இலக்கியச்சோலை

மெல்பனில் நடந்த தமிழ்ச்சாதனை விழா!

V. C. E. உயர்தரப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு விருது ! !

பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம்

பாராட்டப்பட்டார் ! ! !

“ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு மெல்பனில் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் எழுத்தாளர் விழா, இலக்கிய சந்திப்பு, வாசிப்பு அனுபவப்பகிர்வு மற்றும் கண்காட்சிகளையும் அனைத்துலக பெண்கள் தின விழாக்களையும் நடத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டு, முதல் தடவையாக விக்ரோரியா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த V. C. E. உயர்தரப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில் தமிழ்ச்சாதனை விழாவை ஒழுங்கு செய்திருக்கிறோம். “

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை 30 ஆம் திகதி மெல்பனில் நடந்த விழாவில் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளரும், ஓவியருமான திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மங்கல விளக்கேற்றலுடனும், அவுஸ்திரேலிய தேசிய கீதம் மற்றும் தமிழ் வாழ்த்துடனும் ஆரம்பமான இவ்விழா, மெல்பனில் கிளன்வேவெலி சமூக மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் திருமதி சாந்தி சந்திரகுமார் நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் செயற்பட்டார்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொப்பிசைப்பிதா , பேராசிரியர் நித்தி கனகரத்தினம் அவர்களின் சேவைகளை பாராட்டி விருது வழங்கும் நோக்கத்துடனும் இந்த தமிழ்ச்சாதனை விழா நடத்தப்பட்டது.

மெல்பன் இளம் மிருதங்க கலைஞரும், வளர்ந்துவரும் புதிய தலைமுறை பேச்சாளருமான செல்வி அபிதாரணி சந்திரனின் மிருதங்க இசையுடன் விழா ஆரம்பமானது.

சங்கத்தின் தலைவர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தமது தலைமையுரையில் மேலும் குறிப்பிடுகையில் ,

“ 2019 முதல் எமது சங்கம் ஈழத்து எழுத்தாளர்களின் சிறு கதைத்தொகுதி, நாவல், கட்டுரை கவிதை எனும் நான்கு பிரிவின்கீழ் ஒவ்வொரு நூலுக்கும் இலங்கை நாணயத்தில் 50 ஆயிரம் ரூபா பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவித்து வருகிறது. எமது சங்கத்தின் இந்த பங்களிப்பு, இலங்கை படைப்பாளிகளை ஊக்குவித்து கௌரவிப்பதுடன் அவர்களின் படைப்புகளுக்கு தமிழ் உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்கிறது. இளைஞர்கள் மத்தியில் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நாம் வாசிப்பு அனுபவ பகிர்வை நேரடியாகவும் மெய்நிகர் ஊடாகவும் கடந்த காலத்தில் நடத்தினோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“ விக்டோரிய மாநிலத்தில் தமிழை ஒரு பாடமாக கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிப்பது மட்டுமன்றி, இனிவரும் காலங்களிலும் தமிழைக் கற்க மாணவர்களை ஊக்குவிப்பதும் அதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுமே எமது சங்கத்தில் நோக்கமாகும். இந்தப்பணிக்கு உறுதுணையாக மாணவர்களை தமிழில் பரிச்சியம் மிக்கவர்களாகவும் பரீட்சையில் சித்தியெய்தவும் விக்ரோரியா தமிழ் சங்கம் மற்றும் பாரதி பள்ளி ஆகிய இரு அமைப்புகள் முன்னோடியாக திகழ்கின்றன.. இவற்றின் ஆசிரியர்கள் சிறந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றி மாணவர்களை தயார் செய்வதுடன் தமிழ் மொழி மீது உண்மை பற்றுதலுடன் தமது பள்ளி நாட்களை கடந்து செல்ல உதவுகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த மாணவர்களை கௌரவிப்பது எமது கடமை என்று உணர்ந்த எமது சங்கம், இவ்வருடம் இந்த நிகழ்வை முதல் முறையாக ஒழுங்கு செய்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலும் இதைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவதே எமது எண்ணம், “

தமிழ்ச் சாதனையாளர்களான விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தின் பாடசாலை, மற்றும் பாரதி பள்ளி மாணவர்களுக்கான விருதுகளை சங்கத்தின் நிதிச்செயலாளர் திருமதி சிவமலர் சபேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. மணியன் சங்கரன், பேராசிரியர் ஶ்ரீ கௌரி சங்கர் ஆகியோர் வழங்கினர்.

விருது பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் சாய்சரண் பார்த்திபன் உரையாற்றினார்.

விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பாடசாலைகளின் சார்பில் இச்சங்கத்தின மூத்த தலைவர் திரு. முருகேசு பரமநாதன் அவர்களை , அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளர் எழுத்தாளர் திரு. வி. எஸ். கணநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

பொப்பிசை பிதா நித்தி கனகரத்தினம் அவர்களின் நீண்ட கால இசைப்பயணம் குறித்து சங்கத்தின் துணைச்செயலாளர் எழுத்தாளர் நொயல் நடேசன் “ நித்தி கனகரத்தினத்தின் பன்முகம் “ என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “ நாம் பாடசாலை மாணவர்களாக இருந்த காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்தில் நித்தி கனகரத்தினம் அவர்களின் பொப்பிசைப்பாடல்கள் நன்கு பிரசித்தம் பெற்றிருந்தது. அவர் இன்று வரையில் பாடிக்கொண்டிருக்கிறார். இதுவே அவரது சாதனை.

பல தலைமுறையினர்கள் நித்தியின் பாடல்களை கேட்டு வருகின்றனர். “ என்றார்.

நித்தி கனகரத்தினம் எழுதியிருக்கும் பாரம்பரிய தமிழர் உணவுகளின் யோசனைக்கூறுகள் என்ற நூலை மருத்துவர் ( திருமதி ) சியாமளா நடேசன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

இவர் தமது உரையில், “ எமது சமூகம் அவசர உணவுகளை ( Fast Food ) உட் கொண்டு நோய் உபாதைகளை தேடிக்கொள்கிறது. இந்தப்பின்னணிகளை மனதிலிருத்தி. இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டிய நூல்தான் இது. இதனை அவர் ஆங்கிலத்திலும் எழுதவேண்டும். “ என்றும் கூறினார்.

பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினத்திற்கு சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் முருகபூபதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் தலைவர் கிறிஸ்டி நல்லரெத்தினம், பாராட்டு விருதினை வழங்கினார்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் எழுத்தாளர் பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா எழுதிய பாராட்டு மடல் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட விருதும் வாசிக்கப்பட்டது.

விழாவின் இறுதியில் நித்தி கனகரத்தினத்தின் ஏற்புரையுடன் அவரது சில பாடல்களும் இசைக்கப்பட்டன.

நித்தி கனகரத்தினம் தம்பதியரின் திருமண நிறைவு நாள் காலப்பகுதியில் இந்த விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

தனது இசைப்பயணத்தில் தன்னோடு தொடர்ந்து இணைந்திருக்கும் தமது அன்புத்துணைவியாருக்கு நித்தி கனகரத்தினம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் திருமதி நித்தி கனகரத்தினம் அவர்களுக்கு மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்தினார்.

புகலிடத்தில் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் இதுபோன்ற விழாக்கள் எதிர்காலத்திலும் நடைபெறல் வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.