முருகபூபதியின் “யாதுமாகி” ( இரண்டாம் பாகம் ) மெய்நிகரில் அறிமுகமான மின்னூல்! …. மெல்பன் ராஜா.

முருகபூபதியின் யாதுமாகி ( இரண்டாம் பாகம் )
மெய்நிகரில் அறிமுகமான மின்னூல் !
அவதானக் குறிப்புகள் ! ! ….. மெல்பன் ராஜா.
ஆஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதி முருகபூபதி அவர்கள் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு எழுதியிருந்த யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) மின்னூல் அண்மையில் மெய்நிகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றியவர்களின் வாசிப்பு அனுபவத்தை அவதானித்து, இந்தக்குறிப்புகளை எழுதுகின்றேன்.
முருகபூபதி அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலகபெண்கள் தினம் வந்தபோது, யாதுமாகி மின்னூலின் முதலாம் பாகத்தினை வெளியிட்டிருந்தார். அந்த நூல் அமேசன் கிண்டிலில் கிடைக்கிறது. அந்த நூலில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த இரண்டாம் பாகத்தில் 30 பெண் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை. இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா , கனடா முதலான நாடுகளில் வாழ்ந்து மறைந்தவர்கள், மற்றும் தற்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் வாழ்வையும் அவர்தம் பணிகளையும், அவர்களின் கலை, இலக்கிய பங்காற்றுகைள் பற்றியெல்லாம் முருகபூபதி இந்த இரண்டாம் பாகத்தில் பதிவுசெய்துள்ளார் என்பதை, குறிப்பிட்ட மெய்நிகர் நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.
யாதுமாகி இரண்டாம் பாகத்தை தற்போது அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கமுடியும்.
ஆஸ்திரேலியாத் தலைநகர் கன்பரா தமிழ்க்களஞ்சியம் காணொளி ஊடாக திரு. தமோ பிரம்மேந்திரனால் இந்நூல் மெய்நிகரில் அறிமுகமானது.
மெல்பனில் வதியும் எழுத்தாளரும் யாதுமாகி இரண்டாம் பாகம் உட்பட முருகபூபதியின் நூல்களுக்கு முகப்பு ஓவியம் வரைந்துவருபவருமான எழுத்தாளர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம், இந்நிகழ்விற்கு தலைமைதாங்கினார்.
குறிப்பிட்ட மெய்நிகர் முழுக்காணொளியையும் பார்த்து வியந்தேன். பின்னர் அதன் இணைப்பையும் என்னால் பார்க்க முடிந்தது.
இந்நிகழ்வில் என்னையும் இணைத்துக்கொண்ட எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கின்றேன். அத்துடன் யூடியூப் செயலிக்கும் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும்.
முப்பது பெண் ஆளுமைகள் குறித்த நூலினை வாசகர், இளம் மற்றும் மூத்த படைப்பாளுமைகளான ஐவர், ஆளுக்கு தலா ஆறு அத்தியாயங்கள் என எடுத்துக்கொண்டு உரை நிகழ்த்தியது செறிவாகவும் அப்பெண் ஆளுமைகள் குறித்து அறிந்து வியக்கவும் வழி செய்தன.
இவ்வாறான ஏற்பாட்டின் மூலம் ஒரு நூல் குறித்து, அந் நூலில் இருந்து பெறப்படுவது என்ன? அது எவ்வாறு இனி வரும் காலத்தில் எமது தமிழ் சமூகத்தில் வளம் சேர்க்கும் என ஐந்து வகையான தேர்ந்த வாசக அனுபவ பகிர்வின் மூலம் காண்போர் அனைவரிடத்திலும் தெளிவை ஏற்படுத்தும் உரைகள் அவை.
உரைகளாற்றிய அனைவரும் நூலில் இடம் பெற்ற பெண்ணாளுமைகள் குறித்து பேசியது மட்டுமல்லாமல் நூலாசிரியரான முருகபூபதி பற்றியும் பேசி , வியக்கச் செய்தனர்.
நூல் பற்றிய உரைகள் ஆற்றிய கலை, இலக்கியவாதிகள் அனைவரது உரைகளிலும் ஒருமித்த கருத்தாக இருந்தது இதுதான்: இந்நூல் மிகச்சிறந்த வரலாற்று ஆவணம் என்பதும் , இந்நூலை உருவாக்க முருகபூபதி, மேற்கொண்ட மிகக் கடின உழைப்பை பற்றியதும்தான். குறிப்பாக கடைசி இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடிக்கும்ளையில் , முருகபூபதி உடல் நலம் குன்றி, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். சிகிச்சையின் போதும் தளராமல் நூலினை எழுதி முடித்திருக்கிறார்.
உரையாளர்கள் அனைவரும் முருகபூபதியோடு கொண்டிருந்த தனிப்பட்ட நட்பை பற்றியும் அவரது சிறிய வழிகாட்டலையும் பற்றி குறிப்பிட்டதில் வியப்பொன்றுமில்லை.
முதலில் உரையாற்றிய சிட்னி எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா பிரபா அவர்கள் இதனைப் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து மெல்பன் வாசகர் வட்ட நண்பர் அசோக் அவர்கள், முருகபூபதி வாழ்ந்த மோர்வல் வீட்டில் அவரைச்சந்தித்தவேளையில் பெற்ற அனுபவங்ளையும், முருகபூபதியின் நினைவாற்றலையும் பேசியதுடன், அவரது சினிமாபற்றிய அறிவு தொடங்கி ஆழ்ந்த அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்தும் வியந்து பேசினார். குறிப்பிட்ட சந்திப்பின்போது நானும் அங்கு உடனிருந்தேன். அக்கருத்துக்கு நானும் ஒரு நேரடி சாட்சி. எழுத்தாளர் பாடும் மீன் ஸ்ரீ கந்தராஜா அவர்கள் உரையாற்றும்போது, பாரதியாரின் ” பெண்மை வாழ்க என கூத்திடுவோமடா” எனும் கவிதை வரிகளில் தொடங்கி காலத்திற்கு காலம் பலர் ஆளுமை மிக்க பெண்பாற் புலவர்கள் ஔவை உட்பட பலரை பதிவு செய்தே வந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக யாதுமாகி நூலை ஒப்பிட்டு அவர் பேசியது சிறப்பு,
முருகபூபதி அவர்கள் சிறந்த ஆளுமைகளை ஆவணப்படுத்தும் அதே வேளையில் புத்தகங்களை நேசித்து வாசிக்கும் வாசகர்களையும் அறிமுகப்படுத்தி வந்திருப்பவர். அந்த தொடருக்கு வாசகர் முற்றம் எனப்பெயரிட்டிருந்தார்.
இதுபற்றியும் முருகபூபதி தமது நூலில் பதிவுசெய்துள்ளார். , தரமான நூல்களை அடையாளம் காணவும் வாசிப்பில் மற்றும் உரையாடலில் தேர்ச்சி பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தும் மெல்பன் வாசகர் வட்டத்தினால் – “வாசகர் முற்றம்” எனும் தொடரை எழுதும் எண்ணம் தனக்கு ஏற்பட்டது என்பதையும் அழகாக இந்நூலில் பதிவு செய்திருந்தார்.
எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசன் அவர்கள், உரையாற்றும்போது, “ ஒரு பத்திரிக்கையாளனின் முக்கிய வேலையானது சமூகத்தில் முக்கியமானவர்களை அடையாளம் காண்பிப்பதுதான். அதை முருகபூபதி தொடர்ச்சியாக தங்கு தடையின்றி, இன்று வரையில் அயராது செய்து வருகிறார் என்று கூறியதுடன், மேலும் நூலில் இடம் பெற்ற பெண் ஆளுமைகள் எவ்விதம் மற்றவரது துன்பங்களை உள்வாங்கி அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வு தருகின்றனர் என்றும், கவிதையின் உள்ளடக்கம்
என்பது மொழி, இனம் மதம் கடந்து இருக்க வேண்டும் என்பதை நூலில் இடம் பெற்ற படைப்பாளுமை கவிஞர் அநார் அவர்களின் கவிதை வரிகளின் வழியாக விளக்கிக் கூறினார்.
அவதானித்தலின் மூலம் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் கூட எங்கனம் சிறுகதைகள் ஆகின்றன என்பதை பற்றியும் கூறி , எழுத்தாளர் தேவகி கருணாகரனின் படைப்புகளை நினைவூட்டினார். ஆர்வமூட்டும் இவ்வாறான செய்திகளை நடேசன் விளக்கிக் கூறினார்.
யாதுமாகி நூல் குறித்து இறுதியில் உற்சாகமாகப் பேச வந்த எழுத்தாளர் திரு. ஜே கே அவர்கள், உலகப் பெண்கள் தினத்தில் ஒரு ஆண் எழுதிய நூலைப் பற்றி ஐந்து ஆண்கள் பேசுவது புதுமை என நகைச்சுவையாகச் சொல்லி, ஆர்வத்தை தூண்டும் நபர்களை அன்றாட நாட்களில் காண நேரும் போது அவர்களிடம் காணும் சில பண்புகளை சில கணங்கள் யோசித்து விட்டு பின்னர் மறந்து விடுவதுண்டு. ஆனால், முருகபூபதி தான் அவதானித்த ஆளுமைகளின் சிறப்பான பணிகள் குறித்தும் அவர்களின் பண்புகள் குறித்தும் ஆவணப்படுத்தி, அவர்களை நோக்கி அனைவரினதும் கவன ஈர்ப்பை செய்திருக்கிறார். இது ஒரு மகத்தான பணி என்று குறிப்பிட்டு, முருகபூபதியுடனான தனது நட்பையும், உரிமையையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.
நூலில் இடம்பெற்றுள்ள படைப்பாற்றல் கொண்ட பெண் ஆளுமைகளின் படைப்புகளில் உள்ள அபூர்வமான சில தகவல்களையும் ஜே.கே. எடுத்துரைத்தார்,
சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய ஆளுமைகளை அடையாளம் காண்பிப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். “நெடுநீர் மறவி மடித்துயில் நான்கும் கெடுநீரார் காமக்களன் ” எனும் திருக்குறளை கூறி பலரும் அதுபோன்ற தோணியில் பயணிப்பதாகவும், அங்கே வேகமாக கடந்து செல்லும் ஒரு தோணியில் முருகபூபதி , ” என்னைப் பார் என்னைப் பார் என்னைப் போல் பணி செய் “ எனக் கூறி அவரது தோணியில் இணையுமாறு அழைப்பதாகவும் நகைச்சுவையாக சொல்லிய அதை வேளையில் , முருகபூபதி அவர்கள் எவ்வளவு உற்சாகமாக செயல்படும் ஓர் எழுத்தாளுமை என்பதை புரிய வைத்திருந்தார்.
நூலில் இடம் பெற்றிருக்கும் ஜெர்மனியில் வதியும் பெண் ஆளுமைகளில் ஒருவரான திருமதி சந்திர கௌரி சிவபாலன் அவர்கள் நன்றி பாராட்டும் விதமாக முருகபூபதியைப் பற்றி குறிப்பிடும் பொழுது, முருகபூபதிக்கு ரஸஞானி என்ற புனைபெயரும் உண்டு, என்றார். மேலும் ரசவாதி என்றால் மண்ணை பொண்ணாக்குபவர்,
இவரோ ரசஸஞானி ! தான் ரசித்தவற்றை பகுத்து அறிந்து பிறருக்கும் அதை ரசிக்கும் வண்ணம் அளிப்பவர் என்றும் சொன்னார்.
பெண் எழுத்தாளராக ஒருவர் இருப்பது எவ்வளவு விருப்பத்தடைகளை உடையது, எவ்வாறு அதையும் விருப்பத்தோடு ஏற்று படைப்பையும் செய்து வருவது குறித்து சிறு கவிதை மூலம் வெளிப்படுத்தி தன் நன்றியையும் பதிவு செய்தார்.
தொடர்ந்து எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வி அவர்களும் பாண்டிச்சேரியில் இருந்து பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களும் தமது கருத்துக்களைக் கூறினர்.
இறுதியாக ஏற்புரை வழங்கிய முருகபூபதி, தனது ஏற்புரைக்குப் பின்னர் உடனடியாக வேறொரு மெய் நிகரில் கலந்துகொள்ள இருப்பது பற்றியும் கூறினார். அன்றைய நாளில் மொத்தம் மூன்று மெய்நிகரில் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.
இது ஜேகே அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக இருந்தது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில் முருகபூபதியை காண வருபவர்களின் எண்ணிக்கையை கண்டு, அங்கு பணியாற்றும் மருத்துவரும் செவிலியரும் “ தாங்கள் யார்? “ என அவரிடம் கேட்க , அதற்கு அவர், கூகுளில் Letchumanan Murugapoopathy ( லெட்சுமணன் முருகபூபதி ) என்று அடித்துப் பாருங்கள் என விளையாட்டாகச் சொன்னாராம்.
கூகுள் தரும் பெரும் தகவல்கள் போல் அல்லாமல், யாதுமாகி நூல் குறித்து உரை நிகழ்த்திய அனைவரும் முருகபூபதியை அறிந்தவர்கள் என்பதால் , பேச்சாளர் திரு. அசோக்கின் கூற்றுப் போல அன்பும் உயிரோட்டமும் கலந்து மிகவும் ஆர்கானிக் காகவே அவர்களின் உரைகள் இருந்தன.
யாதுமாகி நூல் குறித்து பேசிய அனைவரது உரைகளிலும் இரண்டு பொதுக் கருத்துக்கள் இருந்தன, ஒன்று இந்த நூல் வரலாற்று பதிவுகள் என்பது, அடுத்த தலைமுறையினருக்கு ஆர்வமும் ஆய்வும் செய்ய தூண்டும் வகையிலே அனைத்து தகவல்களும் உள்ளதாக உரையாற்றிய அனைவரும் தெரிவித்தனர்,
இரண்டாவதாக ஆஸ்திரேலிய மண்ணில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் முருக பூபதி அவர்கள் அனைவருக்குமான நண்பராகவும் வழிகாட்டுபவராகவும் இருந்துள்ளார் என்பதே!
இக்காணொளியில் நான் கண்டு ரசித்ததை, அதனைக் காணத்தவறியவர்களுக்காகவே இதனை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இனி வரவாக இருக்கும் முருகபூபதியின் ஆஸ்திரேலியா தமிழ் இலக்கியம் எனும் மற்றும் ஒரு நூல், வெளியாகும்போது, நாம் மேலும் பல செய்திகளை முருகபூபதி மூலம் தெரிந்துகொள்வோம்.
முருகபூபதி மேலும் பல ஆக்கங்களை தமிழ் இலக்கிய உலகிற்கு வரவாக்கவேண்டும். அதற்கு அவருக்கு ஆயுளும் ஆரோக்கியமும் இருக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
Good messages for readers who missed the event.