குறள் கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 02 … சங்கர சுப்பிரமணியன்

அண்ட வெளியில் உள்ளவை ஒன்றுடன் ஒன்று உரசித் தேய்வதில் ஆற்றல் உண்டாகிறது. இப்படியான தேய்தலில் பிறக்கும் ஆற்றலே தேய்வு>தேய்வம்> தெய்வம் ஆனது.
“வையத்தில் வழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற குறளில்
தெய்வம் என்பது மழையாக உறைகிறது.
தெய்வம் என்ற சொல்லுக்கு திருவள்ளுவர் பல பொருள்களைக் கூறியிருக்கிறார்.
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர்களை மழையாக வானுறையும் தெய்வம் என்கிறார்.
குறிப்பறிந்து நடந்து கொள்பவர்களை தெய்வம் என்கிறார். தென்புலத்தில் அதாவது குமரிக் கண்டத்தில் மரித்தவர்களை தெய்வம் என்கிறார். ஊழ்வினையை தெய்வம் என்கிறார்.
ஒருவருக்கு இக்கட்டான பொழுதில் உதவும் போது உதவி செய்தவரை நீ எங்க குலசாமி போல வந்து காப்பாத்துனீங்க என்று சொல்லும் வழக்கு பாமரமக்களிடம் உள்ளது. இங்கு உதவுபவர் தெய்வம் ஆகிறார். சில சமயங்களில் சிலர் கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்வதுண்டு. இதிலிருந்து என்ன தெரிகிறது. தக்க சமயத்தில் உதவுபவர்களை தெய்வமாக எண்ணும் பழக்கம் தமிழரிடம் மட்டுமல்ல எல்லா இனத்தவரிடமும் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
மக்களுக்கு மன்னன் தெய்வமாகிறான். பிள்ளைகளுக்கு பெற்றோர் தெய்வமாகின்றனர். ஆசான் மாணவனுக்கு தெய்வமாகிறார். தமிழ் சமுதாயம் தொடக்கத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்தது. ஆசீவகத்தின் மறைவிற்குப் பின் அதாவது ஆசீவகமெனும் பழந்தமிழர் வாழ்வியல் மரபை ஆதாயம் வேண்டியவர்கள் அழித்து ஒழிக்கும் வரை இருந்தது.
அதன் பின் பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு ஆண்வழிச் சமூகமாக மாறியது. ஆனால் இந்தியா முழுக்க ஆஜ்விகா என்ற பெயரில் பரவியிருந்த ஆசீவகத்தை தமிழ்நாட்டுக்கு வெளியே ஏழாம் நூற்றாண்டிலேயே அழித்து விட்டார்கள்.
நான் முன்னே சொன்னபடி உதவிசெய்து காப்பவர்களை கடவுளாக கருதப்பட்டதால் திருவள்ளுவர் காலத்தில் ஆண்வழிச் சமுதாயம் இருந்ததால் கணவன் கணவன் எல்லா வகையிலும் மனைவியை காத்ததால் மனைவியால் அவன் தெய்வமாக பார்க்கப் பட்டான்.
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்பதை திருவள்ளுவர் அறியாமல் இருந்திருப்பாரா? வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரம் பெண்ணுக்கான கருத்தை வழங்குவதாலோ பத்து குறட்பாக்களில் ஒரு குறளில் கற்பு என்று வருவதாலோ
பெண்ணுக்கு கற்பை வள்ளுவர் வரையறுப்பதாக எண்ணுவது தவறு.
கல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததே கல்வி, கற்பு என்பவைகள் எல்லாம். கற்பிக்கப்படுவது எதுவோ அதுவே கற்பு. கற்க கசடற கற்க என்ற குறளில் வரும் கற்பவை என்பது கற்பு+ அவை தான்.
கல்வியினால் பெறப்படும் அவையான
ஞானமும் கற்பாகும்.
ஒரு தாய் தன் குழந்தையின் மீதுண்டான அதிகப்படியான அன்பால் தன் இன்பங்களை எல்லாம் தவிர்த்து குழந்தையின் நலனும் மகிழ்ச்சியுமே தன் வாழ்க்கை என்று வாழ்கிறாள் என்றால் அதனை தாயடிமைத்தனம் என்று கூறமுடியுமா?
அதேபோலத்தான் தன் கணவன் மீதுள்ள அளவுகடந்த அன்பினால் இணைந்து வாழும் வாழ்க்கையைத்தான் வள்ளுவர் கொழுநன் தொழுதெழுவாள் என்கிறார். தாயன்பை எப்படி தாயடிமைத்தனம் என்று கூற இயலாதோ அதேபோல மனைவியின் அன்பை பெண்ணடிமைத்தனம் என்று கூறமுடியாது. அதேபோல் தொழுதெழுவாள்
என்பதை காலில் விழுந்து எழுவாள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று எந்தவித கட்டாயமுமில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை நான் பலதடவை பார்த்துள்ளேன். அப்படத்திற்கு சக்தி கிருஷ்ணசுவாமி என்பவர் வசனம் எழுதியிருப்பார். திரைக்கதையும் அவருடையதே. அவர் எழுதிய வசனத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஜாக்சன் துரை சொல்வதாக ஒரு வசனம் வரும்.
என் நினைவு சரியாக இருக்குமெனில் அந்தவசனம் இப்படித்தான் இருக்கும். “கிழக்கே உதிக்கும் சூரியன்கூட எங்களைக் கேட்டுத்தான் எழும், விழும்” என்பதே அந்த வசனம். இதன் பொருள் பிரிட்டிஷ் அரசைக் கேட்டுத்தான் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் என்று நேரடியாகப் பொருள் கொள்ளமுடியுமா?
அதன் பொருள் என்னவென்றால் பிரிட்டிஷ் அரசு ஆளும் நாடுகளில் ஏதாவதொரு நாட்டில் சூரியன் உதிக்கும் அதேபோல் ஏதாவதொரு நாட்டில் சூரியன் மறையும் என்பதே ஆகும். யாரோ ஒருவர் குதிரைக்கு ஒருமொழியில் குர்ரம் என்று கூறியதை வைத்துக்கொண்டு யானைக்கு அர்ரம் என்று பொருள் கொண்டால் எப்படி?
குறளில் மறைந்து நிற்கும் பொருளை எண்ணிப்பார்க்க வேண்டும். அமாவாசை இரவன்று வானில் சந்திரன் தோன்றுவான் என்று சொல்லி அரசனுக்கு அபிராமி பட்டர் தவறுதலாக சொல்லிவிட்டார். இதனால் சினமடைந்த அரசன் சந்திரனை வானில் காட்டியே ஆகவேண்டுமென ஆணையிட்டான்.
பட்டரும் அந்தாதி பாடி அமாவாசையன்று முழு நிலவை வரவழைத்து அரசனுக்கு காட்டினார். இதை கதாகாலட்சேபத்தில் சொல்லப்படும்போது ஹரஹர மகாதேவா என்று கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள் ஒரு பெண் பெய்யெனப் பெய்யும் மழை என்று திருக்குறளில் சொன்னால் அதை கற்புடன் தொடர்பு படுத்துவார்கள்.
வானில் இருப்பதோ ஒரே சந்திரன். அது பூமியின் ஒருபக்கம் ஒளிரும்போது மறுபக்கம் இருளாயிருக்கும். இங்கு இருளாயிருக்கும் அமாவாசையில் திடீரென அபிராமி பட்டர் அந்தாதிபாடி சந்திரனை கொண்டு வந்தால் மறுபக்கம் திடீரென சந்திரன் மறைவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கமாட்டார்களா? என்றெல்லாம் எண்ணிப்பார்க்க மாட்டார்கள்.
ஒரு மனைவி பெய்யெனப் பெய்யும் மழை என்றால் அது சாத்தியப்படுமா என்று எண்ணியும் பார்க்க மாட்டார்கள். சொல்லப்படாத கற்பையும் கொண்டுவந்து குழப்புவார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் சொன்ன வள்ளுவன் பெண்ணடிமைத்தனத்தை எவ்வாறு ஏற்றிருப்பான்?
பதினெண்கீழ்க்கணக்கு நூலான திரிகடுகத்தில் வரும் 96வது பாடலில்,
“கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீ
நல்லவை செய்வான் அரசன் இம்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை” என்கிறார் திரிகடிகத்தை இயற்றிய நல்லாதனார்.
இச்செய்யுளுக்கு பொருள் கணவனின் குறிப்பறிந்து நடக்கும் மனைவி விரதங்களை செய்யும் முறைப்படி செய்யும் தவசி மற்றும் குடிமக்களுக்கு நன்மை செய்யும் அரசன் இம்மூவரும் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழை போன்றவர்கள் அல்லது இவர்கள் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பதாகும்.
இந்த பின்னணியில் நின்று,
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்ற குறளின் பொருளைப் பார்பப்போம்.
வானுறையும் தெய்வமான உயிர்களுக்கு எல்லாம் உயிர்கொடுக்கும் மழையை
போற்றாது தனதை கணவனை போற்றி இணைந்து வாழும்போது பெய்ய வேண்டிய
நேரத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யும் என்பதே பொருள்.
இக்குறளில் தொழு என்பதற்கு வழிபடுதல் அல்லது வணங்குதல் என்று பொருளல்ல. மாறாக இணைதல் அல்லது சேர்தல் என்றே பொருள் கொள்ளவேண்டும். அடுத்ததாக இக்குறள் மழையோடு சம்பந்தப் பட்டிருப்பதால் தெய்வத்துக்கு வானுறையும் தெய்வமான மழையையே எடுத்தாளப் பட்டுள்ளது. இதில் கற்பு எங்கே வந்தது என்பதை நினைக்கையில் வியப்பாயுள்ளது.
(தொடரும்….)