கட்டுரைகள்

“தறுதலை” அரசியல்வாதிகளை உருவாக்குவது யார்?… நியூசிலாந்து சிற்சபேசன் 

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறாமலேயே இருந்திருக்கலாமோ என்று நினைக்குமளவுக்கு, ஏழுக்கு மேற்பட்ட தசாப்தங்கள் கடந்துவிட்டன.

சேனநாயக்கா முதல் விக்கிரமசிங்க வரை, பண்டாரநாயக்க முதல் ராஜபக்சா வரை, வாரிசு அரசியல்வாதிகள் முதல் இடதுசாரிகள் வரையான அனைத்து அரசியல்வாதிகளுமே தம்மை தலைவர்களெனச் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், யாருமே தலைவராக வளரவில்லை.

அவர்களுடைய, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. அறம் தவறுவதையே தாரக மந்திரமாக்கிக் கொள்கின்றனர்.

1952ல் கல்லோயவில் சன்னதம் ஆரம்பமாகியது. 1980களில் வெலிஓயாவில் வீரியமடைந்தது. முள்ளிவாய்காலுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளெங்கும் கோரத்தாண்டவமாடுகின்றது. குருந்தூர்மலை, செம்மலை நீராவி என எங்கும் – எதிலும் – எப்போதும் ஆக்கிரமிப்புத் தொடர்கின்றது. தையிட்டி, மயிலத்தமடு-மாதவணை என்பவை கொதிநிலையில் காணப்படுகின்றன.

யுத்தக் காலங்களில், பெருவாரியான தனியார் காணிகள் தமிழ் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்த பின்னரும் அவை விடுவிக்கப்படவில்லை. அவ்வப்போது, அற்பசொற்ப காணிவிடுவிப்பு கண்துடைப்பாகவே செய்யப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் காணமல்போகத் தொடங்கியிருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், எந்தமுடிவும் கிடைக்காத ஏக்கத்துடனேயே, இறக்கின்றனர். மற்றையோர், போராடிக்களைத்து நடைப்பிணங்களாகத் திரிகின்றனர்.

இவைபற்றியெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகள் அக்கறை கொள்வதில்லை.

தமிழ் மக்கள் தொடர்பில், சிங்கள அரசியல்வாதிகளிடம், எத்தகைய பேதமும் கிடையாது.

பௌத்த – சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், லிபரல் (தாராளவாத) முகமூடி அணிந்த விக்கிரமசிங்க வகையறாக்கள், “ரட்ட அனுரட்ட” போன்ற கோஷத்தோடு சிம்மாசனத்தைப் பிடித்த “தோழர்” கள் என அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகும். மனிதவுரிமை மீறல்களுக்கும், யுத்தக் குற்றங்களுக்கும் யாருமே பொறுப்புக்கூறத் தயாரில்லை.

அண்மைய சம்பவமொன்றுகூட அதற்கு சாட்சியாகின்றது.

சர்வதேச முன்னெடுப்புகளின் விளைவாக, “இலங்கை பொறுப்புக் கூறலுக்கான ஏற்பாடு” என்னும் பொறிமுறை உருவாகியது. அஃது, யுத்தக்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கானவொரு சர்வதேசப் பொறிமுறையாகும். அதனுடைய பணிகள் 2021 மார்ச்சில் ஆரம்பமாகியிருந்தது.

2025 பெப்ரவரியில், ஐநா மனிதவுரிமை பேரவையின் 58வது கூட்டத் தொடரிலே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேசினார். அதன்போது, ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார்.

அதுவே, “நாமெல்லாம் இலங்கையர்” என்பதை நம்பிய வாக்காளர்களுக்கு “தோழர்”கள் கொடுக்கின்ற பரிசாகியிருக்கின்றது.

மனிதவுரிமை மீறல்களுக்கும், யுத்தக்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூற முடியாது. இராணுவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே தென்னிலங்கை திரும்பத் திரும்பச் சொல்கின்ற செய்தியாகும்.

அதுவே கடந்தகால வரலாறுமாகும்.

முள்ளிவாய்க்காலுக்கு பிந்தைய காலத்தில், ஐநா செயலாளர் நாயகம் பொறுப்பை பாங் கீ-முன் அலங்கரித்தவர். மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கவனத்தைக் கொண்டிருந்தவர். நீதிநிலைநாட்டப் படவேண்டுமென்பதில் கரிசனை கொண்டிருந்தவர். அதனால், ஐநாவின் கூர்மையான பார்வைக்குள் இலங்கை அகப்பட்டிருந்தது.

அதனால், அன்றைய சனாதிபதி மகிந்த ராஜபக்சா விசாரணைக் குழுக்களை அமைத்தார். அவை அரசினுடைய நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வகையிலேயே செயற்பட்டன. அதனால், உண்மையைக் கண்டபோதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டன. அதையும்மீறி, அற்பசொற்ப உண்மைகள் துருத்திக்கொண்டு வெளிப்படவே செய்தன. ஆனால், அவற்றை அன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஐநாவின் தீர்மானங்களை, எந்தவொரு இலங்கை ஆட்சியாளருமே, ஆதரிக்கவில்லை. அதனை எதிர்ப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தனர். அதனால், இணை அனுசரனை வழங்கவில்லை.

ஒரே விதிவிலக்கு, 2015ல் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்திற்கு, “நல்லாட்சி” இணை அனுசரணை வழங்கியமையாகும். அதனுடைய, சூத்திரதாரி அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பது ஊரறிந்த இரகசியமாகும்.

பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச முன்னெடுப்புகளுக்கு எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் மசிந்ததில்லை. அதற்கு, ரணில் விக்கிரமசிங்க மட்டுமே விதிவிலக்கு என்னும் தோற்றத்தைக் கட்டமைத்திருந்தார்.

பொறுப்புக்கூறலுக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். நிலைமாறுகால நீதி தொடர்பில், நம்பிக்கையை கட்டியெழுப்புவதான தோரணையை ஏற்படுத்தினார்.

வேஷம் நிலையற்றதுதானே.

அண்மையிலே சர்வதேச தொலைக்காட்சி நேர்காணலிலே, பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதை, ரணில் விக்கிரமசிங்க, பகிரங்கமாகச் சொல்லியுள்ளார்.

அப்படியெனில், ஐநாவின் தீர்மானத்துடன் இணைந்து செயற்படுவதாக “நல்லாட்சி” யின்போது சொன்னமை “பாவலா” தானே?

ஆக, கடந்த ஏழுக்கு மேற்பட்ட தசாப்தங்களிலே “உள்ளொன்று வைத்து, புறமொன்று செய்வதே” சிங்கள ஆட்சியாளர்களின் பாரம்பரியமாகியிருக்கின்றது.

அரசியல்வாதிகள் தொடர்பில், ஏமாற்றுக்காரர் என்னும் படிமம் பொதுவானதாகும்.

ஆனால், அரசியல்வாதிகளின் கடிவாளம் பொதுமக்களிடமே காணப்படுகின்றமையே சனநாயகத்தின் மாண்பாகும்.

விழிப்புணர்வுடன்கூடிய சமூகத்திலேயே சனநாயகம் கோலேச்சலாம்.

“இந்திராவே இந்தியா” எனக் கோஷம் எழுப்பியவர்களே, “அவசரகாலச்சட்டத்தை” அமுல்படுத்திய இந்திரா காந்தியை தோற்கடித்தனர்.

“இரும்புப் பெண்மணி” எனக் கொண்டாடப்பட்ட பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சருடைய “வீறாப்பு”, கட்சியைப் பாதிக்கத் தொடங்கியபோது கடாசி வீசப்பட்டார்.

கொரோனோத் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலே நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் சர்வதேசக் கவனத்தைக்கூட ஈர்த்தவர். அதன்பின்னர் ஆட்சியில் ஈடாட்டம் ஏற்பட்டபோது, ஜசிந்தா ஆர்டனின் லேபர் கட்சியை வாக்களர்கள் தோற்கடித்தனர்.

இன்றளவும்கூட, நல்லதொரு அரசியல்வாதிக்கு இலக்கணமாகச் சொல்லப்படுகின்ற “கர்மவீரர்” காமராஜரை, 1967 சட்டமன்றத் தேர்தலிலே விருதுநகர் வாக்காளர்கள் தோற்கடித்தனர்.

ஆக, இலங்கையிலே “தறுதலை” அரசியல்வாதிகளையும், அதனுடைய தொடர்ச்சியாக “தறுதலை” ஆட்சியாளர்களையும் உருவாக்குவது வாக்காளர்களேயாகும்.

Loading

2 Comments

  1. “தறுதலை” அரசியல்வாதிகளையும், அதனுடைய தொடர்ச்சியாக “தறுதலை” ஆட்சியாளர்களையும் உருவாக்குவது வாக்காளர்களேயாகும். இதன்மூலம் வாக்காளர்கள் யாரென்று குறிப்பாக நமக்குப் புரிய வைக்கிறார் எழுத்தாளர்.

    ஒரு காலத்தில் தலைவர்களுடன் தாதாக்கள் இருந்தார்கள். இப்போது தாதாக்களே தலைவர்களாகி விட்டார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

    வலிமையான பதிவு, நன்றிகள்.

  2. கிட்டத்தட்ட அனைத்து வளரும் நாடுகளிலும் ஒரே மாதிரியான போக்கைக் காண்பது வருத்தமளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.