வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் “யாதுமாகி” …. ( இரண்டாம் பாகம் ) …. நடேசன்.

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு அடையாளம் காண்பிக்கப்பட்ட பெண் படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் ! !
நடேசன்.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் நண்பர் முருகபூபதி, இங்கு ஒரு காலத்தில் நான் வெளியிட்ட உதயம் மாதப் பத்திரிகையின் வெளியீட்டிலும் விநியோகத்திலும் இணைந்திருந்தவர்.
இங்குள்ள கடைகளுக்கு உதயம் பத்திரிகையை முருகபூபதி விநியோகித்த போது இவரைக்கண்ட ஒருவர்,
“ அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பும் நீர் இந்த வேலையை விடவில்லையா ? “ என்று கேட்டதாக எனக்கு முருகபூபதி சொன்னார். அவரது பெயரை அறிந்தபோது, அவர் உணவுகளை வீட்டில் தயாரித்து கடைகளுக்குக் கொடுக்கும் தொழில் செய்பவர் என அறிந்தேன்.
வயிற்றுக்கு உணவு கொடுப்பவர், அறிவை வளர்க்கப் பத்திரிகையை விநியோகிக்கும் ஒருவரைப் பார்த்து இப்படிக் கேட்டிருக்கிறாரே! என ஆச்சரியப்பட்டேன்.
“ பத்திரிகையை விட எனக்கு வேறு என்ன தெரியும்? “ என முருகபூபதி மேலும் என்னிடம் கூறினார் .
முருகபூபதி தற்போது அனைத்துலக பெண்கள் தினத்தில் ஒரு பத்திரிகையாளராக இந்த பெண் ஆளுமைகளை யாதுமாகி இரண்டாம் பாகத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பல வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச்சம்பவத்தை நினைவுபடுத்தியவாறு இந்நூலில் நான் வாசித்துப் பெற்ற அனுபவத்தை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இந்த நூலில் லண்டனில் வதியும் பூங்கோதை என்ற கலா ஶ்ரீரஞ்சனை, தான் சிறுவயதில் சந்தித்த புவனேஸ்வரி ஆசிரியையின் மகளாகவும், பின்பு “நிறமில்லாத மனிதர்கள் ” என்ற
சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியராக ஒரு படைப்பாளியாகவும் நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்.
ஒரு பத்திரிகையாளரின் வேலை அதுவே. சமூகத்தில் முக்கியமானவர்களை எமக்கு கைகாட்டி விடுவதே அவர்களின் பணி. அத்துடன் அவர்களது கடமை முடிந்து விடுகிறது. மேற்கொண்டு என்ன செய்வது ? என்பது சமூகத்தைப் பொறுத்தது.
கலா ஶ்ரீரஞ்சனது இலக்கிய விடயங்கள்பற்றி நான் வேறு ஒரு இடத்தில் பேசவேண்டும்.
இங்கே நான் கலாவின் தனித்தன்மையைப்பற்றிப் பேசவேண்டும். இதுவே இங்கு முக்கியமானது . பலரது மனங்களில் அது பதியவேண்டும் என்பதும் எனது விருப்பம்.
நமது சமூகம் மற்றவர்களது துன்பத்தை உள்வாங்குவது குறைவு . ஏதோ ஒரு விதத்தில் தனது அதிர்ஸ்டத்தை, பலத்தை அல்லது தனது உழைப்பை தனக்குத்தானே மெச்சிக்கொள்ளும். மிகவும் சிலரே தாம் நடந்த பாதையில் , காலில் ஒரு கல்லுத் தடக்கி இரத்தம் வரும்போதும் அந்த இடத்தில் நின்று, அந்தக் கல்லை எடுத்து பாதையிலிருந்து ஓரத்தில் போடுவதுடன், தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி மற்றவர்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டுவர். இந்த உன்னதமான விடயத்தை செய்பவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள்
உலக வரலாற்றில் இப்படி செய்தவர்களாலேயே உலகம் முன்னே செல்கிறது . அப்படியானவர்கள் நூற்றுக்கு ஒருவரே. அப்படியானவர்களில் ஒருவர்தான் கலா ஶ்ரீரஞ்சன். புற்றுநோயை எதிர் கொண்டவர்களை நோக்கி, அவர்கள் அதை எப்படி எதிர்கொள்வது எனத் தனது அனுபவத்தைப் புத்தகமாக வெளியிட்டுள்ளவர் கலா.
புற்றுநோய் மற்றைய நோய்கள்போல், உடலை மட்டும் தாக்குவதல்ல. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களது மனம் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மனிதர்களின் மனம், மாடு சூப்பிய பனம்பழமாக்கி விடும். இந்த நிலையிலிருந்து வெளியேவந்து மற்றவர்களுடன் உறவாடுவது இலகுவான விடயமல்ல. இதை நாம் புரிந்தால், கலாவின் செய்கையை மெச்சமுடியும் .
இந்த நூலில் கவிஞர் அனார் பற்றிய பதிவும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலக்கிய வறுமையை பொறுக்காது நான் அடிக்கடி சொல்லும் விடயம், “ சரஸ்வதி அகதி அந்தஸ்து கேட்டு, கிழக்கிலங்கையில் அடைக்கலம் அடைந்துவிட்டார்.”
அந்த வசனத்தை சொல்லும்போது எனக்கு நினைவுக்கு வருவது கவிஞர் அனாரே. எனது வார்த்தைகள் ஒரு படிமம்தான். இதற்கு மதச்சாயம் பூச வேண்டாம்.
அனார் கிழக்கிலங்கை தந்த படிமக் கவிஞர். அவரது கவிதைகள் தன்னுணர்வானவை. மற்றவர்களது உணர்வை பார்க்காது, தன்னுணர்வாக வெளிப்படுவதால் பலர் இதை குறையாக நினைப்பார்கள். ஆனால், உண்மையில் உலகத்தின் அரைவாசி மனிதர்களின் உணர்வுகள் அப்படித்தான் இருக்கும். அதாவது பெண்கள் அனைவருக்கும் இது பொதுவானதாகும். இது நமது சமூகத்தில் தொழிலாளர்கள், பாலஸ்தீனியரகள் ஏன் இலங்கை போரையும் அகதிகளையும் பற்றி எழுதிய கவிஞர்களிலும் கூடிய தொகையை அனார் தனது பாடுபொருளாக்கியவர் அனாரின் வார்த்தைகள் அருட்டும் உள்ளுணர்வு, தேசங்களது எல்லைகள், இனங்களின் வரையறைகள், மனிதர் நிறங்களின் வண்ணக்கலவைகள் ஏன் மதங்களையும் தாண்டி நம்மைத் தொடுகிறது.
ஆனால் என்ன?
நமது தமிழ் கவிதை விமர்சகர்கள் , மொழியின் அழகை மட்டும் பார்த்துவிட்டு அகன்று விடுவார்கள். தற்காலத்தில் கவிதையில் உள்ளடக்கமே முக்கியம் என்பதை சிலரைவிட மற்றவர்கள் கவனிப்பதில்லை.
உதாரணமாக :
என் உலகமே
துயர்களைத் தாங்கிய பாலைவனம்
வாழத் துடிக்கும் நானோ
விடியலை விழுங்கிய மலட்டு இரவுபோல்
மௌனமாய் மல்லுக்கட்டுகிறேன்”
———–
“ என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது”
“ஓநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை”
”வேட்டையாடப்பட்ட இரையை
சத்தமின்றி புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்”
அனாரின் இந்த சில வார்த்தைகளை சிறிது உங்களுக்குள் சொல்லி பாருங்கள்.
எழுத்தாளர் தேவகி கருணாகரனைப் பற்றி இந்த நூலில் முருகபூபதி விபரமாக எழுதியுள்ளார் . தேவகியின்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய காரணத்தால் அவரது கதைகளின் தன்மை, குடும்ப வரலாறு என்பன விரிவாக உள்ளது . அவற்றை மீண்டும் நான் சொல்லத் தேவையில்லை
முருகபூபதி சொல்லாத இரு விடயங்களை நான் இங்கு சொல்லவேண்டும்.
தேவகியின் கதைகள் பல சமகால சம்பவங்களையும் பத்திரிகையில் வரும் செய்திகளையும் தழுவியபடி செல்கின்றன.
சிறிய விடயங்களையெல்லாம் அவதானமாக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து தனது கதைகளைப் பின்னியிருக்கிறார் .
உதாரணமாக அவரது ஒரு கதையில் கஞ்சா வளர்ப்பதைப் பற்றி விவரிக்கிறார். அதை வாசித்தபின் நானும் வளர்த்தாலென்ன என நினைத்தேன்.
“15 லிட்டர் தொட்டியில் விரைவாக வளர்வதற்கு உயர் சோடியம் விளக்குகள், அதாவது சூரியக் கதிருக்கு ஒப்பான விளக்குகளை உபயோகித்துள்ளார்கள். இந்த விளக்குகள் முதல் இரண்டு மாதத்திற்கும் 18 மணி நேரமும், பின்பு பன்னிரண்டு மணித்தியாலமாக மாற்றியதும் , கஞ்சா செடிகள் பூக்கத் தொடங்கும். மூன்று மாதத்தில் அறுவடை செய்வார்கள். இப்படி வருடத்துக்கு, மூன்று அல்லது நான்கு அறுவடைகள் செய்வார்கள் . பூக்கள், காய்கள், இலைகளை வீட்டில் காயவைத்து, கை இயந்திரத்தில் அரைத்து கனபெஸ் தூள் தயாரித்திருக்கிறார்கள். அந்த யந்திரத்தை இப்போது வண்டியில் ஏற்றுகிறார்கள் “ என முடிகிறது தேவகியின் கதை.
தேவகியின் சிறப்பு, ஒரு விதத்தில் கதைகளுக்கு விவரங்கள் சேர்ப்பது மட்டுமல்ல. பிரபல எழுத்தாளர்கள், தேவகியைப் போன்ற நிலையில் எழுதுவதை மட்டுமல்ல, வாசிப்பையும் நிறுத்திவிடுவார்கள். தேவகி கருணாகரன் எங்கள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உப தலைவராக இணைந்திருப்பவர். அவர் மேலும் பல கதைகளை எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்.
எழுத்தாளர் சியாமளா யோகேஸ்வரனை அடையாளம் காண்பிக்க, முருகபூபதி அவர் எழுதிய கானல் நீர் என்ற நாவலைப் பற்றி விபரித்து குறிப்பிட்டுள்ளார். நான் கானல் நீர் நாவலை இதுவரையில் வாசிக்கவில்லை. அத்துடன் அவரைச் சந்தித்து பேசியதுமில்லை. ஆனால் , அவரது புத்தகங்களின் வெளியீடு நடந்தபோது அவசரமாகச் சென்று அவரது விடியல் என்ற சிறுகதைத் தொகுப்பையும் மெல்லிழைகள் என்ற நாவலையும் வாங்கிக்கொண்டு அவசரமாக வந்துவிட்டேன்.
எனது அம்மா சமைக்கும்போது அகப்பையில் சோற்றை எடுத்து பதம் பார்ப்பதுபோல் அவர் எழுதிய “நதிகளின் பாதையில் “ என்ற சிறுகதையிலிருந்து, அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இந்தக்கதை தற்காலத்தில் அவுஸ்திரேலியா, கனடா முதலான தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் யதார்த்த நிலையைச் சொல்கிறது. இந்தக் கதையில் ஒரு தாயின் அங்கலாய்ப்பு கதையின் பக்கங்களில் வழிந்தோடி, அதனை வாசிக்கும்போது ஈரம் நம்மில் ஒட்டுகிறது . மகன் திருமணம் செய்த பின்னரும் ‘அவனது உறவின், தொப்புள் கொடியை அறுக்காது ‘ வாழ விரும்பும் தாயின் பாத்திரத்தின் மூலம் இந்தக் கதை சொல்லப்படுகிறது.
கதையில் மருமகளாக வரும் சுதாவை நீங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.
தாயின் மேல் மகன் வைத்திருக்கும் அன்பைத் தனக்குப் போட்டியாக நினைப்பதுடன், தனது பிள்ளைகளை வித்தியாசமாக வளர்க்க முனைகிறார் சுதா. அது சில நேரங்களில் நாய்க் குட்டியைப் பழக்குவது போல் குழந்தைகளின் இயற்கையான இயல் பூக்கத்தைத் தடுப்பதாகிறது. குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்கும் பேரன் பேத்தியுடன் பழகுவதும் , அவர்கள் அன்புடன் உரிமை எடுத்துக் கொள்வதும் தாய்க்குப் பிடிக்காத நிலை. இங்கு பல குடும்பங்களில் நடக்கிறது. இப்படியான ஒரு விடயம் இலங்கை – இந்தியாவின் பாரம்பரிய நடைமுறையில் இருக்காத விடயம். அங்கு பாட்டன்- பாட்டியே அதிகாரத்தின் மையமாகும். இங்கே அவர்கள் மூன்றாம் மனிதர்கள் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த உறவுகளின் நெருடல் இங்கு நம்மையும் கவனத்தில் ஈர்க்கிறது.
யாதுமாகி நூலில் இடம்பெற்றுள்ள மற்றவர் சூரியகுமாரி ஶ்ரீதரன் வீரகேசரி , சுடரொளி முதலான பத்திரிகைகளில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். மித்திரன் வாரமலரிலும் ஆசிரியராக அவர் இருந்தவராக இந்த நூலில் முருகபூபதி சொல்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பின்பு , கிழக்கிலங்கை பல்கலையில் பணி, பின்னர் பத்திரிகைத் துறையில் விசேட கல்வி பெற்றவர் என்பனவற்றையும்
சொல்லி, அவர் ஒரு தீவிர வாசகர் என அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும் இலக்கியம் மற்றும் பெண்ணியம் போன்ற துறைகளில் தொடர்ந்து இயங்கியவரென முருகபூபதி எழுதுகிறார். பிற்காலத்தில் துபாயில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தார் என்பதும் தெரிகிறது எனது முகநூலில் அவர் இருப்பதால், அவர் தனது வாசிப்பு அனுபவம் பற்றி எழுதிய புத்தகங்களை அவதானித்துள்ளேன்.
தேவகௌரி சுரேனை அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோதும் மட்டுமல்ல, இலங்கையிலும் சந்தித்துள்ளேன் . பல காலமாக வீரகேசரியிலிருந்துவிட்டு பின்பாக தினக்குரல் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தவர். பிற்காலத்தில் ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சி பாடசாலையில் விரிவுரையாளராக இருந்தவர்.
முதலில் குறிப்பிட்ட நால்வரும் படைப்பிலக்கியவாதிகள். அடுத்துவரும் இருவர் பத்திரிகையாளர்கள் . இலங்கையில் இலக்கியவாதிகளுக்கு அதிகம் பிரச்சினைகள் இருப்பதில்லை. காரணம் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு. படித்தவர்களுக்கும் படிமம், உட்பொருட்கள், நகைச்சுவை எனப் பல விடயங்கள் புரியாததால் ஆபத்தில்லை.
பத்திரிகையாளர் நிலை அப்படியல்ல. விடயம் தெரிந்துவிடும். இயக்கத்தினர், அரசியல்வாதிகள், பாதாள உலகத்தில் இருப்பவர் வரை பத்திரிகை வாசிப்பார்கள். இதனால் எமது பத்திரிகையாளர் அடக்கி வாசிப்பார்கள். அடங்கியே போவார்கள், இல்லாதபோது பலமானவர்கள் பக்கத்தில் நின்று சங்கை முழங்குவார்கள். அது அவர்கள் தவறில்லை.
எனது குறை, என்னவென்றால், மேல்நாட்டில் ஏர்ணஸ்ட் கெமிங்வே போன்றவர்கள் ஆரம்பத்தில் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள். பின்னர் முக்கிய எழுத்தாளர்களாக கவனிக்கப்பட்டவர்கள். அது நமது தமிழ்ச்சூழலில் அதிகம் நடக்கவில்லை என்பதே . அதற்கு நமது சூழலும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
இப்படியாகப் பல பெண்களை தனது நூலில் நமக்கு அடையாளம் காட்டிய நண்பர் முருகபூபதிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) தற்போது அமேசன் கிண்டிலில் கிடைக்கிறது. தரவிறக்கம் செய்து இதர பெண் ஆளுமைகளைப்பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
—-0—
எனது சிறுகதைகளையும் என் எழுத்தைப் பற்றியும் மிகவும் சிறப்பாக விமர்சித்த எழுத்தாளர் நுயல் நடேசனுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.