கட்டுரைகள்

“நதியில் நகரும் பயணம்” … புருஜ் (Bruges, Belgium) … 13 வது அத்தியாயம்! … நடேசன்.

நடேசன்

அடுத்த நாள் நாங்கள் பஸ்ஸில் ஒல்லாந்தின் பக்கத்து நாடான பெல்ஜியம் சென்றோம். ஆனால், அங்கு டச்சு மொழி கலந்த ஃபிளாமிஸ் (Flemish)மொழி பேசுவார்கள். சில மணி நேரத்தில் அங்கு  செல்ல முடிந்தது.

பெல்ஜியம்,   நெதர்லாந்திலிருந்து உருவாக்கிய நாடு. அதன் கசப்பு இன்னமும் எங்கள் டச்சு நாட்டின்  வழிகாட்டியின் வார்த்தையில் தெரிந்தது. நெப்போலியன்  படையெடுப்பின் பின்பாக நெதர்லாந்திலிருந்து  போல் பெல்ஜியம் பிரிந்து உருவாகிறது.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்போல்,

மத்தியகால புரூஜ் நகரின் மத்திய பகுதியில் அழகான சந்தை வெளி  (Market square) உள்ளது . இதனை சுற்றி அக்கால நகர மண்டபம்  தேவாலயம்  கடைகள்,  மணிகோபுரம் (Bell Tower)  உள்ளன.  அதனருகே அங்குள்ள ஒரு பெரிய தேவாலயம் உள்ளது. அதன் பலிபீடத்தில்  இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தோய்ந்த துணி,   சிறிய கண்ணாடி சீசாவில் வைக்கப்பட்டுள்ளது .  அதைக் கேட்டபோது எனக்கு தலையைச் சுற்றியது . மதங்களில் பல நம்பமுடியாத விடயங்கள் உள்ளன என்றாலும் அது கொஞ்சம் கூடுதலாக  இருந்தது.

சிலுவை யுத்தத்திற்காக ஜெருசலோம்  போனவர்கள் கொண்டு வந்து புனித இரத்தத்தை வைப்பதற்காக 12 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது .

எப்படி இரத்தம் வந்தது என்பதற்கு இங்கு ஒரு  கதை உள்ளது.  இயேசுநாதர் சிலுவையில் இறந்த பின்பு அவரை புதைப்பதற்கு அங்குள்ள யோசப் அரிமத்தேயா என்ற செல்வந்தர் அதற்கான  அனுமதியை பொண்டியஸ் பைலட் ( Pontius Pilate- The Governor) ) இடமிருந்து வாங்கியிருந்தார். அதாவது இக்காலத்துப் பிணத்தை அடக்கம் செய்பவர்கள்போல் என்று வைத்துக் கொள்ளலாம் . வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதின்படி சிலுவையிலிருந்து இறக்கி,  உடலை   குளிக்க வைத்து,  வாசனைத்திரவியங்கள் பூசியபின், புதிய லினன் துணியால் சுற்றிக்,  கல்லுகளால் செய்யப்பட்ட குகையில் வைத்து மூடப்பட்டது. அக்காலத்தில் மிருகங்களால் தோண்டப்படாது இருக்க  சடலம் இந்த முறையில் வைக்கப்படும்.  இங்கு  மட்டுமல்ல எகிப்திலும் சூடானிலும்  பிரமிட் அமைத்தலாக மாறி உருவாகிறது.

அந்த புனித இரத்தம் இறந்த இயேசு நாதரைக்  குளிக்க வைக்கும் போது அவரது உடலிலிருந்து எடுத்த துணியாக இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நாள்,  சனிக்கிழமை யூதர்களுக்கு விடுமுறை நாள் என்பதால் எல்லாம் வேகமாக நடைபெறுகிறது . இயேசுவை எடுத்து குளிப்பாட்டி  புதைப்பதை குற்றமாக எண்ணிக்  கோபமடைந்த யூதத் தலைவர்களால்  ஜோசப்  அரிமத்தேயா வேறு ஒரு  குகையில் வைத்து மூடப்படுகிறார்; உயிர்த்த ஞாயிறு அன்று அவர் இயேசு நாதரால் விடுவிக்கப்பட்டு தனது ஊரான அரிமத்தேயா போகிறார். இந்த விடயத்தை பின்பாக அவரே யூத தலைவர்களுக்கு நடந்ததை  சொல்கிறார்.

இங்கு கமரா கொண்டு செல்ல முடியாது என்பதால் இந்த தேவாலயத்தை தவிர்த்துவிட்டேன். அதே வேளையில்  சிறிது தூரத்தில்  உள்ளது  மேரி மாதா தேவாலயத்திற்கு சென்றேன்: காரணம் அங்கு மறுமலர்ச்சிகால ஓவியங்கள் உள்ளது. இதை விட மைக்கல் அஞ்சலோவின் மேரியும் பாலனும் என்ற மாபிள் சிலை உள்ளது . இத்தாலிக்கு வெளியே உள்ள மைக்கல் அஞ்சலோவின் ஒரே கலை வடிவமாகும் .

இந்த மேரியும் பாலன் சிலைக்கு சில வரலாறு உண்டு

நெப்போலியன் படை எடுப்பில் இந்த சிலை  கடத்தப்பட்டு மீட்கப்பட்டது. அதேபோல் நாசி ஜெர்மன் படை எடுக்கும் போதும் இந்த சிலை அவர்களால் திருடப்பட்டுப் போர் முடிந்தபின்,  ஒரு உப்பு சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பெல்ஜியத்தின் வடக்கே  கடற்கரையோரம் இந்த மத்தியகால நகரமாக யுனஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது . இந்த நகரத்தைச் சுற்றி வாய்க்கால் அகழி போல் ஓடுகிறது.  அந்த அகழி மேல் சிறிய பாலங்கள் உள்ளன. அதனால் இதை பெல்ஜியத்தின் வெனிஸ் என்பார்கள்.

இந்த நகரத்தில் வேறு என்ன விசேடம் என்றால் நகரம் கலையம்சம் பொருந்தியது. இங்கு நவீன கட்டிடங்கள் எதுவும் இங்கு கட்டப்படவில்லை . இங்கு பல மியூசியங்கள் உள்ளன.  இங்கு உள்ள மத்தியகால புனித ஜோன்ஸ் வைத்தியசாலை தற்பொழுது ஓவியங்கள் வைக்கும் அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுகிறது . சொக்கிலேட்ற்கு பெயர் போனது . அதை விட உருளைக்கிழங்கு ஃபிறைஸ் (French fries) இங்கிருந்து தான் முதல் வந்து என்கிறார்கள் .

பெருவில் இன்காகள் முதலில் உருளைக்கிழங்கை பயிரிட்டார்கள்.  அது ஸ்பானியர்களால் ஐரோப்பா வந்து  இங்கு ஃபிறைஸ்  வந்தது என அதற்கு மியூசியம் உள்ளது. ஆனால் சிப்ஸ் அமெரிக்காவில் ஒரு கறுப்பின சமையல்காரர் உருவாக்கியதாக தகவல் உள்ளது. மெக்சிகோவில் இருந்து மிளகாய் வந்தது. ஆனால், மிளகாய் பொடியை கண்டுபிடித்தவர்கள் ஆச்சி மிளகாய் பொடி செய்யும் இந்தியர்கள் எனலாம்.  அதேபோல் இனிப்பான மிளகாய் பொடியை கரைத்து அதை பப்பிரிகாயா என்பவர்கள் ஹங்கேரியில் என்பது உண்மை – உண்மைகள் எத்தனை விதங்கள்.

 பெரதேனியாவில் காதலர் வளைவுபோல் இங்கும் ஒரு அழகிய ஏரி , அதனருகே  பூங்காவும் அதைவிட வளைவு உள்ளது – அதில் இருந்து காதலர்கள் முத்தமிடவேண்டும்.

 ஆங்கிலேயர்களின் மத்தியில் இந்த நகரம் பெயர் பெற்றது . நேரடியாக விமானம்  கப்பல் போன்றவற்றில் இங்கு வரமுடியும்.   In Bruges என்ற  ஆங்கிலேய திரைப்படத்தின் சகல கட்சிகளும் இந்த நகரிலே எடுக்கப்பட்டு, படம் வெற்றியடைந்தது.   பணத்துக்காக கொலை செய்யும் இரண்டு ஐரிஸ்காரர்கள் லண்டனிலிருந்து  அவர்கள் செய்த கொலையில் இருந்து தப்ப வருகிறார்கள் .அவர்கள் சந்திப்பவர்களுடன்  முரண்படுகிறார்கள். படத்தின் இறுதியில் கிட்டத்தட்ட எல்லோரும் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தப் படத்தில்  புரூஜ் நகரின் தெருக்கள்,  மணிகூட்டுக் கோபுரம்,  கால்வாய்கள்,  கல் பதித்த தெருக்கள்  எல்லாம் காட்டப்பட்டு ஒரு சின்ரெல்லா  நகராக இந்த மத்திய கால நகரம்,  தமக்குத் தரிசனமாகும். இந்த சினிமாப்  படம் விறுவிறுப்பான அதே நேரத்தில் மிகக் குறைந்த வசனங்களுடன் எடுக்கப்பட்டது. கமரா இரவிலும்,  பகலிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் சினிமா படப்பிடிப்பின் சிறப்பை நம்மால் ரசிக்க முடிந்தது.

இந்தப் படத்தின் மையக்கரு பணத்துக்காக கொலை செய்யும்போது சிறுவர்களை கொல்லக்கூடாது. பெரியவர்களைக் கொல்லலாம் என்று,   தங்களுக்கு ஏற்ப  ஒரு கருப்பொருளை வைத்துக்கொண்டு அதைப் பாதுகாக்க முயல்வதாக  இந்தப் படம் விரிவது எனக்கு மிகவும் பிடித்தது.

அங்குள்ள சந்தை வெளியில் உள்ள கடையில் உருளைக்கிழங்கு  சிப்ஸ்போடு எங்களூர் மட்டிகளை (Clams) வைத்து ஒரு கூழ்போல் செய்து தந்தார்கள். புதுமையாகவும் சுவையாக இருந்தது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.