நதியில் நகரும் பயணம்!… அம்ஸ்ரடாம் … 12 வது அத்தியாயம் … நடேசன்

ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன்.
இலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக இருந்தவர் எனவும் – அதற்கான ஆதாரங்களை காட்டினாள்.
இப்படிப் பல தொடர்புகள் ஒல்லாந்துடன் நாங்கள் கொண்டதால் ஒல்லாந்தை மேலும் அறிவோம். அம்ஸ்டர்டாமில் நான்கு நாட்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்தேன். ஆனால், இரண்டு முக்கிய விடயங்கள் நான் பார்க்க நினைத்தவை ; அனி ஃபிராங் மியூசியம் , வான்கோ மியூசியம். ஆனால், குறைந்தது இரண்டு கிழமைக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும் என பின்னால் புரிந்துகொண்டேன். எனது படகில் பலர் முன்னேற்பாடாக பதிவு செய்திருந்ததைப் பார்க்க எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருந்தது.
கோலோனில் இருந்து ரைன் நதி வழியாக புறப்பட்டு எங்கள் படகு மிகவும் பிசியான செயற்கையாக வெட்டப்பட்ட 72 கிலோ மீட்டர் (Amsterdam–Rhine Canal) வழியாக அம்ஸ்டர்டாம் வந்தது. இந்த கால்வாயை, ஒரு வருடத்திற்கு ஆயிரம் கப்பல்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.
இதுவரை நான் பார்த்த நகரங்களை விட அம்ஸ்டர்டாம் பல விடயங்களில் வித்தியாசமானது. 1275 இல் மீனவர்கள் குடியிருப்பாக இருந்த ஒரு கிராமம் இப்பொழுது உலகத்தின் முக்கிய வர்த்தக நகரமாக மாறி உள்ளது.
எங்களுக்கு படகிலே சொன்ன விடயம், இங்கே பாதையில் நடக்கும் போது கார் போன்ற வாகனங்களுக்கு பயமில்லை. ஆனால், சைக்கிள்களில் வருபவர்களிடம் அவதானமாக இருங்கள் . அதிவேகமாக வந்து அடித்துவிட்டு சென்று விடுவார்கள். அவர்கள் சொன்னதை முதலில் கேட்கும்போது நகைச்சுவையாக தெரிந்தது ஆனால், வீதியால் நடந்து சென்றபோது அதன் உண்மை தெரிந்தது.
ஆம்ஸ்டர்டாமில் நாங்கள் செய்தது எல்லா பயணிகள் போன்றது. அதாவது அங்குள்ள கால்வாய்களின் வழியே பயணிப்பதாகும். மற்ற இடங்களில் காரிலோ பஸ்ஸிலோ சென்று ஊர் பார்ப்பது . இங்கு கால்வாய்களின் இரண்டு கரையிலும் கட்டிடங்கள். அதை விட கால்வாய்களில் மிதக்கும் படகுகளில் குடும்பங்களாக வசிப்பார்கள்.
இந்த கால்வாய்களும் படகுகளும் கலாசார சின்னமாக யுனஸ்கோவினால் பாதுகாக்கப்படுகிறது. இங்குள்ள கால்வாய்கள் நமது வீதிகள்போல் பெயர் கொண்டவை. இவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது இலகுவானதல்ல என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பல படகுகளின் கழிவுகள் கால்வாய்க்குள் விடப்படுகிறது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் நிலமை முற்றாக சீராகவில்லை. அதை விட வருடாந்தம் 12000-15000 சைக்கிள்கள் இந்த கால்வாய்க்குள் இருந்து எடுக்கப்படுகிறது – அதை (Bicycle fishing ) என்பார்கள் .
இந்த கால்வாய் பயணத்துடன் எங்கள் படகுகளிலிருந்த சக பயணிகளிடமிருந்து ஒரு இரவு விருந்தின் பின் விடைபெற்றோம் .
நான்கு பகலும் நான்கு இரவும் தங்குவதால் என்ன செய்வது என யோசித்தோம் .
அம்ஸ்டர்டாம் நகர் அருகே துறைமுகப் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியதால் பயணத்தைத் தொடங்குபவர்களும் முடிப்பவர்களுமாகப் பலர் வந்தபடியிருந்தனர். கப்பல்களில் பிரித்தானியாவிலிருந்து மட்டுமல்ல, வட அமெரிக்காவில் இருந்து விமானத்தில் பிரித்தானியா வந்து பின்பு அங்கிருந்து ஐரோப்பியப் பயணங்கள் அவர்களுக்குத் தொடங்குகிறது என்பதால் எல்லோரும் சில நாட்கள் ஆம்ஸ்டர்டாமில் தங்கிவிட்டுச் செல்வார்கள். மேலும் நாங்கள் சென்ற காலம் வடதுருவத்தில் வசந்தகாலம் என்பதுடன் விடுமுறை காலமாகும். அந்தப் பகுதி நமது கோவில்களில் திருவிழாபோல் இரவு , பகல் எல்லாம் இருந்தது. அம்ஸ்டர்டாம் ஐரோப்பாவில் மிக வேகமாகப் பணம் கரையும் நகராகும் .
ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரத்து ரயில்வே நிலையத்திற்கு சென்றோம். அது ஒரு தனி நகரம்போல். அது பல வசதிகளை ஒரு இடத்திலே உள்ளடக்கியது. அங்கிருந்து பஸ், மின்சார ட்ராம் , ரயில், என்பன நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது . மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பார்க்க இங்கே ஒரு வித்தியாசம் – எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்.
வான்கோவின் ஓவியங்கள் வார்க்க வாய்ப்பில்லாததால் முதல் நாள் ருக் மியூசியம் எனப்படும் முக்கியமான அருங்காட்சிசாலை – “டச் மாவீரர்” எனப்படும் 17ஆவது நூற்றாண்டின் ஓவியர் ரெம்பிரான்ட் படைப்புகளைப் பார்க்கத் தீர்மானித்தேன். அத்துடன் ஒல்லாந்து காலனித்துவ அரசின் கீழ் இருந்த இலங்கை இந்தோனேசியா போன்ற நாடுகளைப் பற்றிய ஓவியங்களையும் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எனது மனத்திலிருந்தது.
ரெம்பிராண்ட் ஒரு பரோக் ஓவியர் . அவரது ஓவியத்தில் இருளும் ஒளியும் ஒன்றை ஒன்று விழுங்க போராடும். இத்தாலி கரவாஜிக்கு இணையானவர். அத்துடன் ஓவியங்கள் நாடகத்தன்மை எனப்படும் இயங்கு நிலையில் காணப்படும். அதாவது ஓவியங்களின் மூலம் நமக்குக் கதை சொல்வார். பல வேதாகம காட்சிகளை தனது ஓவியத்தில் கொண்டு வந்தவர்.
இவரது சிலவற்றில் எனது மனத்திலிருந்து அகலாத சில ஓவியங்களைப்பற்றி குறிப்பிடுகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பரப்பிய புனித போல் (St. Paul) உருவத்தைத் தனது உருவத்தின் பிரதியாக வரைந்துள்ளார். இதில் அவரது கையில் பாப்பரசு படிவங்களும் அத்துடன் மேலங்கியில் உள்ளே குத்துவாள் தெரிய வரையப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஓவியத்தில் எனக்குக் குத்துவாள் தெரியவில்லை . ஆனால், உற்றுப் பார்த்தபின் எனது மனத்திலிருந்து அந்த குத்துவாளை அகற்ற முடியாது – அவ்வளவு தத்ரூபமானது. அதேபோல் இவரது The night watch என்பது இவரது புகழ் பெற்ற ஓவியம் . இதை சுற்றி ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். இந்த ஓவியத்தின் சிறப்பு ஒரு இராணுவ கப்டன் தனது படையுடன் இரவு நேரத்தில் நகரத்தினூடாக வெளியேறுவது – இதில் சாதாரண மக்களையும் கொண்டுவந்துள்ளார்.
ஒரு இளம் பெண் கோழியை இடுப்பில் கட்டியபடி சமையலுக்கு எடுத்து செல்வது போன்ற யதார்த்தமான கிராமக் காட்சிகள் இரவில் தெருவிளக்கில் நடக்கிறது. முகங்களுக்கு வெளிச்சத்தை கொடுத்து, அந்த முகங்களிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பல நூற்றாண்டுகள் கழித்தபின் இன்னமும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது. பல நேரம் காத்திருந்து அந்த ஓவியத்தை எனது தொலைபேசியில் படம் பிடித்தேன்.
பிரபல ஓவியர் ரெம்பிராண்ட் மிக வறுமையில் வாழ்ந்து இறந்தார் . இவரது கல்லறைக்கு அடையாளமிடப் பணமில்லாது, அடையாளமிடாத கல்லறையில் புதைக்கப்பட்டவர் .
அதேபோல அங்கிருந்த ஓவியம் ரெம்பிராண்ட்டின் மாணவனாகிய டொரஸ்ட் வில்லம் (DROST, Willem) ரோமன் சிறையில் மரண தண்டனைக்கு காத்திருந்த ஒருவருக்கு உணவு கிடைக்காமல் பட்டினி போட்டார்கள். ஆனால், அவரது மகளை குழந்தையுடன் சிறைக்கு ஒவ்வொரு நாளும் வந்து பார்க்க அனுமதி கொடுத்தார்கள் . பட்டினி போட்ட சிறைவாசி உடல், உரம் குறையாமல் இருந்தார் . சிறைக்காவலர்கள் இறுதியில் மகளின் முலையில் இருந்து தந்தை பால் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து இறுதியில் அந்த சிறை வாசியை விடுதலை செய்தார். குழந்தையை அணைத்தபடி சிறைகம்பிகளுடாக பால் கொடுக்கும் அந்த காட்சி பார்ப்பவர்கள் மனதில் எக்காலத்திலும் மறையாது. அந்த ஓவியத்திற்கு ரோமர்களின் தயாளகுணம் (Roman Charity) எனப்பெயரிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் கல்கத்தா பற்றிய ஒரு ஓவியம் மற்றும் இந்தோனேசியாவின் ஜாவா ஓவியங்கள் இருந்தன. காலனிய நாடுகளில் இருந்து திருடிய பொருட்களை பெருமையுடன் பறைசாற்றும் லண்டன் மியூசியத்தில் இருந்து அம்ஸ்டர்டாம் மியூசியம் வித்தியாசமாக இருந்தது போல் எனக்குத் தெரிந்தது.
மிகவும் பெரிய மியூசியம்: எனக்குப் பல நாட்கள் பார்க்க முடியும் என நினைத்தபடி தயக்கத்துடன் வெளிவந்தேன்.