தமிழ் மக்களுக்குத் தேவை பலமான மாற்று அரசியல் சிந்தனையுள்ள புதிய கட்சியே! …. சின்னத்தம்பி குருபரன்.


இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட தமிழர் அரசியல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்குக் கிடைத்ததில் இருந்து ஆரம்பமாகிறது. 147 வருடகாலத் தமிழரின் அரசியல் வரலாற்றில் வெட்டுக் கொத்துக்கள், குழி பறிப்புக்கள், கொலைகள், துரொகம் இருட்டடீபுபக்கள் எல்லாம் கலந்த சாக்கடை அரசியலையே காண முடிகிறது.
தமிழ் அரசியல் தலைமைகளின் மிதவாத, சாதிவீக, அகிம்சை அரசியலிலும்சரி, 1983 – 2009 வரையான ஆயுதப் போராட்ட அரசியலிலும்சரி தமிழர் சுயநிர்ணய உரிமை, அரசியல், சமூக, பொருளாதாரம் தொடர்பாகப் பெரிதாகச் சாதித்தவை எதுவுமில்லை என்றே கூறலாம். இதற்குக் காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியம், தனித்துவம், உரிமை தொடர்பாக தமிழ் மக்களிடம் ஒன்றைக் கூறிக் கொண்டு ஆட்சியாளரோடு சோரம்போன அரசியல் நடத்தியமையும், சார்ந்துநின்று பேசிப் பிரச்சினைகளைத் தீர்பதை விடுத்துத் தீர்வை முன்வையாது விடாப்பிடியான அரசியல் போக்கும் காரணமாக அமைந்தது.
இனத்தையும் மொழியையும் மானசீகமாக நேசிக்காத ஆங்கிலம் கற்ற மேல்தட்டு அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் தமிழர் அரசியல் அகப்பட்டுக் கிடந்தமையும் ஒரு காரணமாக அமைந்தது. சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் போன்றோர் 1920, 1924, 1931 யாப்புச் சீர்திருத்தங்களின் ஊடாகத் சிறுபான்மையினருக்குக் கிடைக்க இருந்த அரசியல், சுயநிர்ணய உரிமைகளைத் தூரநோக்கற்ற சிந்தனையால் கிடைக்காமல் போகக் காரணமாக இருந்தனர்.
சோல்பரி யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களின்போது ஜி.ஜி.பொன்னம்பலம் விடாப் பிடியாக ஐம்பதுக்கு ஐம்பது கேட்டுக் கோட்டை விட்டார். இந்தச் சம்பவமும் அதற்கு முன்னரான சில சம்பவங்களும் பௌத்த சிங்கள பேரினவாதிகளைச் சிந்திக்க வைத்துத் சிறுபான்மையினருக்கு எதிரான தீர்மானங்கள் எடுப்பதற்குக் காரணமாக அமைந்தன.
டீ.எஸ். சேனனாயக்காவின் (1931-1947 –காணி, நீர்ப்பாசன அமைச்சர், 1948-1952 வரை பிரதமர்) காலத்தில் கல்லோயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினை ஆரம்பித்தார்.
அப்போது தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் அடங்குவதனால் 38 குடியமர்த்தல் (கொலனி) திட்டங்களில் 65 – 70 வீதமானவை மட்டக்களப்பு (அம்பாறை-திகாமடுல்ல மாவட்டம் மட்டக்களப்பில் இருந்து பிரிபட முன்னர்) மாட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தலைவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார். திட்டம் நிறைவடையும்போது 70 வீதமான கொலனிகள் தென் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதனால் சிங்கள மக்களின் பரம்பல் அம்பாறைத் தேர்தல் தொகுதியில் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டன. இக்காணிகள் தென் மாகாணத்தில் காணியற்றிருந்த வறிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதென நியாயம் பேசி தமிழ் தலைமைகளின் வாயை அடைத்தார். முன்னர் போலவே வாய் மூடி மைளனிகளாயினர்.
ஐக்கிய தெசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் தமிழர்களை மேலும் சிறுபான்மையினர் ஆக்குவதற்காகப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் 1948-11-15 ஆந் திகதி கொண்டு வரப்பட்ட ‘இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின்’ கீழ், ஆறு இலச்சத்துக்கு மேற்பட்ட மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கினர் . அதில் சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம் (1964) சிறிமா – காந்தி ஒப்பந்தம் (1974) அகியவற்றின் மூலம் 525,000 தோட்டத் தொழிலாளர்களை இந்தியா மீள அழைப்பதாகவும் 325,000 பேருக்கு 1964 – 1979 காலப்பகுதிக்குள் இலங்கை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதன்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களில் 160,000 க்கு மெற்பட்டோர் மன்னார் – இராமேஸ்வரம் ஊடாகவும் வசதி படைத்தோர் விமானங்கள் மூலமாகவும் இந்தியாவுக்குச் சென்றனர். இவர்கள் கதறி அழுது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதைத் தடுக்க முயற்சிக்காமல் சிங்கள ஆட்சியாளர்கள் செய்த இழிச் செயலைத் தமிழ் தலைவர்கள் பார்த்துக் கொண்டு வாய்மூடி மௌனிகளாய் இருந்தனர்.
தனிச் சிங்களச் சட்டம், வாகனங்களின் இலக்கத் தகடுகளில் சிறி சிங்கள எழுத்து அமுலாக்கல் சட்டம் என்பவற்றுக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், எதிர்ப்புக்களைத் தமிழ் தலைவர்கள் முன்னின்று நடாத்தினர். ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம் என்பவற்றைப் பிரித்தானியாவுக்குச் சென்று மகாராணியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகத் தமிழ் இளைஞர் மகாசபை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்றுகூடி, மனுவொன்றைத் தயாரித்துக் கோமான் வன்னியசிங்கத்திம் கொடுத்து அனுப்பி வைத்தனர். அவர் இரயிலில் கொழும்புக்கு வருவதை அறிந்த சிங்களத் தலைவர்கள் கோட்டைப் புகையிர நிலையத்தில் வரவேற்று, அழைத்துச் சென்று குடியும் குடித்தனமுமாக சுகபோகத்தில் திளைக்க வைத்தனர். வன்னியசிங்கம் எடுத்த காரியத்தை மறந்து அனுபவித்த சுகபொகத்தில் கோட்டை விட்டார்.
கிழித்தெறியப்பட்ட பண்டா- செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்களின் பின்னர் தமிழ் தலைமைகளினதும், போராட்டக் குழுக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றின் தூரநோக்கற்ற சிந்தனையாலும், அக்கறை இன்மையாலும், முறையான தீர்வுத் திட்டங்களை முன்வைக்காது விடாப்படியாக நின்றும் சிங்களத் தலைமைகளுக்கு வடம்பிடிக்கும் போக்காலும் பல அரசியல் தீர்வுத்திட்ட முயற்சிகள் கைநழுவிப் போயின. 1957 இல் ‘பிராந்திய சபைகள் தொடர்பான முன்மொழிவு’, 1963 இல் முன்மொழியப்பட்ட ‘மாவட்ட சபைகள்’ யோசனை, 1965 இல் சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் கலாநிதி என்.எம்.பெரேராவினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டம், 1983 இல் மாவட்ட மட்ட அதிகாரப் பரவலாக்கம், 1985 திம்புப் பேச்சுவார்த்தை, 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம், 1992 பாராளுமன்றத் தெரிவுக் குழு அறிக்கை, 1995 இல் சந்திரிக்காவின் பிராந்தியங்களின் ஒன்றியம் தொடர்பான முன்மொழிவு, 1997 இல் ஒஸ்லோ பிரகடனம், 2003 இல் சந்திரிக்காவின் இடைக்காலத் தன்னாட்சி அதகார சபை யோசனை, இது ரனில் விக்கிரமசிங்காவினால் நாடாளுமன்றத்துக்குள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
1981 யாழ் நூலக எரிப்பு, தேர்தல் மொசடிகள், இனக்கலவரங்கள், சித்திரவதைகள், படுகொலைகளுக்குக் காரணமான ரனிலுக்கு இன்றுவரை சூடு, சொரணையற்ற தமிழ் அரசியல்வாதிகள் பலர் முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றனர். 2002 – 2005 வரை நடைபெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள், 2005 இல் சுனாமிக்குப் பின்னரான பொதுக் கட்டமைப்பு, 2015 – 2019 வரையிலான நல்லாட்சிக் காலத்தில் ரனில் சம்பந்தர் கூட்டிலான பிரிக்கப்படாத, பிளவுபடாத நாட்டுக்குள் (எக்கய ராச்சிய) சமஷ்டி யோசனை ஆகியன யாவும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு அரசியல், இனப்பிரச்சினை தீர்க்கப்படக் கூடாது. பரச்சினைள் தீர்க்கப்படாதிருந்தால் மாத்திரமே அவற்றைக் கூறிக் கூறி அரசியலில் காலத்தை ஓட்டலாம் என்பதற்காகவே எத்தகைய தீர்வு முயற்சிகளிலும் பிடிப்பு, நாட்டமில்லாமல் அறிக்கை விட்டுக் கொண்டே காலத்தைக் கடத்தினர். இத்தகைய அரசியல்வாதிகள் இனிமேலும் தேவையா என்பதைத் தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிங்கள மக்கள் பாரம்பரிய கட்சிகளை விரட்டி அடித்ததுபோல் தமிழ் மக்களும் பாரம்பரிய தமிழ் கட்சிகளை விட்டொதுக்கி மாற்று அரசியல் முற்போக்குச் சிந்தனையுள்ள கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் ஊடாக உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முன்வர வேண்டும்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்கு எதிராக 1961 இல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கச்சேரிகளுக்கு முன்ளால் இடம்பெற்ற கதவடைப்பு, சத்தியாக்கிரகப் பொராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை விடுதலை செய்வதற்கு சிறமாவோ பண்டாரநாயக்கா அரசு ‘தமது கட்சியில் இணைந்து கொண்டு மன்னிப்புக் கேட்டால் மாத்திரமே அனைவரையும் விடுதலை செய்ய முடியும்’ என்ற நிபந்தனையை விதித்திருந்தது. அதனை ஏற்க மறுத்து தந்தை செல்வாவும் அவரோடு இணைந்வர்களும் சிறையில் இருந்தனர். கந்தையா வைத்தியநாதன் தமிழரசுக் கட்சியில் இல்லாதபோதும் மன்னிப்புக் கேட்க மறுத்து சிறையில் இருந்துவிட இரா.சம்பந்தன் தமிழரசு் கட்சிகும் தனக்கும் எந்த் தொடர்பும் இல்லையெனக் கூறி மன்னிப்புக் கேட்டு விடுதலையானார். கல்முனைத் தொகுதித் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.அஹமட்டும் மன்னிப்புக் கேட்டு விடுதலையாகிச் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். இத்தனைக்கும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இராசவரோதயத்தின் மகன்தான் இரா. சம்பந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்புக் கச்சேரி நிர்வாகச் செயற்பாட்டை முடக்கி 1961 இல் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் மட்டக்களப்பிலிருந்து அம்பாறை தனி மாவட்டமாகப் பிரிந்து செல்வதற்கும் அம்பாறையில் கச்சேரி உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது. இது ‘பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய’ கதையாக அப்போது பேசப்பட்து. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் 1961 இல் இருந்து தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதற்கான திட்டங்கள் அரசினால் முன்னெடுன்னப்பட்டு இப்போது உச்சம் பெற்றிருக்கிறது. கடந்த 77 வருடங்களாக தூரநோக்ற்ற தமிழ் தரப்பு அரசியல்வாதிகளாலும் ஆயுதப் போராட்டங்களாலும் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிப் பலவற்றை இழந்திருக்கிறோம் என்பதே உண்மையாகும்.
முதலாவது குடியரசு யாப்பு 1972 இல் வாக்களிப்புக்கு வந்தபோது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மார்ட்டின், தியாகராஜா, அருளம்பலம் ஆகியோரும் மட்டக்களப்பு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்வநாயகமும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து யாப்பு நடைமுறைக்கு வந்தது. தந்தை செல்வா ‘முதலாவது குடியரசு யாப்பு தமிழ் மக்களுக்கு விடுக்கபட்ட மரண சாசனம்’ என்று கூறி தமது நாடானுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து தமிழ் மக்களைச் சாத்வீகப் போராட்டத்துக்கு அழைத்தார்.
அப்போராட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் யாவரும் சிறைமீண்ட செம்மல்களாகச் சிறையில் இருந்து வெளிவந்தனர்.
சிறிமா அரசு 1974 யாழ்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மகாநாட்டின்போது பன்னிரண்டு இளைஞர்களை இராணுவம், காவல் துறையினர், மாநகர முதல்வர் எட்வர்ட் துரையப்பாவின் துணையோடு படுகொலை செய்தனர். இச்சம்பவம் சிவகுமாரன் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து பிற்காலத்தில் ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
தந்தை செல்வா நோய்வாய்பட்டுக் ஹோமா நிலைக்குச் சென்ற பின்னர் 1975 இல் தமிழரசுக் கட்சியபின் தலைமைத்துவம் அ.அமிர்தலிங்கத்துக்குக் கைமாறியது. 1976 இல் வட்டுக்கோட்டையில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தி வட்டுக் கோட்டைப் பிரகடனத்தை வெளியிட்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் அ.அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் தந்தை செல்வா 1974 இல்“சிங்கள, பௌத்த பேரினவாத அரசின்மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இனிமேல் தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறிய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இக்கருத்து அஹிம்சையில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பதையும் இளைஞர்கள் மாற்று வழியைத் தேடிக்கொள்ள வேண்டும் உன்ற உண்மையையும் மறைமுகமாக வெளிப்படுத்தி நின்றது.
அதன் பின்னர் 1977 ஆவணிக் கலவரம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மேலும் எழுச்சியை ஏற்படுத்தியது. வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மனேஸ்வரன், பத்மநாபா, பணாகொடை மகேஸ்வரன், சிறிசபாரெத்தினம், தங்கத்தரை போன்றோர் ஆயுதம் தாங்கிய போராளிகளாக மாறினர்.
ஜெ.ஆர்.ஜயவர்த்தனா அரசு 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. காமினி, ரனில் தலைமையிலான மந்திரி குழுவையும் யுண்டா குண்டர் சிறப்புப் படையணியினரையும் ஜெ.ஆர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். இவர்களும் முப்படையினர், காவல் துறையினரும் இணைந்து பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். யாழ் நகர எரிப்பு, நூலக எரிப்பு, காங்கேசன்துறை வீதியிலுள்ள கடைத்தொகுதிகள் எரிப்பு, ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், அச்சியந்திரங்கள் எரிப்பு, கொள்ளைகள், படுகொலைகள், கைதுகள், தேர்தல் மோசடிகள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
இத்தனைக்கும் காரணமானவர்களில் ரனில் விக்கிரமசிங்க மாத்திரமே உயிரோடு இருக்கிறார். இதுபொன்ற பலவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்றிய ரனிலுக்கு மானம், ரோசமில்லாத தமிழ் அரசியல்வாதிகளில் பலர் இப்பொழுதும் ஆதரவு வழங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுள் தமிழரசுக் கட்சியின் மேனாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அடற்குவர். அவர்களை மானமுள்ள தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 1981 சம்பவங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியிலான போராட்ட எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
நாட்டில் 1977 – 1983 வரை தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியாகவும் எதிர்கட்வித் தலைவராக அ.அமிர்தலிங்கமும் செயற்பட்டார். அவர் பல சந்தர்ப்பங்களில் தமது சிறப்புரிழமயைப் பயன்படுத்திப் நாடாளுமன்றத்தில் ஆக்ரோசமாகப் பேசுபவராகவும் ஜெ.ஆர் அரசுக்குச் சோரம் பொனவராகவும் காணப்பட்டார். ஜெ.ஆர் அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட 1983 யூலைக் கலவரத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் உறுப்பினர் பதவியை இழந்தனர்.
முன்னர் குறிப்பிடப்பட்ட தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும் தமது தலைமையில் ஆயுதம் ஏந்திய குழுக்களை வழிநடத்தி அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். 1996 இல் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏனைய ஆயுதக் குழுக்களைத் தடைசெய்து தாம் மாத்திரமே களத்தில் நின்று போராடினர். உள்நாட்டு யுத்தம் 2009 மே.18 வரை நீடித்தது. 26 வருட காலம் நீடித்த யுத்தம்கூடத் தமழரின் சுயநிர்ணய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. யுத்தகாலத்தில் விடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசின் சலுகைகளையும் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டு கொழும்பில் வாழ்ந்து சுகபோகங்களை அனுபவித்தக் கொண்டிருந்தனர்.
இராசவரோதயம் இறந்த பின்னர் அந்த இடத்தைத் தன்க்கு வழங்குமாறு இரா.சம்பந்தன் பலமுறை கோரிய போதும் தந்தை செல்வா நோய்வாய்ப்பட்டு ஹோமவுக்குச் செல்லும்வரை அவர்மீத தனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறிக் கட்சியில் இணைத்துக் கொள்ள மறுத்திருந்தார்.
மூதூர் நாடானுமன்ற உறுப்பினர் தங்கத்துரைக்கும் அமிர்தலிங்கத்துக்கும் இருந்த கருத்து முரண்பாட்டைப் பயன்படுத்தி 1975 இல் தமிழரசுக் கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். 1977 இல் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆனார். விகிதாசாரத் தேர்தல் முறையில் தான் வெற்றிபெற முடியாத என்பதை உணர்ந்த சம்பந்தர் தங்கத்துலையை வீழ்த்துவதறகுத் திடடமிட்டு 05-07-1997 கரும்புலிகள் தினத்தன்று திருமலை சண்முகா வித்திலயத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் தங்கத்துரை பலியானார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட இருவரையும் நீலன் திருச்செல்வத்தின் உதவியுடன் ஜனாதிபதி சந்திரிக்காவோடு பேசி விடுதலை செய்வித்தார். பின்னர் தமது உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் உள்ளதென சந்திரிக்காவிடம் கூறிக் குண்டு துழைக்காத வாகனம் பெற்றுக் கொண்டு 1999 வரை கொழும்பில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.
புரையோடிப் போயிருக்கின்ற தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2015 – 2019 நல்லாட்சி காலப்பகுதியில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதைக்கூடப் புத்தி சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வராதவர்களாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்ப இருந்தது. தாம் தீர்க்க தரிசனத்தோடு திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தால் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, யுத்தக் குற்ற விசாரணை, குடியமர்த்தல் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். எல்லாச் சந்தர்ப்பங்களையும் கைநழு வவிட்டுவிட்டு கூட்டமைப்பையும் சிதைத்துத் தமிழரசுக் கட்சியையும் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கின்றனர்.
தமிழ் கட்சிகள் தமது மத்திய குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தமது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிக்காமல் ஆமாசாமி போட்டுக் கொண்டு தலையாட்டிப் பொம்மைகள்போல் இருக்கத் தக்கவர்களையே பெரும்பாலும் நியமிக்கின்றனர். இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017 உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தெரிவான தமிழ் மக்கள் பிரதிநிதிகளில் இருந்தும் தவிசாளர்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். உள்ளூராட்சிச் சபைகளில் பெரும்பாலும் தம்மை நியமித்தவர்களின் திட்டங்களையே நிறைறேறினர். இதையே தற்போதைய தமிழ் கட்சிகள் இரண்டு தேர்தல்களிலும் செய்யப்போகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலிலும் அவர்கள் களமிறங்கி இருந்தால் நிச்சம் வென்றிருக்க மாட்டார்கள். தமது பாரம்பரியக் கொள்கைகளை மாற்றியமைத்துத் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கியதனால் அமோக வெற்றி பெற்றார்கள். அதேபோல் தமிழ் மக்களிடத்திலும் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு அரசியலில் மாற்றுச் சிந்தனை அவசியமாகிறது. மாற்றத்தை விரும்பி முற்போக்குச் சிந்தனையோடு எந்தக் கட்சி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ அதற்கே தமிழ் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும்.
போலித் தமிழ் தேசியம் பேசி மக்களின் இன்னல்கள் துன்பங்களில் பங்குபற்றாத, யுத்த காலத்தில் ஓடி ஒழித்துக் கொழும்பில் வசித்துச் சுகபோக வாழ்க்கை நடத்திய போலி அரசியல்வாதிகளை வெளியேற்றிவிட்டு உண்மையாக மக்களை நேசிக்கின்ற இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முன்வர வேண்டும். மாற்றுச் சிந்தனையுள்ள மக்களின் ஆணை இதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இன்று தமிழரசுக் கட்சிக்குள் தனிநபர் இராசாங்கம் நடக்கிறது. வடக்கில் ஒட்டுமொத்தமாக ஒருவரும், மட்டக்களப்பில் ஒருவரும் இதில் அடக்கம். இவர்கள் இருவருக்கும் தமிழ் தேசியம், தமிழர் ஊரிமை பற்றிப் பேசுவதற்கு எந்தவகையில் தார்மீகப் பொறுப்பிருக்கிறது. மட்டக்களப்பில் இன்னுமொருவர் தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் (2024) உறுப்பினர்கள் சிலரால் ‘போடா வெளியே’ என்று விரட்டி அடிக்கப்பட்ட சூடு சொரணை இல்லாத தமிழர். இவர் ஜனாதிபதித் தேர்தலில் (2024) தமிழ் பொது வேட்பாளரின் பரப்புரை மேடை ஒன்றில் “மானம், ரொசம், கூடு, சொரணையுள்ள தன்மானத் தமிழர்கள் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார்.
இது தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானத்துக்கு முரணானதாகும். காலைக் கையைப் பிடித்துத் தாஜா பண்ணிப் பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் தமிழரசுக் கட்சியில் இடம் கிடைத்ததும் அதற்கும் தன்மானத் தமிழன்போல் நியாயப்படுத்தி அறிக்கைவிட்டார். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வழங்கப்படுகின்ற நேரத்தில் என்ன பேசுகிறோம். ஏது பேசுகிறோம் எனப் புரியாமல் பேசுகின்றார். அப்பேச்சுக்களை நன்கு அவதானித்தவர்களுக்கு விளங்கியிருக்கும்.
இவர்கள் உல்லோரும் சேர்ந்து நடைபெறப்போகும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட தனிநபர்களின் பிரேரணையாக யார் யாரை உள்ளடக்கி இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்த்தால் தெரியவரும். ஆகவே, ஐந்து வருடங்களுக்குப் பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளை முனடனெடுப்பதற்கு வெறும் தலையாட்டிப் பொம்மைகளைத் தெரிவு செய்யாமால் பொருத்தமான ஏற்றவர்களைத் தெரிவு செய்வதே சாலப் பொருத்தமாகும்.
அதற்கு வாக்காளர்கள் மாற்றுச் சிந்தனையோடு களமிறங்க வேண்டும். இனிமேலும் பழம் பெருமையும், விர வசனங்கள் பேசிக் கிடைப்பதையும் கிடைக்காமலாக்கி, பொல்லைக் கொடுத்து அடிவாங்கி இருப்பதையும் இழக்கச் செய்கின்ற கட்சிகளை விடுத்து வாக்களிக்க முன்வாருங்கள். யாழ் மாவட்டத்தில் அரசு பல அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க, கடந்த பொதுத் தேர்தலில் மற்றுச் சிந்தனை இல்லாமல் வாக்காளர்கள் வாக்களித்த தவறினால் பலவற்றை இழந்துவிடப் போகிறோம் என்பதையும் மறந்துவிடலாகாது.