கவிதைகள்
“இறையின் நினைப்பை இருத்து மனத்தில்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

சினமதை அடக்கு சிறந்திடும் வாழ்வு
மனதை ஒடுக்கு மகிழ்ச்சியும் பெருகும்
தனமதை நாடிநீ ஓடா நில்லு
மனமதில் அமைதி மலர்வதைக் காண்பாய்
அறவழி இருப்பதை அகமதில் அமர்த்து
மறவழி செல்லா மனமதைத் திருப்பு
கறையுடை அனைத்தையும் களைந்துமே நில்லு
நிறையுனை அடைவதாய் நீயே உணர்வாய்
இன்சொல் என்றுமே இன்பமே நல்கும்
வன்சொல் என்பது வன்முறை காட்டும்
நன்செய் நிலமே நற்பயிர்க் குதவும்
நாளும் பொழுதும் நல்லதை நாடு
உதவும் எண்ணம் உயர்வினை அளிக்கும்
உதவா உள்ளம் ஒழிந்தே போகும்
அன்பு என்றுமே ஆனந்தம் அளிக்கும்
அளித்தால் அதுவே பேரின்ப மாகும்
கவலை வந்தால் கலைத்திட வேண்டும்
கலங்கும் மனத்தை ஆற்றிட வேண்டும்
சலனம் வருவதைத் தவிர்த்திட வேண்டும்
சந்தோச நினைவை இருத்திட வேண்டும்
வாழ்க்கை என்பது வரட்சியே அல்ல
வசந்தம் வீசும் மலர்வனம் ஆகும்
வீணாய் எண்ணி வீணாய் குழம்பினால்
மேதினி வாழ்கையை வீணாய் ஆக்குவாய்
எல்லாம் நலனே என்றே எண்ணு
எந்தக் கவலையும் அணுகா என்றும்
இறையின் நினைப்பை இருத்து மனத்தில்
இன்பம் நிறையும் இன்னலும் அகலும்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா