு அருகே ரயில் நிலையம் இருந்தது அதைவிட அருகில் பூங்காவும் அதனருகே கண்ணாடியாலான நவீன கலை வடிவம் ஒன்று இருந்ததை பார்க்க முடிந்தது .
எங்களது அடுத்த நாள் பயணம் எதுவித கார் பாதைகளில்லாத கால்வாய்களால் பயணிக்கும் கீத்தோன் (Giethoorn) என்ற ஒரு விவசாய கிராமத்திற்குச் சென்றோம்.
தற்போது இங்கு சைக்கிள் பாதைகள் மட்டுமே உள்ளது இந்த கால்வாய்கள் வீடுகளுக்கு எதிரே பாதைபோல் செல்கிறது. கால்வாய்கள் ஒரு சங்கிலிப்பின்னலாக அந்த கிராமத்தை இணைத்து, இறுதியில் இந்த பெரிய ஏரியொன்றில் செல்கிறது . ஒரு காலத்தில் அது விவசாயப் பிரதேசம், தற்போது விவசாயிகளது வீடுகள் உல்லாசப் பிரயாணிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளின் கூரைகள் ஏரிகளில் விளையும் ஒருவகைப் புற்களால் வேயப்பட்டிருந்தன. இங்குள்ள வீடுகள் எனக்கு ஊரை நினைவு படுத்தியது. உண்மையில் நாற்சார வீடுகளாகத் தென்னிந்தியக் கலாசாரத்தை ஒட்டி இருந்த யாழ்ப்பாணத்து வீடுகளை ஒல்லாந்துக்காரர்களே தங்களது வீடுகள்போல் மாற்றினார்கள். குளிர் தேசத்துக்குரிய கட்டிட அமைப்பைக் கண்ணை மூடியபடி எல்லோரும் எல்லோரும் பின்பற்றுகிறோம் .
பிரித்தானிய கல்வி முறை, ஒல்லாந்துக்காரரின் வீடமைப்பு போர்த்துக்கீசியரின் மதம் எல்லாவற்றையும் இரவல் வாங்கி சிந்தனையில் போட்ட நாங்கள் இதுவரையும் சொந்தமாகச் சிந்திக்க மறுக்கிறோம் என்ற எண்ணம் கீத்தோன் படகுகளிலிருந்து பார்த்தபோது வந்தது. அவர்களைப்போல் நாங்கள் தென்னை ஓலையில் வீட்டுக்கூரை மேயத் தவறிவிட்டோம் . பன்னாடையாக நடக்கிறோம் அல்லவா?
கால்வாய்களில் அலுமினியம் படகுகளை நீங்கள் செலுத்த முடியும் அல்லது கூட்டாகப் பிரயாணம் செய்யலாம் . சில மணித்தியாலங்கள் பின்பாக எனக்கு போர் அடித்தது ஆனாலும் தொடர்ந்து பலர் வந்து வண்ணமிருந்தார்கள் – இந்த இடத்தை நெதர்லாந்தின் வெனிஸ் என்கிறார்கள் . ஏரியில் வெள்ளை அன்னங்கள் குடும்பத்தோடு சென்றன. அவுஸ்திரேலியாவில் கருப்பு அன்னங்ளைப் பார்த்த எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
உலகத்தில் ரியுலிப் மலர்கள் அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு நெதர்லாந்து. ஆனால், எங்கள் பயணம் எந்த ரியுலிப் பூங்காவிற்கும் போகாமல் முடிவடைந்தது. நாங்கள் போன வசந்த காலத்தில் பூக்களின் மகரந்த மணிகளின் ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா எனக்கு அதிகமானதால் பல இடங்களில்நான் முகக்கவசம் போட்டிருந்தேன்.