இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 05 … சங்கர சுப்பிரமணியன்

எப்படியோ இக்கட்டுரை உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்தியிருந்தால் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு மாடசாமி அண்ணாச்சி சொன்னதும் சட்டென நினைவுக்கு வந்தது. உங்களுக்கும் அந்நினைவு வந்திருந்தால் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றிருப்பேன்.
யாராவது ஒன்றிரண்டு பேர் வீட்டுக்குள் கொடிமரத்தை ஏற்படுத்தி விட்டால் போதும். அப்புறம் நான் நீ என்று போட்டிபோட்டுக் கொண்டு கொடி மரத்தை வைக்க ஆரம்பித்து விடுவார்கள். நன்றாகப் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டை வாஸ்து கலாச்சாரம் வந்ததும் புதிதாக கட்டிய வீட்டை இடித்து தள்ளி வாஸ்துவை நிலைநாட்டவில்லையா?
அதேபோல் கொடிமரத்தையும் ஒருவர் வைக்கத் தொடங்கினால் போதும்.
சேலத்தில் ஒரு வீட்டில் பிரம்ம கமலம் பூத்திருக்கு கோயமுத்தூரில் இரண்டு வீட்டில் பூத்திருக்கு என்பதுபோல் குலை குலையாய் முந்திரிக்காய் நரி நரியே நரியே சுற்றிவா என்ற கதையாகி விடும். காமாட்சி அக்கா வீட்டுல கொடிமரம் வச்சிருக்காங்க கண்ணபிரான் வீட்டில கொடிமரம் வச்சிருக்காக என்று தொடங்கி விடும்.
அதுவே மளமளவென்று பெருகி கோவிலில்லாத ஊரா கொடிமரமில்லாத வீடா என்று ஒன்றிரண்டு பேர் பேச ஆரம்பித்து அதுவே பழமொழியாகவும் ஆகிவிடும். கொடிமர உற்பத்தியும் பெருந்தொழிலாக உருவெடுத்து சந்தையைப் பிடிக்கும். உண்மையைத்தான்
சொல்கிறேன். தேர்போன்ற அமைப்பு செய்யப்பட்டு இப்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதல்லவா?
அப்புறம் மக்களிடம் பழனிகோவிலில் கொடிமரம் இருக்கிறதா என்று கேட்டால் வேறுவிதமான பதிலே கிடைக்கும். பழனி கோவில் சித்தர் கட்டியது எங்கள் வீடு கொத்தர் கட்டியது என்பார்கள். சித்தர்கள் கட்டியதால்தான் பழனி ஆண்டவர் கோவணம் கட்டிய ஆண்டியாக இருக்கிறார். நாங்களும் அவரைப்போல நாங்களும்
ஆண்டியாக வேண்டுமா? என்பார்கள்.
ஆனால் இவர்களோ வீட்டுக்கு வருபவர்களுக்கு ஒரு கப் காபி கூட கொடுக்காத ஆண்டியாக இருப்பார்கள். நம் தமிழ்க் கடவுளை ஆண்டி என்பார்கள். ஆண்டியாக இருந்தாலும் தெய்வமென்பதால் மொழுமொழு கொலுகொலு என்றுதான்
இருந்திருப்பார். இதுபோல் கட்டுரையின் தலைப்பு அப்பப்போ வந்து போகும்.
வீட்டில் வளம் கொழிக்க எப்படி வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று திடீரென வந்து புகுந்ததோ அதேபோல் இந்த கொடிமரமும் வந்து புகுந்துவிடும். ஏன் திடீரென்று வாஸ்து சாஸ்திரம் வந்து புகுந்தது என்று நான் சொல்வதை எண்ணிப்பாருங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் வாஸ்து சாஸ்திரம் இருந்ததா?
அவ்வாறு வாஸ்து சாஸ்திரம் இல்லாதபோது எல்லோரும் வளம்கொழித்து வாழாமல் வாழ்விழந்தா நின்றார்கள். இந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்தா அரண்மனைகளும் அந்தப்புரங்களும் கோவில்களும் கட்டப்பட்டன.
அவற்றை கட்டிமுடித்த பின் மன்னன் தொடர்ந்து தோல்வியடைகிறான் அதனால் வாஸ்து சாஸ்திரப்படி அரண்மனையை இடித்து கட்டவேண்டும் என்று அரண்மனைகள் இடிக்கப்பட்டனவா?
அல்லது அந்தப்புரங்களில் பெண்கள் அதிகமில்லை என்றோ அல்லது அழகிய பெண்கள் இல்லையென்றோ எந்த மன்னனாவது அந்தப்புரத்தை இடித்து வாஸ்து சாஸ்திரப்படி கட்டினானா? கோவில்களுக்கு பக்தர் வரவு குறைவு வருமானம் இல்லை என்று கோவில்களை இடித்து கட்டியதாக வரலாறு சொல்கிறதா?
சிலர் கேட்கலாம் அகிலத்தைக் காப்பவரே கடவுள் அப்படியிருக்க வாஸ்து சாஸ்திரத்தால் அவரை என்ன செய்யமுடியும்? அவரை வாஸ்து சாஸ்திரம் ஒன்றும்செய்யாது
என்பவர்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி. அப்படி வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று இருந்து அதைப் பின்பற்றி கோவில்கள் கட்டப்பட்டிருந்தால் படையெடுப்புகளின் போது கோவில்கள் இடிக்கட்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.
குறைந்த பட்சம் அத்திவரதர் போன்ற கடவுள்களை தண்ணீரில் மூழ்க வைத்திருப்பதையோ அல்லது கடவளரை கடத்திச் சென்று அயல்நாடுகளில் விற்பதையோ தடுத்திருக்கலாம். ஏனென்றால் வாஸ்து மிகவும் வல்லமையுடையது என்று நம்பப் படுகிறது.
இதையெல்லாம் விட இன்னொன்று வாஸ்து சாஸ்திரத்தில் அவசியமான இன்னொன்றும் உள்ளது? அது என்ன தெரியுமா? அது தான் வாஸ்து மீன். நல்ல வேளையாக வாஸ்து மீன் என்பதோடு வாஸ்து நின்றது. இல்லாவிடில்
வாஸ்து பாம்பு, வாஸ்து நண்டு, வாஸ்து ஆமை, வாஸ்து தவளை, வாஸ்து நத்தை என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
யாரோ ஒருவர் கடலிலே ஆற்றிலோ ஒருவிதமான நீளமான மீனைப் பார்த்திருக்கிறார். அதை விற்று பணம் பண்ணவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைதான் வாஸ்துமீனாக அவதாரம் எடுத்து வந்து மாட்டுபவர்களை சீட்டுக் கம்பெனிகளைப் போன்று சிக்க வைக்க உதவியது.
இதுபோன்ற மீன்கள் மிகவும் நீளமாக இருப்பதால் கிடைப்பதும்அரிது. அரிதென்றால் அதற்கு மவுசும் அதிகம் அதற்கேற்ப விலையும் அதிகம். என்ன விலை என்றாலும் கொடுத்து வாங்குவார்கள். அதற்கான மீன்தொட்டியையும் வீட்டில் கட்டுவார்கள். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போவதால் அதற்காக பணம் செலவு செய்வதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
நல்லவேளை வாஸ்து யானை என்று ஒன்று இல்லை. அப்படி இருக்குமானால் யானைக்கு உணவளித்தே வீட்டுக்காரன் ஓட்டாண்டி ஆகிவிடுவான். மக்களுக்கு எதற்கு பணத்தை செலவிடலாம் எதற்கு செலவிடக் கூடாது என்பது பற்றிய கவலையில்லை? ஆனால் அப்படி கவலைப் படுபவர்களும் இருக்கிறார்கள். இப்போது முகநூலில் படித்த ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
ஒன்னு வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் இக்கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு இதைக் கூறுகிறேன். ஒருவர் மருத்துவரிடம் சென்றிருக்கிறார். இரண்டு மாத்திரைகளும் கொடுத்து ஒரு ஊசி போட்ட மருத்துவர் இருநூறு ரூபாய் கேட்டாராம். இதை ரொம்ப மோசம்டா என்று நண்பரிடம் வேதனைப்பட்டு சொல்லியிருக்கிறார்.
இதைக்கேட்ட நண்பர் வீட்டில் போனமாதம் கணபதி ஹோமம் நடத்தினாய் அல்லவா அதை செய்தவருக்கு எவ்வளவு கொடுத்தாய் என்று கேட்க வேதனப்பட்டவர் இரண்டாயிரத்து ஐநாறு என்று சொன்னார். மறுபடியும் அதற்கு அவர் என்ன கொடுத்தார் என்று நண்பர் கேட்க ஹோமியம் என்றாராம். இதிலிருந்து நண்பர் என்ன சொல்லவருகிறார் என்பதை உங்களுக்கே விடுகிறேன்.
(தொடரும்)