“தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென !விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !
ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார் !
பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புக்களை
பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
பல்கலைக்கழம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
பாடமாய் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர் !
பேராசிரிராய் பெருமையுடன் பணி ஆற்றி
ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார் !
பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே !
துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும் !
ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவமாகி
தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் !
