குறள் கூறும் பொருளில் பிறர் பார்வையும்; என் பார்வையும் – பார்வை – 03 …. சங்கர சுப்பிரமணியன்


திருக்குறளில் எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும். அதனாலாலேயே எந்நாட்டவர்க்கும் எம்மதத்தவர்க்கும் எக்காலத்துக்கும் உலகப் பொதுமறையாக நிற்கிறது. பொதுமறையாக நின்று நீதி சொன்னதால்தான் அதிகப்படியான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டை மன்னன் வளமாக ஆட்சி செய்யலாம். ஆனால் அந்த நாட்டை பாதுகாக்க நல்ல பலம் வாய்ந்த படை இருப்பது அவசியம். பலம் வாய்ந்த படை இருந்தாலும் அதை வழிநடத்த திறமையான படைத்தளபதி இல்லாவிடில் பயனில்லை.
நல்ல தளபதி ஒருவனால்தான் உளவாளிகளின் துணைகொண்டு எதிராளியின் படைபலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி வழிமுறைகளை வகுத்து போரில் படைதனை வழிநடத்த முடியும். எதற்காக போரிடுகிறோம் எப்படி படையை வழிநடத்துவது என்பதும் ஓர் அரசியல்தான்.
மற்றபடி போரில் வெற்றி காண்பதும் தோல்வியடைவதும் பேரரசுகளுக்கே ஏற்படக் கூடிய ஒன்றுதான்.
இருப்பினும் போராடும் ஒவ்வொருவரும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போரிடுகிறார்கள். வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் தளபதியின் கையில்தான் உள்ளது. நேர்மையான முறையில் போரிட்டு வெற்றி தோல்விகளை சந்திப்பதில் குறையில்லை.
நேர்மையற்ற முறையிலும் சூழ்ச்சிகளாலும் பெரும்படை கொண்டு தாக்கி வெற்றிபெற்று அதை வெற்றி என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமை என்ன உள்ளது அதில் என்ன அரசியல் உள்ளது? அதே நேரத்தில் தன் மக்களைக்காக்க கடைசி மூச்சுவரை களத்தில் நின்று போராடி மார்பில் வேல்வாங்கி மடிபவனை வரலாறு போற்றும்.
ஆதலால் போராடு என்றோ போராடாதே என்றோ யாரையும் யாரும் நிர்ப்பந்திக்க இயலாது. காலமும் கடந்து வந்த பாதையும்தான் தீர்மானிக்கிறது. குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் குரல் எழுப்பாமல் இருப்பது நல்ல அரசியல் அல்ல. அதில் ஏதோ ஒரு சுயநலம் இருக்கும். ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதால்தான் இந்தியா போன்ற நாடுகள் விடுதலையடைந்தன.
அதேசமயம் விடுதலையை எதிர்த்தவர் ஈ. வெ. ரா. விடுதலையடைந்த நாளை துக்கதினமாக அவர் கருதினார். அதுவும் ஒருவகை அரசியலே. அரசியலுக்கும் பன்முகம் உள்ளது. எனவே அரசியலைத் தீர்மானிப்பது கூட அரசியல்தான். இந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல் தெரியாத தளபதி இருக்க முடியாது.
ஆதலால் தளபதி செய்யும் அரசியலைப் பொருத்து நல்ல தளபதியா மோசமான தளபதியா என்று வேண்டுமானால் தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிப்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலும்
அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பொருத்து மாறுபடுகிறது.
பின் எப்படித்தான் கண்டறிவது? எல்லாவற்றிற்கும் விடை தருகிறார் வள்ளுவர். அந்த விடை அவர் கடையிலேயே இருக்கிறது. வேறுகடை நோக்கி செல்லவேண்டியதில்லை. அந்தவிடை,
“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறள்.
இந்த குறள் சொல்லும் வழிநின்று ஆய்ந்தால் அரசியலும் புரியும். அத்தனையும் புரியும் என்பது எனது பணிவான கருத்து. எவர் கருத்துடனும் நான் முரண்படுவதில்லை. ஆனால் என் கருத்தை வைப்பேன். இரு கருத்துக்களையும் நாடுவோர் குணம்நாடி குற்றமும் நாடி மிகை நாடுவர் என்பது திண்ணம்.
ஆதலால் போரில் எதிரியின் சூழ்ச்சியும் பலமும் அறிந்தும் மரிப்பது உறுதியென தெரிந்தும் புறமுதுகிட்டு ஓடாமல் மரணத்தை இன்முகத்தொடு முத்தமிட்டு அரசியல் பலனை எதிர்பாராமல் மடிபவனே தலைசிறந்த தளபதி. ஏதாவது அரசியல் பண்ணி தன்னைக்காத்து படைகளை அழியவிட்டு ஓடுபவன் தளபதியல்ல.
தோல்வி உறுதி என்று தெரிந்தவுடன் கொள்கையாவது புடலங்கையாவாவது என்று கொள்கையை காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள். நம்பிக்கைத் துரோகம்
செய்து பணம், பதவி மற்றும் பட்டத்திற்கு விலை போய்விடுவார்கள். இதுவும் ஒருவகையான அரசியல். இது ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிய விடயம் இல்லை.
மேற்கூறியவற்றில் இருந்து ஒருவரை படைத்தளபதியா சந்தர்ப்பவாதியா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். ஒருபடைத் தளபதி சந்தர்ப்பவாதியாக இருந்தால் அதுதான் அரசியல். அவன் மன்னனையே இக்கட்டில் மாட்டிவிட்டு அல்லது கொன்று அரசனாகி விடுவான்.
அதெப்படி படைத்தளபதி மன்னனாகி விடமுடியும் என்று மாடசாமி அண்ணாச்சி
கேட்கிறார். அண்ணாச்சி அதெல்லாம் முடியும். அமைச்சரை தன்வயப்படுத்தி மக்கள்
மேல் அதிக வரிசுமத்தி கொடுங்கோல் அரசன் என்று பெயரெடுக்க வைப்பான். பின் மக்களே அரசனை வெறுக்க ஆரம்பித்ததும் அமைச்சரின் ஆதரவோடு அரசனை சிறையில் தள்ளி ஆட்சியை தளபதி பிடித்து விடுவான்.
பழைய தமிழ்த் திரைப்படங்களில் இதைப் பார்த்திருக்கலாம். அல்லது சில வரலாறுகளைப் படித்தாலும் அறிய முடியும். அவன் செயல்பாடுகளில் இருந்து ஒரு படைத்தளபதி எப்படிப் பட்டவன் என்று கண்டுகொள்ளும் படியாக உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
படைத்தளபதி என்றதும் திருக்குறளில் படைமாட்சி என்ற அதிகாரம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களும் படையின் மகிமையைப் பற்றி கூறினாலும்
“உலைவிடத்து ஊரஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது”
என்ற குறள் எனக்கு மிகவும் பிடித்த குறள்.
இதற்குண்டான காரணங்களைச் சொல்கிறேன். போர் என்றால் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியாது. அதிலும் கண்முன்னே மூர்க்கமாக தாக்க வருபவனை அதே மூர்க்கத்துடன் எதிர் நின்று தாக்கும் நெஞ்சுறுதி வேண்டும். அந்த நெஞ்சுறுதி யாருக்கு வரும்?
கூலிக்காக மாரடிப்பவனுக்கும் கொள்கைக்காக போரிடுபவனுக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. கூலிக்காக போரிடுபவன் தான் பலமிழக்கும்போது தப்பித்து ஓடுவான். புறமுதுகிட்டு ஓடுவது பற்றி வெட்கமடைய மாட்டான். அவனுக்கு அவனது உயிர்தான் அவசியம். ஏனென்றால் அவனுக்குத் தெரியும். இது நேர்மையான போரல்ல என்று.
மற்றவர்களின் நாட்டைப் பிடித்து அவர்களின் வளங்களை அபகரிப்பதோடு அவர்களை அடிமைப் படுத்தி அரசை விரிவு படுத்துவதுதான் நோக்கம் என்பது அவனுக்கு தெள்ளத் தெளியவே புரியும். இந்த நேர்மையற்ற போரில் தம் கை ஓங்கி நின்றால் பாதுகாப்பாக நின்று போரிடுவான்.
அதுவே தமது பக்கம் வீழ்ந்து விடும் அபாயமிருந்தால் தன் அரசனின் பேராசைக்கு நாம் ஏன் பழியாகி உயிரைவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிவிடுவான். ஆனால் கொண்ட கொள்கைக்காகவும் தம் மக்களை பாதுகாத்து நல்வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடுபவன் தாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் தொடரந்து போராடுவான்.
அப்படி போராடுபவன் தமக்கு வரப்போகும் அழிவைப்பற்றி அஞ்சவே மாட்டான். இத்தகைய போராடும் வீரம் எவருக்கு வரும்? பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்குத்தான் தான் வரும். மற்றவர்களுக்கு அத்தகைய வீரம் வருவது கடினம்.
தமிழரின் பண்பு காதலும் வீரமும் ஆகும். சிலர் இந்த பண்புகளை விட்டு வாழலாம் என்பார்கள். மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமானாக இருப்பவர்களும் உண்டு. மனிதனுக்கு என்ன வேண்டும்? வாழ்வதற்கு சோறுதானே வேண்டும். சோறுகிடைக்கும் இடமே சொர்க்கம் சோறுதான் கிடைக்கிறதே என்பவர்களும் உண்டு.
ஆனால் அந்த சோறு எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்க மாட்டார்கள். பிச்சை எடுத்தாலும் சோறு கிடைக்கிறதே. அதற்குமேல் என்னவேண்டும் என்பதே அவர்களின் கருத்து. மக்களிடம் கொள்கை முரண்பாடும் கருத்து முரண்பாடும் இருப்பது இயற்கை. இதில் எவரையும் குறைகூற முடியாது. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்று பாடிச் செல்ல வேண்டியதுதான்.
இப்போது இந்த குறளின் பொருளைப் பார்ப்போம். பிறரது பார்வையில் இக்குறளின் பொருள் வேறுவிதமாகத் தோன்றலாம். போரில் அழிவினால் வலிமை குறைந்தாலும் தொடர்ந்து போராடும் குணம் தொன்றுதொட்டு பெருமையுடன் இருக்கும் படைக்குத்தான் இருக்கும் என்பது பிறரது பார்வையாகும்.
படைமாட்சி என்று அதிகாரம் சொன்னாலும் நான் இந்த குறளைப் பொருத்தமட்டில் படைத் தளபதிக்கு சொன்னதாகவே எண்ணுகிறேன். தனது படைக்கு அபாயம் வந்தாலும் தம் படையின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் ஏற்படப்போகும் அழிவை எண்ணி கலங்காதிருப்பான்.
நின்று போராடும் வீரம் சொந்த மக்களைக் காக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல தளபதிக்கே வரும் என்பதே இதன் பொருளாகும் என்பதுதான் என்கருத்து. இப்படிப் பட்ட தளபதி ஒரு சிறந்த தளபதியாக இருக்கமாட்டாரா? இந்த கேள்விக்கு பதிலை உங்களிடமே விடுகிறேன்.
(தொடரும்…)