இந்தியா

இலங்கை தமிழ் அகதியின் மக்களுக்கு இந்திய குடியுரிமை!; மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் 1984 ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்து -தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு கோவையில் அத் தம்பதியருக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்து, அக்குழந்தை கோவையிலேயே பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்தவரை திருமணம் செய்து 37 ஆண்டுகள் கோவையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்க பதிவை புதுப்பிக்க அணுகிய போது, சரவணமுத்து- தமிழ்செல்வி தம்பதியரின் பதிவை புதுப்பிக்க மறுத்ததுடன் 1987 ஜூலைக்கு பிறகு பிறந்தவர் இந்தியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் மட்டும் இந்திய குடியுரிமை கேட்க முடியாது எனக்கூறி ரம்யாவின் இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனுதாரர் இலங்கைக்கு சென்று ஆவணங்களை பெற்று இந்தியாவுக்கு வரும்படி கூறுவது தேவையில்லை என்றும் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்து 37 வருடமாக வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஒன்லைன் மூலம் குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அளிக்க மனுதாரரை அனுமதிக்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த விண்ணப்பம் மீது சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பித்தின் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.